Sunday, March 31, 2013

சர்க்கஸ்

அந்த ஞாயிறுதான் கடைசி என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘சர்க்கஸ் கூட்டிக்கிட்டு போப்பா’ என்று மகள் வேறு அனத்திக்கொண்டே இருந்தாள். அவர்கள் பள்ளி வாசலில் கொடுக்கப்பட்டிருந்த தள்ளுபடி கூப்பனை வேறு பத்திரமாக வைத்திருந்து எனக்கு எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாள்.

எனக்கே சர்க்கஸ் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது. சனிக்கிழமை கிளம்பி, குழந்தைகளிடம் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் இன்ப அதிர்ச்சியாய், சென்னை சென்ட்ரலுக்குப் பின்னால், ஜெமினி சர்க்கஸ் வாசலில் காரை நிறுத்தியபோது, அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வைத்து இந்த மாநிலத்துக்கு ஒரு ஆண்டுக்கு மின்சாரம் கொடுக்கலாம். J

உள்ளே நுழையும்போது சாகஸங்கள் தொடங்கியிருந்தன. பார்வையாளர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். கீழே ஒரு வலை கட்டி, மேலே திறமையாளர்கள் பார் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறமைமேல் நம்பிக்கையுடன், மக்களை மகிழ்விக்கத்தான் இதைச் செய்கிறோம் என்ற திருப்தியுடனும் வேலை பார்த்தார்கள். நான் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் ஆசையுடன், சிறுவயது குதூகலத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

பல்வேறு நிகழ்வுகளை மாற்றி மாற்றி செய்து காட்டினார்கள். ஒவ்வொரு கலைஞருக்கும் 16லிருந்து 40 வயதுக்குள்தான் இருக்கும்.  மேலும் ஆப்பிரிக்கக் கலைஞர்களும் விதவிதமான நடன அசைவுகளுடன் சாகஸங்கள் நிகழ்த்தினார்கள். மரணக்கிணறு என்ற பைக் ஓட்டும் சாகஸம் பார்க்கும்போது என் மகள் அலறிவிட்டாள்.  பெண் கலைஞர்கள் விதவிதமான சாகசங்களை அநாயாசமாகச் செய்தார்கள். ‘இப்படியெல்லாம் செய்றதாலதான் உடம்பு ஸ்லிம்மா வச்சிருக்காங்க! என்று தங்கமணி சொல்ல, சாப்பாடு இல்லைன்னாலும் உடம்பு ஸ்லிம்மாத்தான் இருக்கும் என்று பதில் சொல்லி, ஒரு முறைப்பை பரிசாக வாங்கினேன்.

 ஒட்டகம், கிளிகள், நாய்கள், குதிரை போன்றவைதான் விலங்குத் திறமையாளர்கள். அவைகளும் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்தன. கிளிகள் சைக்கிள் ஓட்டின. நாய்கள் சறுக்கு விளையாட்டுக் காட்டின. ஒவ்வொரு நிகழ்வையும், அதன் கலைஞர்கள் பெயருடன் ஒருவர் அறிவித்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நாளைதான் எங்களது கடைசி காட்சி!’ நாங்கள் உங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறோம்!’

இந்த வார்த்தைகள் ஒரு பிய்த்தெரிய இயலா சுயிங்கத்தைப் போல என் மனதில் சோகம் பூசி ஒட்டிக்கொண்டுவிட்டது.  இனி, அவர்களை கவனிக்க யாருமில்லை என்பதை அவர்களை அறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் இலுப்பூரில் படித்துக்கொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு சிறிய வளாகம் அமைத்து கேலரிகள் கட்டி, ஒரு கரடி, குதிரை, கிளி, நாய் போன்றவற்றை வைத்து ஒரு சிறிய சர்க்கஸ் நடைபெற்றது. அதற்கு மதியக் காட்சிக்கு பள்ளியிலிருந்தே 50 பைசா வாங்கிக்கொண்டு அழைத்துச் சென்றார்கள்.  அதுதான் நான் கண்ட முதல் சர்க்கஸ்..! அதில் ஹீரோ போன்ற ஒரு மனிதர் சைக்கிள் ஓட்டினார். கரடியுடன் ஆடிப்பாடினார், குதிரையை அந்தச் சிறிய பரப்புக்குள், பரபரப்பாக ஓட்டிக் காட்டினார். அவர் எங்களை உற்சாகப் படுத்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார்.

“ராயாரோ…ரம்ப்பம்போ’’ ராயாரோ ரம்ப்பம்போ’!  அந்த வார்த்தை இன்றுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அதற்குப்பிறகு, இலுப்பூரிலேயே இரு வேறு சர்க்கஸ்கள் பார்த்திருக்கிறேன். அவர்களது ஈடுபாடு, சாதாரண மனிதர்களால் செய்யமுடியாததை அநாயாசமாகச் செய்யும் பாங்கு போன்றவை கண்டு சிறுவயது முதல் வியந்துகொண்டிருக்கிறேன்.

பின்னர் திருச்சியில் ராயல் சர்க்கஸ் என்று ஒன்று வந்திருப்பதாகச் சொன்னார்கள். அந்த கூடாரத்தில் போடப்படும் மின் விளக்கு, திருச்சிக்கே தெரியும் வகையில் வைத்திருந்தார்கள். இரவில் இலுப்பூரிலேயே தெரியும் என்றார்கள். அந்தச் சமயத்தில் திருச்சி சென்றிருந்தபோது, உண்மையிலேயே இரவு 8 மணி வாக்கில் ‘சங்கிலியாண்டபுரத்தில் இருந்து வானத்தைப் பார்த்தால் கலங்கரை விளக்கம்போல் ஒரு ஒளி பாய்ந்து சென்றது.  சர்க்கஸுக்கு பஸ்ஸெல்லாம் விட்டார்கள். மக்கள் கூட்டம் அலைமோதி, அடுத்த காட்சிக்கு முன்னரே செல்லவேண்டும் என்ற அளவுக்கு அந்த சர்க்கஸ் பிரபலமாக இருந்தது. சிங்கம், புலி, யானை என்று பெரிய விலங்குகள் திறமை காட்டுகின்றன என்று குழந்தைகளும் மிகவும் ஆர்வமாக சென்றார்கள்.

பிறிதொரு நாளில் கரூரில் ஜம்போ சர்க்கஸ் பார்க்க எனது சக ஊழியர்களை அடம் பிடித்து அழைத்துச் சென்று மகிழ்ந்தேன். அங்குதான் முதன்முதலில், பீரங்கிக்குள் ஆள்வைத்து பறக்கவைத்துக் காட்டினார்கள். மிகவும் அற்புதமாக இருந்தது.கறம்பக்குடி வள்ளுவர் திடலுக்கு அருகில் சங்கு ஊதும் இடத்துக்குக் கீழ் ஒரு சிறிய சர்க்கஸ் நடந்தது. அதை ஒரு ரூபாய் டிக்கெட் கொடுத்து பார்த்தோம். நான் 9 வது படித்துக்கொண்டிருந்தேன். அதில் திறமை காட்டிய என்னைவிட வயதில் சிறிய ஒரு பெண் பளபளப்பான நீல நிற உடை அணிந்து அழகான தேவதை போல் தெரிந்தாள். மிகவும் பிடித்துப்போய் மீண்டும் ஒருமுறை அவளைப்பார்த்துவிடவேண்டும் என்று ஆவல். ஆனால் காசில்லை. என் நண்பன் ஒருவன் புரவலனாக, மீண்டும் அவளைக் காண்பதற்காகவே  சென்றேன். அன்று அவள் வரவே இல்லை. தேடல் அதிகமாகி, அவள் அந்தக்கூடாரத்தில் எங்காவது கண்ணில் படுவாளா என்று சுற்றிச் சுற்றித் தேடினேன். ஒரு ஓரத்தில், ஒரு கருப்பு மிடியும், ஆண்கள் சட்டையும் அணிந்துகொண்டு, அமர்ந்து பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தாள். தேவதைகளுக்கும் வீட்டு வேலை இருக்கும் என்று அன்றுதான் உணர்ந்தேன்.

எனக்கு சர்க்கஸின் சாகஸங்களும், அந்த மனிதர்களின் ஒற்றுமையும், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணித்து, அந்த ஊரில் தங்கள் திறமையைக் காட்ட இடம் தேடி அதில் வளாகம் அமைத்து, தங்கள் காட்சிகளை வடிவமைத்து, அதற்கேற்ற திறமையாளர்களுக்கு பயிற்சிகொடுத்து, விலங்குகளைப் பயிற்றுவித்து, தங்கள் வரவை அந்த ஊரில் பிரபலப்படுத்தி, மக்களை வரவைத்து, அவர்களை மகிழ்வித்து, வாய்மொழி விளம்பரத்தால், நல்ல பெயரைச் சம்பாதித்து, அந்தக் கலையை தலைமுறைகளாகக் கட்டிக்காக்கும் பாங்கும் பேரன்பைத் தோற்றுவித்திருக்கிறது.

எனது சர்க்கஸ் ஆசை அப்படியே இருக்கிறது. எனது குழந்தைகளுக்கு அவற்றைக் கடத்தப் பார்க்கிறேன். முழு சர்க்கஸும் பார்த்த என் மகள் சொன்னாள்.

“போப்பா..! சர்க்க்ஸுல யானை, புலி, சிங்கமெல்லாம் இருக்காதா? அவங்களே விளையாடுறாங்க! எங்களையும் உள்ள வந்து விளையாடச் சொல்லலாம்ல!”

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தபோது,  ஒரு இளைஞன் தன் நண்பனிடம் பேசிக்கொண்டு சென்றான்.

’டிவியில பாக்குறதை விட இங்க நல்லா இருக்குல்ல மச்சான்!’ சின்னவயசுலேருந்து பாத்ததே இல்லை! நம்ம ஹீரோவெல்லாம் டூப் போட்டு பண்றதை, இங்க நிஜமா பண்றாங்க… நாளைக்கு நம்ம ஃப்ரெண்ட்ஸெல்லாம் கூட்டிட்டு வருவோமா?


இப்போது சர்க்கஸ் நிறுவனங்களின் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது அந்த வளாகத்தைப் பார்த்தபோதே புரிந்துகொள்ளமுடிந்தது. தன் உடலை வருத்தி, நம்மால் இயல்பாகச் செய்யமுடியாத ஒரு செயலைச் செய்துகாட்டி நம்மை மகிழ்விக்கும் அவர்களை நாம் மகிழ்விக்கிறோமா?

விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்று சர்க்கஸ்களில் நமக்குக் கிடைத்த குதூகலத்தை நம் அரசு குறைத்துவிட்டதா?

ஊடகங்களின் ஆதிக்கம், நேரடியாக இந்தக் கலையை சென்று பார்க்கும் அளவுக்கு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லையா?

நம் வாழ்வியல் சூழலே நிரந்தர சர்க்கஸாக  இன்று  நம்மை அலைக்கழிக்கிறதா?

இந்தக் கலையை நாம் எங்கு இழந்தோம்?

எப்போது இந்த மனிதர்களை நாம் கைவிடத் தொடங்கினோம்.?

இனி எப்படி அவர்களைப் பாதுகாக்கப் போகிறோம்?

விடை காண்கிறோமோ இல்லையோ...அடுத்த முறை நம் ஊருக்கு சர்க்கஸ் வந்தால், ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வருவோம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...