பொங்கல் - வாழ்த்து
ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள். அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும். வேறொரு வ ிதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும். பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்! எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இரு...