Saturday, March 31, 2012

குதிரை(க்கொம்பு) யாவாரம்      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!

தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம்.

ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.

      ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது. அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.

        கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள் அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன் காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.

        அய்யோ..அடித்தல் திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில் விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!

      நம் மகன் அந்தப்பள்ளியில் படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.

எப்போது நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.

வரும் ஞாயிறன்று நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!

ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம் அலைமோதியது.

நம் குழந்தைக்கு எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.

இது என்னடா சோதனை என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா? அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில் நாங்கள் காட்சியளித்தோம்.

அப்போதும் மனம் தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.

என் புத்திக்கு அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.

அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..

ரெண்டு நாள் கழிச்சு சொல்றேனே….!

Thursday, March 22, 2012

ஓமப்பொடி # 4


               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.com இணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!


        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************

Saturday, March 10, 2012

பெண்களே.. பெண்மையே! வாழ்க நீங்கள்!


 

எங்கள் வாழ்வில் அர்த்தம் சேர்த்து, எண்ணங்களில் ஏற்றம் சேர்க்கும்

பெண்மையே , பெண்களே வாழ்க நீங்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் (2008, 2009, 2010, 2011) பட்டியலில் உள்ளவர்களுக்கும்....

இந்த ஆண்டு நட்புகளாய் வந்த,

லஷ்மி ராமகிருஷ்ணன்
ஷாரதா
ஷ்ருதி
ஷ்ரயா


கவிஞர் பத்மாவதி
ஸ்ரீ புவனா
ரேவதி
மணிமேகலை
ப்ரியா
சௌம்யா
கீர்த்தனா
சத்யா
சங்கீதா
கல்பனா

உமா பத்மநாபன்
ராஜி
ஆகியோருக்கும்..
இணைய நட்பாய்ப் பூத்த

கயல்விழி
ப்ரியா முரளி

ஆகியோர்
எந்நாளும் இன்பமாய், ஆரோக்கியமாய், இனிமையாய் வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !! 

( பதிவை… முன்னரே பதிவேற்றி தேதி மாற்றி schedule செய்ததின் விளைவு!! ஒரு நாள் தாமதமாக வெளியாகிறது…)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...