Posts

Showing posts from 2015

வாயுள்ள பிள்ளை Ver. 2.0

Image
இந்த மாத பில் மழை ! ஏர்டெல் பிராண்ட்பேண்ட் பில் வந்தது...  சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல், முழு வாடகையும் போட்டு சத்தமில்லாமல் 100 ரூபாய் அதிக பில்லும் ஆக்கி அனுப்பியிருந்தார்கள். உடனே.. 1ம் தேதி முதல் 10 தேதி வரை உங்கள் சேவையே இல்லாதபோது எப்படி முழு பில்லும் அனுப்பியிருக்கிறீர்கள்? என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன். சில மணி நேரங்களில் ஒருவர் பேசினார். ஓக்கே சார் ! உங்களுக்கான 10 நாட்களுக்கான பில் தொகையை கழித்துவிடுகிறோம் என்றார். அதேபோல் கழித்து SMS வந்தது. மகிழ்ச்சி.. !! அதே நேரத்தில் மொத்தத் தொகைக்கு போட்டிருக்கும் சர்வீஸ் டேக்ஸையும் சரியாகக் கழித்து பில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஏனெனில்..உங்களுக்கு 1299 ரூபாய் வாடகை எனில் 14.5% சேவை வரி சேர்த்துப் போடுவார்கள் . அதாவது 188.35. ஆக நீங்கள் கட்டவேண்டிய தொகை 1487.35. ஆனால், நீங்கள் கழிக்கச் சொல்லி கேட்டதும். திறமையாக 1299/30 = 43.3... அதை 10 நாட்களுக்கு சேர்த்து 433 கழித்து உங்களை குஷிப்படுத்துவார்கள்.  ஆனால், 1299- 433 = 866 அதற்கு சேவை வரி 125.57 தான்... அதற்குப் பதிலாக நாம

ஏமாற்டெல்!

Image
இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...! கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்.. பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது. நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன். அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது. அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன். இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும்

சென்னைப் பிழை!

Image
 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !! அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை! சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும். இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம். ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்ட

புதிய நூல்.. !

Image
பொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார்.  ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு.. கொஞ்சம் நேர முதலீடு, பல வல்லுனர்களின் சந்திப்புகள் பல கல்வியாளர்களின் உள்ளீடு இவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்) பின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு : இதோ .. https://gumroad.com/l/doQz#

மதுரை சம்பவம் !

Image
  ஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்.!! மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி !          ஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை..!! ஏன் என்ன ஆச்சு? என்று கேட்டால், “ஒரு சின்ன பிரச்னை சார்!” என்ன? ஸ்டாலின் மதுரை வந்திருக்காரு.. ! அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்க

நேர் முக்கியத் தேர்வு – பாகம் 3

Image
பட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.       இப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெ

சுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2

Image
பொ துவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம். வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார

நேர் முக்கியத் தேர்வு

Image
   இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது. மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும். அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர். நேர்முக்கியத் தேர்வு ! அது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர். . முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.! முதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம

வெறும் கணக்கு

Image
விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது. பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம் ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும். இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவ

அருகாமை!

Image
தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது. அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.             அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்

செம்மரச் சந்தேகங்கள் !

Image
எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !! செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா? தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்? தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...? 20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்? கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா? பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.? அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா?  சுட்டது எத்தனை காவலர்கள்?  அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா? ஒரு குற்றம் நடந்தால், அதைச் செய்ய