Sunday, November 29, 2015

ஏமாற்டெல்!


இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...!
கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்..
பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது.

நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள்.


இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்.

அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது.

அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன்.

இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் கழியுங்கள் என்றேன். உடனே ஏதோ கணக்குப்போட்டு, என் கேள்விகளுக்கு பதிலும் சொல்லமுடியாமல், 42 ரூபாயை கழித்துவிட்டார்.

ஆக..
நேரடியாகக் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தால், இவனிடம் இப்படி காசை அடி என்று ஒரு நிர்வாகமே செயல்படுகிறது !!

இந்த 43 ரூபாய்க்கு இத்தனை நேர விரயமா? இந்த நேரத்தில் உங்கள் வேலையில் 1000 ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என்று குதர்க்கமாகத் தோன்றும் !!

இப்படி 43 ரூபாய்களாக கொள்ளை கொடுக்காமல் இருந்தாலே போதும். இவர்களுக்கும் கொடுக்க சேர்த்து சம்பாதிக்க வேண்டியிருக்காது. !!

யார் நம்மிடம் கொள்ளை அடித்தாலும் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பதால்தான்.. நாமும் யாரிடமும் கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் எல்லா இடத்திலும் புரையோடிப்போயிருக்கிறது.

200 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்கன்னு கேட்பவர்கள் அதிகமானதுக்குக் காரணம்.. எங்கெங்கு நோக்கிலும் இதுபோன்ற அடாவடி அல்லது அறிவாளித் திருடர்கள் அதிகரித்தால்தான்!

விலைவாசி எப்படி ஏறுகிறது என்று இப்போது புரியும் என்று நினைக்கிறேன். வேறு யாரும் ஏற்றவில்லை. நாம் கேள்வி கேட்கவிடாமல் வாங்குகிறோம். கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம்.

மீண்டும் செல்வேந்திரன்தான் நினைவுக்கு வருகிறார் !

“கண்டக்டரிடம் ஒரு ரூபாய்க்குச் சண்டை போடுபவனை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.. பாவம்! உழைத்துச் சம்பாதித்தவனாய் இருப்பான்!” என்ற ரீதியில் எழுதியிருப்பார்.

கொஞ்சம் விழிப்புணர்வுடன் கேட்போம்..!! நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றன ! ‪#‎கேட்டால்கிடைக்கும்‬

Sunday, November 22, 2015

சென்னைப் பிழை!


 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !!
அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை!

சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... !!  சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.

தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.

எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.
 
ஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.
ஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.


இங்கு?

இதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை!

சென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்!  சென்னைக்காரர்கள் என்று இல்லை!! 
சந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது? என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்?
 
இந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான்.  சென்னைவாசியாக இருக்காது!

டிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.!

இந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... !! என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்!
தெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் !

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் !! 92% பேர் சென்னைவாசிகள்தான் !! வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் !!  இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று  உணர்ந்துகொள்வோம்.

ஏரியாக இருந்தால் என்ன? அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம். 

நாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.

இங்கு புலம்புபவர்கள்தான் அதிகம்! ஆனால்,  புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை!

இந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே?.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.

சென்னை ஒரு அற்புதமான நகரம்..!! அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.

வாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.

இனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.

இந்த ஊரை நேசிப்போம்.  சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்!


பின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே ? நீ என்ன செஞ்ச ? என்று நினைப்பவர்களுக்காக ....

இதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு,  நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
நன்றி !

Tuesday, November 17, 2015

புதிய நூல்.. !

பொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார்.  ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு..

கொஞ்சம் நேர முதலீடு,
பல வல்லுனர்களின் சந்திப்புகள்
பல கல்வியாளர்களின் உள்ளீடு

இவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்)

பின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு :
இதோ ..
இணைப்பு


https://gumroad.com/l/doQz#

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...