Friday, September 30, 2011

நியாய நாய்விபத்து நடந்து,
வினாடிகளில்
காணாமல் போகும்
நகைகளில்,
தொகைகளில்
இருக்கிறது
மனிதாபிமானப்
பிசாசுக்கும்
சுயநல
தெய்வத்துக்குமான
அமைதிப் போரின்
அநியாய வெற்றி!

வெற்றியின் ருசியில்


நாளைய 
விபத்துக்காய்

நாக்கைத்

தொங்கப் போடுகிறது

நியாய நாய்!

Sunday, September 25, 2011

இரத்தம்


         சவுதி அரேபியாவின் யான்புவில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, 1998ன் பக்ரீத் விடுமுறை!!. ஒரு வாரம் போர் அடிக்கும்., எங்காவது டூர் செல்லலாம் என்று முன்னரே, நண்பர்களுடன் ஆலோசித்தபோது, சவுதி அரேபியாவின் மலை நகரங்கள் தபுக், ஹெய்ல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் திடீரென்று எகிப்து அருகில்தான் என்பதால், கெய்ரோ போகலாம் என்று முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தோம்.

       அடப்பாவிகளா! ஏதாவது பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப்போகலாம்னா, பக்கத்து நாட்டுக்கே போக ஐடியா குடுக்குறீங்களே? என்று திட்டினாலும், எனக்கும், பிரமிடுகளின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த அளப்பரிய ஆர்வம் காரணமாக, ஒரு மாத சம்பளத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிந்தாலும், ஆசையுடன் ஏற்பாடுகள் செய்தோம்.

     பயண நாளும் வந்தது. யான்புவிலிருந்து ஜெட்டா, பின் அங்கிருந்து கெய்ரோ.! கெய்ரோ விமானநிலையத்தில் இறங்கி இமிக்ரேஷன் க்ளியரன்ஸுக்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது, அரபிக் கலந்த ஒரு மொழியில் , - அப்போது எனக்கும் அரபிக் தெரியாது. – ஏதோ சொன்னார்கள். விமான நிலையம் பரபரப்பானது. அதற்குப்பின் அவர்கள் சொன்ன ஆங்கில அறிவிப்பில் ‘தோக்தர்’ என்ற வார்த்தை மட்டும் அறைகுறையாகப்புரிந்தது. அதை நான் உடன் வந்த நண்பரிடம் ‘டாக்டர் கேக்குறாங்க போலிருக்குன்னு’ சொல்லிக்கொண்டிருந்தேன். வரிசை நகர்ந்தது. என் முறை வந்தபோது, அந்த அதிகாரி என்னைப்பார்த்து, விசா பேப்பரைப்பார்த்துவிட்டு, என் சவுதி ஐ டி யைக்காட்டச்சொன்னார். நானும் காட்டினேன். ‘மாஷா அல்லா’ என்று சொல்லிவிட்டு, என் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துவைத்துக்கொண்டு, ஓரமாக நிற்கும்படி சைகை காட்டினார்.

      வெலவெலத்துப்போனேன். நம்ம தப்பு ஏதும் செய்யவில்லையே என்று மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. என்னை ஓரமாக நிற்கச்சொன்ன அதிகாரி, தன் வயர்லெஸ்ஸிலிருந்து ஏதோ பேச, இன்னொரு அதிகாரி அவ்விடத்துக்கு வர, அவர்கள் என்னைக்காட்டி பேச, என்னுடன் வந்த நண்பர்கள் அரண்டுவிட்டார்கள். அதில் ஒருவருக்கு இமிக்ரேஷன் முடிந்து வெளிச்சென்றுவிட்டார். மற்றவர்கள் வரிசையில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அதில் , ஓரளவு அராபிக் தெரிந்த ஷாகுல் என்ற நண்பர், அவர் முறை வந்தபோது, என்னைக்காட்டி கேட்க, அதிகாரியும் ஏதோ பதில் சொல்ல… அவர் என்னைப்பார்த்து சைகை செய்ய முயற்சிக்கும்போது, ஒரு ஆஜானுபாகுவான அதிகாரி, என் தோளில் கை வைத்தார். அவர் பக்கம் திரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

நண்பரே ! உங்கள் இரத்தப்பிரிவு என்ன?

ஏ நெகட்டிவ்!

மிகச்சரி! உங்களுடைய உதவி எங்களுக்குத்தேவை!

என்ன செய்யவேண்டும்?

     ”இங்கு ஒரு பயணிக்கு பிரசவச்சிக்கலில், கொஞ்சம் இரத்தம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு நாங்கள் பார்த்த பயணிகளில் உங்களுக்குத்தான் இந்த இரத்த வகை இருக்கிறது. உடனடித்தேவை!! உதவுங்களேன்!”

ஓக்கே! செய்துகொள்ளுங்கள்!

மிக்க நன்றி நண்பரே! அல்லாவின் அருள் உங்களுக்கு நிலைக்கட்டும்!

     அதுவரை இரத்ததானம் பற்றி கேள்விதான் பட்டிருக்கிறேன். ஆனால், இரத்தம் கொடுத்ததில்லை. இந்தியாவில் இருந்தவரை ஒல்லிப்பிச்சான். 21 வயதில் 43 கிலோ! சவுதி வந்தபின்தான்… தினசரி ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு 22 வயதில் 62 கிலோவுக்கு வந்திருந்தேன். இங்கே திடீரென்று கேட்டவுடன் மறுக்கவும் தோன்றவில்லை.

       கூட்டிச்சென்றார்கள். அது விமான நிலைய மருத்தவமனை!

     முதலில் ஒரு சொட்டு இரத்தம் எடுத்து, என்னை அமரவைத்தார்கள். 15 நிமிடங்களில், மீண்டும் உள்ளே அழைத்தார்கள். என்னை வைத்துக்கொண்டே, என் இரத்த சோதனை காகிதத்தை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். இறைவனை வணங்குவதுபோல் காட்டி, ஏதோ சொன்னார்கள்.

    பின்னர், என்னைப் படுக்கவைத்து ஒரு எகிப்திய நர்ஸ் அன்பாக ஏதோ சொல்லிக்கொண்டே, கையில் ஒரு இரப்பர் பந்தைக்கொடுத்து, அழுத்திக்கொண்டே இருக்கச்சொன்னார். பின்னர் என் முன் கையில், ஒரு பெல்ட் போல் ஒன்றைக்கட்டி, நரம்பைக்கண்டுபிடித்து, துளை பெரிதாக இருந்த ஊசியைக்குத்தினார். ‘விசுக்’ என்று பாய்ந்து வந்து, என் உடலை விட்டு வெளியே முதன்முதலில் தன் பயணத்தை ஆரம்பித்தது என் இரத்தம். முதன் முறையாக என் இரத்தத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் பார்த்தேன். கருஞ்சிவப்புடன், பீட்ரூட் ஜூஸ் போல் இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்தப்பை ஆடிக்கொண்டே இருப்பதுபோல் ஒரு எடைக்கருவி வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அது ‘பீப்’ என்று சத்தமிட, அந்த நர்ஸ், சிரித்துக்கொண்டே வந்து, ஊசியை எடுத்துவிட்டு, பையின்மேல் ஒரு லேபிளை ஒட்டி உள்ளே கொண்டு சென்றார். பின்னர் ஒரு பெரிய கேன் ஜூஸ் கொடுத்தார்கள். ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஒரு ஆப்பிள் பழம்.!

   இரப்பர் பந்தை படுக்கையிலேயே வைத்துவிட்டு, ஜூஸைக்குடித்து, ஆப்பிளைக்கடித்துக்கொண்டே, வெளியில் வந்தேன். அங்கு என்னை அழைத்துச்செல்ல வேறொரு அதிகாரி நின்றிருந்தார். சினேகமாகச் சிரித்தபடி அவர் ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு ஒரு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். உடனே அவர் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

    ”எங்களுக்குத் திருமணமாகி 12 வருடங்களாகிவிட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு, இப்போதுதான் அவள் கர்ப்பம் தரித்தாள். டெலிவரிக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிறது என்ற தைரியத்தில்தான் நான் வெளியூர் செல்ல வந்தோம் வந்த இடத்தில் வலி வருவதுபோல் இருந்து, இப்போது டெலிவரி! உங்கள் சகோதரிக்கு உதவியிருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்.!”

       நான் தர்மசங்கடத்தில் நெளிந்தாலும், அந்த உண்மையான நன்றி கூறுதலில் கண்ணில் நீர் மல்கியது. ஒன்றும் சொல்லாமல் வெளியேற எண்ணினேன். ஆனால், அவர் என்னை அமரச்செய்தார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

         பின்னர் என் பாஸ்போர்ட், விசா, போன்றவற்றை என் கையில் கொடுக்கும்போது இன்னும் சில காகிதங்களும் இருந்தன.  அவை ,

கெய்ரோ – அலக்ஸாண்ட்ரியா – போக வர விமான டிக்கெட்
கெய்ரோ ஹாலிடே இன்னில் இரு சூட் ரூம்கள் ( என் நண்பர்களுக்கும் சேர்த்து)
பிரமிடுகளைச் சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் ரெய்ட்
அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு நாள் தங்க ஏற்பாடு
அதுதவிர,
நாங்கள் உள்ளூர்த்தேவைகளுக்குப் பயன்படுத்த ஒரு டொயோட்டா கேம்ரி கார்.

இவை அனைத்தும் கொடுத்தது பற்றி அந்த அதிகாரி சொன்னார். நீங்கள் உள்ளூரில் ஏதாவது முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தால் அதை மறுத்துவிடுமாறும், அதற்கு ஏதேனும் முன்பணம் கொடுத்திருந்தால், அதை அந்த மனிதர் ஏற்றுக்கொள்வார் என்றும் , கெய்ரோ – ஜெட்டா விமான டிக்கெட் பிஸினெஸ் கிளாஸாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

உண்மையிலேயே எனக்கு தலை சுற்றியது.

இல்லை இதெல்லாம் வேண்டாம். அப்புறம் நான் இரத்தம் கொடுத்ததற்கு அர்த்தமே இல்லை என்று சொன்னேன். அதற்கு அந்த அதிகாரி…
”நீங்கள் இரத்தம் கொடுக்க ஒத்துக்கொண்ட உடனேயே , அந்த மனிதர் உங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்து, உடனே இந்த ஏற்பாடுகளைச்செய்துவிட்டார். நீங்கள் இனி மறுத்தாலும், அவருக்கு அந்தத்தொகை நஷ்டம்தான். ஒருவர் அன்பாகச் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? ”என்றார்.

ஒருபக்கம் வியப்பும், பிரமிப்பும் மேலோங்க… ‘ நம்ம எப்ப சம்பாதிச்சு இந்த சுகத்தையெல்லாம் அனுபவிக்கிறது? ஒரு பாக்கெட் இரத்தம் எவ்வளவு சந்தோஷத்தைக்கொடுத்திருந்தால், அந்த மனிதர் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பார் என்று எண்ணியபடி சரியென்று தலையாட்டினேன்.

நான்கு நாட்கள், ராஜ மரியாதையுடன் சொர்க்கத்தை அனுபவித்தேன். நண்பர்களிடையே ஹீரோவானேன். ‘மாப்ள! அடுத்து புருனே போவோம். அந்த ராஜாவோட 22வது வொய்புக்கு டெலிவரியாம்… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்காங்க! என்ற சார்லஸை பெருமிதத்துடன், தலையில் குட்டினேன்.

திரும்பும்போதுதான் தெரிந்தது அவர் எகிப்தின் அரசாங்கத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருக்கும் ஒரு பெரிய மனிதர். அன்று பிறந்த குழந்தை ஆண்..! குழந்தைக்கு ரஹ்மத்துல்-அல்-ஹாஸி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தாயும் சேயும் நலம்.!! எனக்கு நன்றி சொல்லச்சொல்லி ஒரு பூங்கொத்து கொடுத்துவிட்டிருந்தார்.

அன்று ஆரம்பித்தது… அடுத்தவர் சந்தோஷத்தில் உளம் மகிழும் போதை…! அதுமுதல் நானாகச்சென்று, மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.

இந்தியா வந்தபின் ஒரு மருத்துவ நண்பரின் ஆலோசனையின் பேரில், இரத்ததான முகாமில் இரத்தம் கொடுப்பதை நிறுத்தினேன். ஏனெனில் என் இரத்தம் மிகவும் அரிதானது. ஆகவே தேவைகள் ஏற்படும்போது மட்டும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்தேன்.

  எத்தனையோ முறை நண்பர்களுடன் பலவிதமான மது விடுதிகளுக்குச்சென்றிருக்கிறேன். ஒரு முறைகூடக் குடித்தது இல்லை. அதன் மீது ஒரு ஆவலே ஏற்பட்டதில்லை. மேலும் மது அருந்தி, அந்த நேரத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்கும் தேவை வந்தால், கண்ணெதிரில் அந்த உயிரைக்காக்க முடியாமல் போகலாம் என்ற பயத்திலேயே இன்றுவரை மதுவை மறுத்துவருகிறேன். யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் சிரிப்பும், மறுப்பும் வருவதற்கு இதுதான் காரணம்!

மதுவைவிட போதையாக, எத்தனையோ சந்தர்ப்பங்களில் மற்றவர் கண்களில் உண்மையான நன்றியைக் கண்டிருக்கிறேன்.

4 வயது மகனை ஸ்கூட்டியில் அழைத்துவரும்போது தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் , இரத்தம் இழந்த அவனுக்கு நான் குருதி கொடுத்தபோது அந்த விதவைத்தாயின் கூப்பிய கைகள்! (அன்று எனது மகனின் காதுகுத்து மற்றும் பிறந்தநாள் ! வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. நைஸாக நழுவினேன். )

இலங்கையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில், மதுரையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய பெரியவருக்கு இரத்தம் கொடுத்தபோது அந்தக்குடும்பமே என் கையில் சிந்திய கண்ணீர்! அவர்கள் கொடுத்த கத்தை ரூபாய் நோட்டுக்களை மறுத்தபோது ஏற்பட்ட பெருமிதம்!

கணவன் வெளிநாட்டில் இருக்க, காதல் திருமணத்தால், யாருமே இல்லாமல் தனியாக பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு,  மருத்துவர் என்னைத் தொடர்புகொண்டு கேட்டதால் இரத்தம் கொடுத்தபோது , குழந்தை பிறக்கும் வரை நில்லுங்கண்ணே என்று கண்ணீர் மல்கச்சொல்லி, பெண் குழந்தை பிறந்தபின்…என் பெயரை பெண்மைப்படுத்தி உடனே பெயர் வைத்த அந்தச் சகோதரியின் அன்பு!

நாம் தமிழர் இயக்க செயலாளர் விபத்தில் சிக்க, அவருக்கு அதிக அளவு இரத்தம் தேவைப்பட, அலைந்து திரிந்து இரத்தம் கொடுக்கப்பட்டு, அவரைக் காப்பாற்றியவுடன், தொடர்பே இல்லாத பல்வேறு ஊர்களிலிருந்து நன்றி கூறி அவரது தோழர்கள் போன் செய்த தருணங்கள்!

இவ்வாறு மதுரை, மணப்பாறை, சென்னை, கோவில்பட்டி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சி என்று பல்வேறு ஊர்களுக்குச்சென்று கொடுத்துவிட்டு வந்த அனுபவங்கள்!  இன்றுகூட ஏதாவது விபத்து ஏற்பட்டால், அருகில் இருந்தால், இரத்தத்தேவையை அறிந்துகொண்டுதான் நகர்கிறேன்.

என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை. அவர் மிகவும் தைரியமானவர். ஆனால், தீராத கழுத்துவலி மற்றும் தலைசுற்றலால் அவதிப்படுகிறார். குழந்தைபோல் ஆகிவிட்டார். மேம்போக்காக அவருக்கு ஆறுதல் சொன்னாலும், நாம் இவ்வளவு பேருக்கு நன்மை செய்திருக்கிறோமே, அவர்களது பிரார்த்தனைகளால், அவர் உடல்நலமடைய மாட்டாரா என்று உள்ளம் ஏங்குகிறது.


இதோ, சென்ற 17ம்தேதி ஒரு சிறுவனுக்கு இரத்தம் கொடுத்ததுடன்… 37  முறை ஆகிவிட்டது.

நம்மால் இந்த மானுட சமூகத்துக்கு நேரடியாகச் செய்யமுடிகிற இந்த உதவிக்கு அடிகோலிய அந்தப் பயணத்துக்கு, நன்றிகளுடன்....


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...