Tuesday, February 26, 2013

ஓமப்பொடி # 9    


       உலகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால், நமது இரத்த அழுத்தம், அளக்கும் கருவியின் பாதரசம் வெடித்து வெளிவரும் அளவுக்கு எகிற வைக்கிறது.

     பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, பெட்ரோலிய நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களின் சிரமத்தை வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு, தனக்கான செலவினங்களில் ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ளாமல், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அலுவலர்களுக்கான சலுகைகளை மட்டும் சிறிது சிறிதாக ஏற்றி வருகிறது. இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, மத்திய நிதி அமைச்சகத்தில், மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
    பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கும்போதும், எண்ணெய் நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலைவாசியை வைத்து, விலையை மாற்றும்படி அரசை நெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால், அரசு அவர்களது பெட்ரோலிய வரி வசூலில் இருந்து ஒரு பகுதியை மானியமாக அளித்து, சமாளித்திருக்கிறார்கள். இப்போது, தனது வரி வசூலில் ஒரு பைசா கூட தரமுடியாது என்று அரசு முடிவெடுத்ததால்தான், எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இவையும் முழுமையான தனியார் நிறுவனங்கள் கிடையாது. ஆகவே அரசு சார் நிறுவனங்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டே , இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். இதில் இரண்டு தரப்புமே கயவர்கள்தான் என்றார்.

இதில், ஹைலைட் என்னவென்றால், கடந்த மாதத்தில், எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு அகவிலைப்படிச் சலுகைகளும் , பயணப் படிகளும் அதிகரித்திருக்கிறார்களாம். அதற்கான நிதியாக சுமார் 12.4 கோடி ரூபாய் ஒதுக்கிக்கொண்டு நிதி அமைச்சகத்தில் அவர்கள் கொடுத்திருக்கும் காரணம்..

”பெட்ரோல் ,டீசல் விலை உயர்வினால், பயணப்படி அதிகரிக்கிறோம்!”

அட நாசமத்துப் போவாய்ங்களா!!

 ***************************************************************************

விஸ்வரூபத்தைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை? கமல் படத்தில் வேலைபார்த்தவர் என்ற அடக்கமா? அல்லது பிடிக்கவில்லையா? அதைப்பற்றி எதுவும் குறையாக எழுதிவிடக்கூடாது என்ற பயமா? பாராட்டி எழுதினால், மற்றவர்கள் உங்களை ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்ற ஐயமா? என்று சில நண்பர்கள் மெயிலிலும், நேரிலும் கேட்டுவிட்டார்கள்.

     எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதனை விவரித்து எழுதத் தோன்றவில்லை. தோன்றினால் எழுதுவேன். அவ்வளவுதான்! தசாவதாரத்துக்கும் நான் விமர்சனம் எழுதவில்லை. மேலும், கமலஹாசனையும், அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருப்பதாக உணர்கிறேன். அவரது தொழில் அறிவும், அதன்மீது கொண்ட ஈடுபாடும் எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவருடன் இரண்டு நாட்கள் வேலைபார்த்தால் அது உண்மையில் தெரியவரும். அவரது படைப்பை வைத்து காவடி ஆடுபவர்களுக்கு, அவரது தொழில் பக்தியை, அடுத்தவர்களைப்பற்றி அதிகம் மூக்கைச் சொறிந்துகொள்ளாமல், தன் வேலையில் கவனமாக இருப்பதைக் கற்றுக்கொள்ளச் சொல்லவேண்டும் என்று ஆசை! சினிமாவில், மேன்மையும் , மேலாண்மையும் தெரிந்த மிகச் சொற்பமான மனிதர்களில் கமல் முதன்மையானவர் என்பது என் தாழ்மையான கருத்து!

இந்த விஷயத்துக்காக, ரூம் போட்டு , என் மூளைக்குள் அமர்ந்து , அதற்காக யோசித்த நண்பர்களின் அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் நினைத்து பெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறேன். :)

************************************************************************

இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த நண்பர்கள் சந்திப்பில்,  இன்றைய மருத்துவத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அதன் அவலங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அன்று காலை 10 மணிக்கு விஜய் டிவியில், ‘என் தேசம் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியில், நண்பர் கோபிநாத் மருத்துவத்துறையின் அவலங்களைப் புட்டுப் புட்டு வைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு மருந்தின் தயாரிப்பு, வியாபாரத்துக்குப் பின்னால், எப்படி நோயாளிகளிடம் மருத்துவர்கள் காசு பிடுங்குகிறார்கள் என்று சொன்னார்கள். அமீர்கானின் ‘சத்யமேவ ஜெயதே’ யின் தமிழ் வடிவம்தான் என்றாலும், மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாகப் பட்டது. இதுபோன்று சமூகத்தின் அவலங்களைப் பற்றி அலசி, விழிப்புணர்வு தூண்டும் நிகழ்ச்சிகளைக் கொடுக்கத் தொடங்கினால், தொலைக்காட்சி என்றாலே சினிமாதான் என்ற எண்ணம் இன்றைய குழந்தைகளுக்கு வருவதைத் தவிர்க்கலாம். இன்னும் பேசுவதற்கு நிறைய தலைப்புகள் இருக்கின்றன.

கல்வி அராஜகங்கள், வேலைப் பிரச்னைகள், தொழில் சிரமங்கள், குடும்ப அமைப்பின் தோல்விகள் என்று சொல்லிக்கொண்டே போகமுடியும். அனைத்தையும் நிச்சயம் தொடுவார்கள் என்று நம்புவோம். அதன் தயாரிப்பு நிறுவனமான மெர்குரி நெட்வொர்க்கின் திரு.சாய்ராம் மிகச் சிறந்த சிந்தனையாளர். அவர்போன்ற மனிதர்கள் மீடியாவில் இருப்பதால்தான் ஓரளவுக்கு நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன. என் தேசம் என் மக்கள் குழுவுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !

*********************************************************************

    ஒரு சாஃப்ட்வேர் நண்பன் சொந்தக் கிராமத்துக்கு ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருக்கிறான்..

ஒரு பெரியவர் ‘என்னடா வேலை பாக்குற?’ என்று கேட்டிருக்கிறார்.

”சாஃப்ட்வேர்” என்றிருக்கிறான்.

“ம்..சரி” என்று சொன்னவர்.. கொஞ்ச நேரம் இவனிடம் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வந்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் அந்த ஊரில் பல ஆண்டுகளாக சிற்றுண்டி விடுதி வைத்திருக்கிறார் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்!

விழா முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது, அவரது கடையின் முன்னால்தான் பேருந்துக்கு நிற்கவேண்டும்.

அப்போது அவர் அவனிடம் வேகவேகமாக ஓடிவந்து கேட்டிருக்கிறார்..

”தம்பீ! ஏதோ சாப்டுவேரு கடைல வேல பாக்குறேன்னியே!... அங்க ஒரு நாளைக்கு எத்தன சாப்பாடு ஓடும்?”

செத்தான் சிவகிரி!  :)
Monday, February 18, 2013

உன்னைக் காணாது நானிங்கு..     எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!!

“ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ”

பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்!

     கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன்  வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில்  ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன்.  கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே  நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது.

பிறகு.. மாசறு பொன்னே வருக! எனக்கு மிகவும் பிடித்த பாடலானது. அதைக் காட்சியாகப் பார்க்கும்போது தேர்த் திருவிழாவிற்கு ஆகப்பொருத்தமான பாடலாக அமைந்திருந்தது. அதுவும் ’நீலியென, சூலியென தமிழ்மறை தொழும்…என்று முடித்து மீண்டும் மாசறு பொன்னே வருக என்று தொடங்கும் இடம் நம்மை ஒரு அருவியில் குளிப்பாட்டி, தலையும் துவட்டி விடும்.

     பிறகு இடையில் பல படங்கள் வந்திருந்தாலும், ‘சண்டியர்’ எனப்பட்ட விருமாண்டியில்.. ‘உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை’ !! அது.. ‘இஞ்சி இடுப்பழகா’ வின் தம்பி போல் இருந்தது. அதிலும் இசையராஜாவின் ஆதிக்கம்தான். அதிக வாத்தியங்கள் இல்லாமல் ரசனையான வார்த்தைகளால் செதுக்கிய பாட்டு அது! அந்தப்படத்திலும் ’காண்டாமணி ஓசையில’ என்ற சுடலைமாடனுக்கான பாடல் ஒருவித கிராமியத்துடன் பக்தியும் இணைந்து ஈர்ப்பைக்கொடுத்திருந்தது.

     தசாவதாரத்தில் , இரண்டு பக்திப் பாடல்கள். ‘கல்லை மட்டும் கண்டால் மற்றும் முகுந்தா , முகுந்தா… இரண்டுமே அருமையாக இருந்தது. அந்தப்பாடல்கள் பொதுவெளியில் உலா வருவதற்கு முன்னரே நான் கேட்டிருக்கிறேன். கல்லை மட்டும் கண்டால் கேட்டவுடனேயே வேறெங்கோ இந்த இசையைக் கேட்ட நினைவு வந்தது. பின்னர் இணையத்தில் தேடியதில், இதே ராகத்தில் ஒரு மலையாளப்பாடல் வந்திருந்தது. கமல் சாருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தேதான் அனுமதித்திருப்பார் என்று பேசிக்கொண்டிருந்தோம்.  ஆனாலும் , ‘ராஜல்ஷ்மி நாயகன் சீனுவாசன் தான்.. சீனுவாசன் சேய் இவன் விஷ்ணுதாசன் தான்.. நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ,..ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்’ என்று கவிஞர் வாலி சூசகமாக கமலையும் சொல்லி, தன்னையும் பெருமைப்படுத்திக்கொண்டதை எண்ணி சிலாகித்துக்கொண்டோம்.

     முகுந்தா..முகுந்தா..எல்லோரையும் மயக்கிய பாடல்.! அதைக் காட்சிப்படுத்திய விதத்திலும் கலக்கியிருந்தார்கள். தசாவதாரம் வெளியான பிறகு  கிருஷ்ண ஜெயந்திகளில், வானொலியில் அந்தப்பாடலும் ஒலிபரப்புகிறோம். ‘உன் அவ தாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்’ என்று தமிழை உடைத்துப் பயன்படுத்தி மிகவும் வியக்கவைக்கும் பாடலாக அது அமைந்துவிட்டது.

     உன்னைப்போல் ஒருவன் படத்தில் ‘அல்லா ஜானே’! உயிரை உருக்கியது. அதில் கமலின் குரலும் , வார்த்தைகளின் ஆழமும் உண்மையிலேயே கேட்கும் மனதுக்குள் சிலீர்க் கத்தியாக ஊடுருவியது. தன் குரலையே கொஞ்சம் கரகரவென நசுக்கிக்கொண்டு , சுவாசக்குழாய் வழியாகப் பாடியிருப்பார். Prelude எனப்படும் முன்னிசையும், Interlude எனப்படும் இடை இசையிலும் வயலின், புல்லாங்குழல் என்று கொஞ்சம் மேற்கத்திய சாயலுடன் இரசிக்க வைத்திருப்பார்கள். ‘வெல்பவர் இல்லா போர்களும்..’ என்ற வரியை கவனித்தால், தன் குரலில் எத்தனை வித்தைகளை இந்த மனிதர் காட்டுகிறார் என்று தெரியும். இது பக்திப்பாடலாக இல்லாவிட்டாலும், வார்த்தைகளால் வசப்படுத்தியது உண்மை!

     விஸ்வரூபம் பாடல்கள் வெளியானபோது ‘துப்பாக்கி எங்கள் கையில்’ பாடலின் வரிகள் மிகவும் ஆழமாக இருந்தது. பிறகு.. விஸ்வரூபம்..ரூபம் என்ற பாடலில் ‘ஆளவந்தாஆஆஆன்’… என்று பாடப்பட்ட வரிகளின் சாயல் கொஞ்சம் இருந்ததாக உணர்ந்தேன். ஆனால், அந்தப்பாடலின் PRELUDE ல் வரும் பைப் சத்தம் ஏதோ காட்சியை மனதில் வைத்து இசைத்திருக்கிறார்கள் என்று எண்ணினேன். அது சரியாக இருந்தது. ‘உன்னை காணாது நானிங்கு’ கேட்டபோது பிடித்திருந்தது. ஆனால் அதனை மிகவும் ஈடுபாட்டுடன் முதலில் கேட்கவில்லை.


     
ஆனால், ஒரு பயிற்சி வகுப்புக்காக தடா செல்லும்போது, நண்பர் டாக்டர்.பாலா அவர்கள் ஃபோனில் கேட்டோம். அன்று கார் ஓட்டிக்கொண்டே இரசிக்க ஆரம்பித்ததுதான். இதுவரை 200 முறையாவது கேட்டிருப்பேன். அன்றே திரும்பத்திரும்ப அந்தப்பாட்டைக் கேட்கத்தொடங்கி, வரி வரியாக இரசிக்கத் தொடங்கினால்..ஒவ்வொரு வரியிலும் தமிழை வளைத்து, நெளித்து, குழைத்து ஒரு சிற்பமாகவே உருவாக்கியிருக்கிறார். சங்கர் மகாதேவனின் குரல் ஒரு தேன் தோய்த்த மயிலிறகாக ச்சிலீரென்று வருடிச்செல்கிறது. இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல…! எனும் வரிகளில் சிலிர்க்க வைத்து… உனைக் காணாது என்று மீண்டும் மீண்டும் சொல்லுமிடங்களில்.. கலைஞனய்யா நீர் என்று கன்னம் கிள்ளத் தோன்றுகிறது. கமலும் சளைக்காமல்… ‘சரி வர தூங்கா து வாடும் பல மு றை உனக்கா க ஏங் கும்…என்று சந்தத்துடன் வார்த்தை பொருத்தி விளையாடியிருக்கிறார். இந்தப் பாடலின் மேக்கிங்கைப் பார்த்தால், கமல் அதில் எவ்வளவு லயித்து இருக்கிறார் என்பது விளங்குகிறது.

 


     முன்னர் சொன்னதுபோல், விஸ்வரூபத்தில் இந்தப்பாடலை பக்திக்காகவோ, காட்சிக்காகவோ வைத்திருந்தாலும், ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையில், படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்குத் தூண்டியவகையிலும், உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான படத்தைக் கொடுத்தவரையிலும்.. அந்தப் பாடல் சொன்னது உண்மைதான்.! ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே! என்று ஒவ்வொருவரையும் நினைக்க வைத்துவிட்டார்.

படத்தில் ”நான் முஸ்லீம்தான் ..ஆனால் நல்ல கலைஞனும்கூட… பாத்திரத்துல ஐக்கியமாகிட்டேன்” என்று கமலே சொல்வதுபோல், அவருக்கு கடவுள் இல்லைதான்.. ஆனால்.. பக்தி இலக்கியம் மற்றும் இசையில் எப்போதுமே பக்தி உள்ளதால்தான்.. இத்தகைய பாடல்களை அவரால் நமக்குத் தர முடிகிறது.!

இதை..இசைக் கமல் நீ செய்த அரும் சாதனை என்றும் சொல்லலாம்.!Friday, February 8, 2013

கேட்டால் கிடைக்கும் - கூட்டம்


    
  

   சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டு கூட சீற்றம் கொள்ளாதவர்களால் , இந்த தேசத்தின் நடக்கும் எந்த ஒரு பெரிய அநியாயத்தையும் கண்டு பொங்கவே முடியாது  என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.! இன்றைய காலகட்டத்தில் நம்மைச்சுற்றி அதிக அநியாயங்கள் நடப்பதற்கும் நாம்தான் காரணம்.! பல்வேறு இடங்களில் நடக்கும் சிறு சிறு அநீதிகளைத் தட்டிக்கேட்கத் தொடங்கினாலே போதும்! மாற்றம் நிச்சயம்!

கேட்டால் கிடைக்கும் என்ற முகநூல் குழுமத்தை நானும், நண்பர் கேபிள் சங்கரும் தொடங்குவதற்குக் காரணமே அடிப்படையில் எங்களுக்கு இருந்த தட்டிக்கேட்கும் குணம்தான்..! குழுமத்தைத் தொடங்கி, எங்கள் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கவும், ஒத்த குணம் கொண்டவர்களும், இதுபோல் நாமும் தட்டிக்கேட்க வேண்டும் என்று நினைத்தவர்களும் சேரத்துவங்கினார்கள்.

எங்களது சொந்தப் பிரச்னைகள் தவிர, பல்வேறு நண்பர்களின் பிரச்னைகள் எங்களிடமே வந்து, நாங்களும் அவற்றை முறையாகத் தட்டிக்கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். குழுமத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3000த்தைத்  தாண்டியிருக்கிறது. எனவே, இந்தக் குழுமத்தை முழுமையான பதிவுசெய்யப்பட்ட இயக்கமாக மாற்றலாம் என்று முடிவுக்கு வந்து, அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கியாகிவிட்டது.

இந்நிலையில் சென்ற 2.2.2013 சனிக்கிழமை அன்று கேட்டால் கிடக்கும் குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முகநூலில் குழுமப் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் மட்டும்தான் போட்டிருந்தோம். அதை வைத்து கூட்டத்துக்கு வந்தவர்கள் உண்மையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

அவர்களையே பதிவுசெய்யப்படும் இயக்கத்தில் நிர்வாகிகளாகப் போடலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

அன்றைய கூட்டத்தில் ,  மிகச்சிறப்பாக அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

டிஸ்கவ்ரி புக் பேலஸின் வேடியப்பன் , ஏர் டெல்லில் இருந்து 4800 ரூபாயைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

சுதர்சன் என்ற முகநூல் நண்பர், உணவகத்தில் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் அநியாயமாக அதிகரித்துப் போடப்பட்ட தொகையை கழிக்க வைத்திருக்கிறார். அவரைப் பார்த்து அருகிலிருந்த ஒரு நண்பர்கள் கூட்டமும் அதிகமான தொகையை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்.

நாராயணன் என்ற நண்பர், பி.எஸ்.என்.எல்லுடன் போராடி நியாயம் கிடைத்திருக்கிறது. மேலும் சில பிரச்னைகளுக்காக, இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்.

கோபிநாத் என்ற முகநூல் நண்பர், இந்தக் குழுமத்தில் சேர்ந்த்பிறகு தட்டிக்கேட்க வேண்டும் என்ற தைரியம் வந்திருப்பதாக அழுத்திச் சொன்னார்.

பதிவர் பிரதீப்குமார், கேட்டால் கிடைக்கும் என்ற தைரியம் தனக்குள் வந்திருப்பது பற்றிச் சொன்னார். கேபிள் சங்கரிடம் அவர் வைத்த வாதங்கள் சுவாரஸ்யமானவை!

பதிவர் மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்தக்குழுமம் விதைத்திருப்பதையும், சத்யம் தியேட்டரில் கோக் விற்பனையில் நடைபெறும் கோக்குமாக்கையும் விரிவாகச் சொன்னார்.

கேபிள் சங்கர், அவர் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் அதனை அவர் அணுகும் விதம் பற்றியும் தெளிவாக எடுத்துச்சொன்னார். போலீஸ், உணவகங்கள், டாஸ்மாக், தியேட்டர் என்று பல்வேறு இடங்களில் நடந்த பிரச்னைகள் பற்றி விளக்கமாகச் சொன்னார்.

கேட்டால் கிடைக்கும் குழுமம் தொடங்கியதிலிருந்து , பிப்ரவரி 2ம் தேதிவரை, பல்வேறு நண்பர்கள் மற்றும் குழும உறுப்பினர்களிடமிருந்து வந்த பிரச்னைகள் பலப்பல..! அவற்றில் பெரும்பான்மையானவை நேரடியாக நான் தலையிட்டுப் பேசியதன் மூலம் தீர்வுக்கு வந்திருக்கிறது. அவ்வாறு இந்த ஒரு ஆண்டில் 53 பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன்.

அதில், பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனையாளர்கள், பார்சல் நிறுவனங்கள், கார் விற்பனையாளர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள், உணவகங்கள், திரையரங்கங்கள், ஒரு பத்திரிக்கை நிறுவனம், கல்வி நிறுவனங்கள், கணிப்பொறி பயிற்சி நிலையங்கள் என்று வெவ்வேறு இடங்கள் அடக்கம். இவை அனைத்திலும் நாம் நமக்கு என்ன தேவை என்பதையும், அரசின் சட்டங்களையும் முன்னிறுத்தி கொஞ்சம் அழுத்தமாக, தெளிவாகப் பேசியதன் மூலம் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.

மேலும், சந்திப்பிற்கு, கே.ஆர்.பி செந்தில், காவேரி கணேஷ் ,சுகுமார் சுவாமிநாதன்,  ஜெயக்குமார் ஆகியோர் வந்திருந்து தனது கருத்துக்களை மிகவும் தெளிவாகவும், பயனுள்ளவகையிலும் பகிர்ந்துகொண்டனர்.

விரைவில் கேட்டால் கிடைக்கும் என்ற இயக்கம் சென்னையில் பதிவு செய்யப்பட இருக்கிறது.

செல்வேந்திரனின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
      பொது இடங்களில்
ஒரு ரூபாய்க்குச்
சண்டைபோட்டுக்கொண்டிருப்பவனை
ஏளனமாகப் பார்க்காதீர்கள்.
பாவம்..
உழைத்துச்
சம்பாதிப்பவனாய் இருப்பான்!

கூட்டத்துக்கு அஞ்சாமல் செயல்படத்துவங்கினாலே போதும்…கேட்டால்.கிடைக்கும்!Friday, February 1, 2013

அசைபோடுதல் ஆனந்தம்


பழமையை அசைபோடும் சுகம் தனிதான். அதுதான் நம்மை எப்போதும் உயிர்ப்புடனும் , ஒருவித மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது என்று நான் உளமாற நம்புகிறேன்.

வட்டியும் முதலும் என்று தலைப்பிட்டு , ஆனந்தவிகடனில், ராஜுமுருகன் எழுதிவரும் கட்டுரைகள் பலரது உள்ளம் கவர்ந்தவை. அவை அனைத்துமே அவரது அழகான அசைபோடல்கள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, அதுபோன்று நமக்கும் நடந்த நிகழ்வுகளை உள்ளம் கவனித்துப்பார்க்கிறது. அதனால்தான் நம்மைப்போன்றே இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று சிலாகித்து அந்தக் கட்டுரைகளை விரும்பிப்படித்துக்கொண்டிருக்கிறோம்.

அதில் அவர் எழுதும் பாணியும் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் இருப்பதால் எல்லோருக்கும் அவரையும் சேர்த்துப் பிடிக்க ஆரம்பித்துவிடுவதில் ஐயம் இல்லை. அதனை மீறி நான் உட்பட பலர் அவரிடம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். ஏனெனில் தன் நிறை குறைகளை வெளிப்படையாகக் கூறும் குணம் அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. அத்தகைய மனிதர்களை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான் அன்பு என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வது இயல்பாகிவிடுகிறது.

அசைபோடல் ஒரு அற்புதமான விஷயம். நாம் பார்த்து, கவனித்து, கேட்டு, உணர்ந்து, பழகி வந்த பல்வேறு அனுபவங்கள் ஒவ்வொரு விதமான அசைபோடலுக்குள்ளும் இருத்திப் பார்க்கும்போது ஒரு இனம்புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

இதுபோன்று யாரெல்லாம் அசைபோடுவதில் ஆர்வம் காட்டி எழுதுகிறார்களோ அவர்களெல்லாம் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய் தொடங்கி, நமது எஸ்.ரா வரையில் அவர்களது பயணங்களும், பாதைகளும் தந்த அனுபவங்கள் நம்மிடையே எழுத்துக்களாக வந்து பல்வேறு பாராட்டுக்களையும் அவர்களிடையே நமக்கிருக்கும் நெருக்கத்தையும் உணரவைத்திருக்கின்றன. ‘துணையெழுத்து’ தொகுப்பில் ஒரு சாவிக்கூடை பற்றி வரும். அப்போது அனிச்சையாக நம் வாழ்வில் நாம் அதைப் பார்த்திருக்கிறோமா என்றும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் என் மனம் லயிக்க ஆரம்பித்துவிட்டது.

நான் கணிப்பொறி நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தபோது, கானாடுகாத்தானில் ஒரு பெரியவர் தனது வீட்டில் கணிப்பொறி பழுது நீக்க அழைத்திருந்தார். அவர்கள் வீட்டின் வாசலிலிருந்து கொல்லைப்பக்கத்தை அடைய ஆட்டோ வைத்துத்தான் செல்லவேண்டும் என்ற அளவுக்கு நீளம்..! ஒருமுறை நான் சென்றபோது எஸ்.ரா கூறியிருந்ததைப் போன்று ஒரு கூடை நிறைய சாவிகளை வைத்துக்கொண்டு ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு வீட்டுக்கு இவ்வளவு சாவிகள் இருக்கமுடியும் என்ற ஆச்சரியம் எனக்கு வந்தது.

அப்போது அவர் அதன் பின்னணியை விரிவாக்கினார். அவரது மகன் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்காக ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்கப்போனபோது, பிணையாக அவர்களது வீட்டுப்பத்திரத்தை கேட்டிருக்கிறார்கள். அது தொடர்பாக விட்டுப்போன சில ஆவணங்களைத் தேட சில அறைகளைத் திறந்து பார்க்கவேண்டியிருப்பதால், அந்தச் சாவிக்கூடையை நோண்டிக்கொண்டிருந்தார்.

அடுத்தமுறை நான் சென்றபோது, அவராகவே ஆரம்பித்தார்.

தம்பீ! ஒரு பெரிய விஷயம் நடந்துச்சே! தெரியுமா?

என்ன சார்? சொல்லுங்க!

அன்னிக்கு அந்த சாவிக்கூடையை நோண்டிக்கிட்டிருந்தேன்ல, அப்போ அதன் அடியில மூணு மோதிரம் கெடந்துச்சு.. ! எல்லாமே தங்க மோதிரம்..! உடனே அதை நல்லா சுத்தப்படுத்தி, நான், என் மனைவி, என் மகன் ஆளுக்கு ஒண்ணா போட்டுக்கிட்டோம். 
நாங்க தேடின பத்திர பேப்பரும் கிடைச்சுருச்சு..! அதை எடுத்துக்கிட்டு அந்த ஃபைனான்ஸியர்க்கிட்ட என் பையன் போக, அவர் இவன் கையில் இருந்த மோதிரத்தைப் பார்த்து , கழட்டித் தரச்சொல்லிக் கேட்டிருக்கார். என் மகனும் கொடுக்க, அதை கூர்ந்து பார்த்துட்டு,
இந்த ஒரு மோதிரம் போதும். ஏன்னா, இதுல ஒரிஜினல் கனக புஷ்பராகம் பதிச்சிருக்கு!  ஒரு கோடி மதிப்பிருக்கும். இது உங்ககிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, பத்திரமே கேட்டிருக்கமாட்டேனே?  
என்று சொல்லி உடனடியாக 50 லட்சத்துக்கு செக் குடுத்துட்டாரு! இதுமாதிரி எத்தனை புதையலை எங்க பாட்டன்,பூட்டன் இந்தவீட்டில் வச்சிட்டுப் போயிருக்கானோ?  என்று சந்தோஷித்தார்.
சாவிக்கூடை பற்றிப் படித்தபோது இந்த சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது. படிக்கும் விஷயத்துடன் தான் சந்தித்த, அனுபவித்த சம்பவங்களை பொருத்திப்பார்க்கும் மனோபாவம்தான் அசைபோடல்களை உச்சம் தொட வைக்கிறது.

எனக்குத் தெரிந்து பல அசைபோடும் மனிதர்களை நானே வலியச் சென்று சந்திப்பேன். அவர்களது அனுபவங்களை அவர்கள் சிலாகித்துச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை உள்ளக் கேமராவில் பதிவு செய்வதற்காகவே நிறைய முறை சென்றிருக்கிறேன். மேலும் பல்வேறு சிறப்பான அனுபவங்கள் நாம் புத்தகங்களில் கூடப் படிக்க இயலாது.

எழுத்தாளர் திரு.தருமராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். அவரைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், டால்ஸ்டாய் மேல் பற்றுக்கொண்டு ரஷ்யாவிற்கே சென்று அங்கு பல ஆண்டுகள் தங்கி , வேலை பார்த்து வந்தவர். டால்ஸ்டாயின் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்ததில் இவருக்கு முதல் மற்றும் முக்கியப் பங்கு உண்டு. அவரது அனுபவத்தில் ரயில்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ரஷ்யாவின் இருப்புப் பாதை மட்டும் கொஞ்சம் அகலம் அதிகம் என்றும், அதனால், வேறு எந்த நாட்டிலிருந்தும் ரஷ்யாவுக்குள் ஒரே ரயிலில் போகமுடியாது. இது அவர்களது பாதுகாப்பு உணர்வைக் காட்டுவதாக உள்ளது என்றார். அது எனக்கு மிகவும் புதிய தகவல். டால்ஸ்டாய் அமர்ந்து இறந்த இடத்தில் அதிக நேரம் சென்று இருந்துவிட்டு வந்ததாக அவர் சொன்னபோது அவர் கண்ணில் கண்ட உணர்வை என்னால் விவரிக்கவே இயலாது.

பல்வேறு நபர்கள் ‘நாங்கள்லாம் அந்தக்காலத்துல’ என்று துவங்கும்போது பலர் பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், உண்மையில் பல்வேறு அனுபவங்கள் அசைபோடுதலாக வரும்போது அது தரும் ஆனந்தம் அலாதியானதுதான். ஆட்டோகிராப் படத்தை நாம் கொண்டாடியதற்குக் காரணம் அதன் அசைபோடலில் நம்மையும் இணைத்துப் பார்த்ததுதானே?

இதைப்படித்துவிட்டு என் தோழி ஒருத்தி கட்டாயம் ஃபோன் செய்வாள்!

அசைபோடுதல் ஆனந்தம்கிற…? ஆனா நான் அசைபோட்டா மட்டும் திட்டுற?

அவளுக்கு இப்போதே பதிலிடுகிறேன்.

லூஸு! நான் சொல்றது மனசு செய்யுறது…நீ சொல்றது மாடு செய்யுறது!LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...