Wednesday, July 29, 2009

ஒலிப் பதிவு

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
திருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள்,
ஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு
பேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி !


Get this widget | Track details | eSnips Social DNA
பிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.
இல்லைன்னா ...விட்ருவோம் !
:)

Tuesday, July 14, 2009

அஜினோமோட்டோ அரக்கனா? அழகனா?

அஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.

அவர்கள் சொல்வது சரிதான்..!

ஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது.

மேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்!

அதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.

சீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN..! இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இருக்கும்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்..சீனா எதையும் செய்யத்துணிந்த நாடு.......என்று செல்கிறது அந்தச்செய்தி!

மேலும் இங்கு விற்கப்படும் அஜினோமோட்டோவில் இத்தகைய பொருட்கள் உள்ளதை எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமே ஆய்வுக்குட்படுத்தி..வேதிப்பொருட்களின் அளவு மற்றும் பெயர்களைத்தெரிந்துகொண்டோம்.

மெத்தனால் இருப்பதை உறுதிப்படுத்தினோம்.

மேலும்...உணவுப்பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த நிறுவனமும்.. MSGஐ தயாரிப்பதில்லை என்று அறிகிறேன். (அப்படித்தயாரித்தால் தயவுசெய்து நண்பர்கள் தெரியப்படுத்தவும்..அந்த நிறுவனம் மீதும் வழக்குத்தொடர வசதியாக இருக்கும்! :) )

எல்லாவற்றையும் விட...
பெப்ஸி, கோக்கில் பூச்சி மருந்து அளவு அதிகம் என்று எப்படி நிரூபிக்கப்பட்டபோது.. சொன்னவர்களை எதிர்த்து எந்த வழக்கும் போடாமல், தங்கள் சரக்கு உத்தமமானது என்று கூவிக்கொண்டிருந்தார்களோ..
அதுபோல்தான் உலகளாவிய அளவிலும்..அஜினோமோட்டோ செய்துகொண்டிருக்கிறது. மேலும் இந்தோனேஷியாவில்..பன்றிக்கொழுப்பு இதற்காகப்பயன்படுத்தப்படுவதாக செய்தி வந்து நாடே அல்லோகலப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதைவிட...நூற்றாண்டு காலங்களாய் நல்ல ,ஆரோக்யமான உணவு வகைகளை உண்டு வந்த நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றுதான்.. அஜினோமோட்டோவுடன் உலக நுகர்வோர் அமைப்புகள் போராடுகின்றன.

கண்மூடித்தனமாக ஏன் நாம் அதை எதிர்க்கவேண்டும்? பிஸா, பீட்ஸா, பர்கர்..என்று எண்ணற்ற உணவுவகைகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் எதிர்க்கவில்லையே..மேலும் ..நமக்கு நெருக்கமான மருத்துவர்கள் நம்மையோ.நம் குழந்தைகளையோ இந்தவகை JUNK FOOD களை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.
காபியே உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சத்தியமாக அஜினோமோட்டோ காபியை விடக்கெடுதல் ஜாஸ்தி!

அதற்காகத்தான் எழுதினேன்.

அஜினோமோட்டோவுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமும் கிடையாது சாமியோவ்!


மேலதிக தகவல்களுக்கு!

http://www.opposingdigits.com/forums/viewtopic.php?t=1594

http://www.rense.com/general67/msg.htm

http://www.truthinlabeling.org/

http://www.truthinlabeling.org/Proof_BrainLesions_CNS.html

நாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு


நாஞ்சில் நெஞ்சம் முதல் பாகம் இங்கே!

*************************************************************************************

அது, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். நன்றாகப் படித்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று நினைத்த எனக்கு பெண்கள் சகவாசம் காதலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்களில் ஒரு சிலர் நன்கு பேச, பழகக்கூடியவர்களாகவும், பணக்காரர்களாகவும், படிப்பைத்தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் அதீத நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ராஜவேணி மட்டும் ஒரு தீர்க்கமான பார்வையுடன், என்னுடைய பெண் வெர்ஷனாக இருந்தாள். எல்லோரிடமும் பழகுவாள். ஆனால் அதில் மிகச்சரியான கண்ணியம் இருக்கும்.!
வகுப்பின் முதல் நாளில் ..லட்சியம் என்னவென்று பேராசிரியர் கேட்டதற்கு மிகத்துல்லியமாக பதில் சொன்ன சொற்பமானவர்களில் நாங்கள் இருவரும் இருந்தோம். எனக்கு என் லட்சியத்தைவிட..அவள் சொன்ன கலெக்டர் என்பது சரியோ என்றுகூட சில நாட்கள் தோன்றியிருக்கிறது. அதே போல் அன்றைய செய்திகளை மிகச்சரியாக அலசுவாள். மிகவும் அழகாக உடை அணிவாள். தன் புத்தகங்களை நேர்த்தியாக வைத்துக்கொள்வாள். அவள் மேல் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.
இந்தச்சமயத்தில்தான் ராஜவேணியிடம் என் நண்பன் அருண் தன் காதலை ஒரு கடிதத்தில் சொல்ல, கல்லூரி முடிந்து எல்லோரும் சென்றபின் அவனைத் தனியே அழைத்து, எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டுத்தான் என் திருமணத்தையே யோசிக்கமுடியும். மேலும் நான் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயாராகும்போது பல தோல்விகள் ஏற்படும். கடைசி முயற்சிவரை காத்திருக்க உன்னால் முடியாது. இவற்றையெல்லாம் மீறி உன்னிடம் எனக்கு எந்த் ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்று மிகத் தெளிவாகக்கூறி, எனக்கான எச்சரிக்கை மணியையும் அடித்திருந்தாள்.
திடீரென்று தலையைச்சிலுப்பிக்கொண்டவனாக, இனிமேல் அவளிடம் மிகவும் மரியாதையாகப்பழகவேண்டும். நமக்கு இந்த சிந்தனை வந்ததே தவறு என்று எண்ணிக்கொண்டேன். பாழாய்ப்போனவள் நான் இப்படி நடக்க ஆரம்பித்தபின் தான் என்னிடம் மிக மிகப்பிரியமாக பழக ஆரம்பித்தாள். என்ன செய்வது? எதுவுமே வெளிப்படுத்தாமல், என்றாவது அவள் நல்ல நிலைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிட்டேன். ஒரு நண்பனாகவே படிப்பை முடித்தேன். பின்னர் ராஜவேணியைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும்போது அவளது முகம் ஒரு வினாடி வந்துபோனதை மறுப்பதற்கில்லை.

**********************************************************************************
எனக்கான இட்லியையும் வடையையும் எடுத்துக்கொண்டுவந்தது, நான் பார்த்துப்பார்த்து பெருமைப்பட்ட, படிப்பில் வெறியைத்தூண்டிய, இன்றைய என் நல்ல நிலைக்கு அடையாளமாக இருந்த, ராஜவேணி!

எனக்கு உண்மையிலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை!

'என்ன ராஜவேணி! எப்படி இருக்க? நான் குணா! தெரியலையா?'

தெரியலையே! யாரு நீங்க? நான் நீங்க சொல்ற ஆளு இல்லையே! என்று கூறி விருட்டென்று உள்ளே ஓடிவிட்டாள்.

எனக்கு இட்லியை விழுங்குவது, கிரானைட் கல்லை விழுங்குவது போல் இருந்தது. இல்லை..இவள் ராஜவேணிதான்..எதற்காகவோ நம்மிடம் மறைக்கிறாள். என்னவென்று பார்த்துவிடவேண்டும். என்ற எண்ணத்துடன் அந்த சூப்பர்வைசரிடம் இன்னும் ரெண்டு இட்லி என்றேன். மற்ற உணவுகளாக இருந்தால். கொஞ்சம் தாமதமாகும்.

உடனே அடுத்த தட்டு இட்லிக்களுடன் அவளே வந்தாள். முகம் சிவந்திருந்தது. வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறியிருந்தது.

'இங்க பாருப்பா ! நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன். என்ன ஆச்சு? ஏன் இப்படி? 'என்று மிகத்தாழ்வான குரலில் கேட்டேன்.

'என்ன சார்! நீங்க சொல்ற பொண்ணு நான் இல்லைன்னு சொல்றேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க!' - என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.

'எனக்கு நீ ராஜவேணிதான்னு கண்டிப்பா தெரியும்..எனக்கு இட்லி போடச்சொன்னபோது கூட, வேணின்னு அவர் கூப்பிட்டாரே' !

'ஏன் ஒரே பேரில் , ஒரே மாதிரி வேற ஆள் இருக்கக்கூடாதா?' என்றாள் மிகத்தெளிவுடன்.....சிவில் சர்வீஸஸுக்கு தயார் செயதவள் ஆயிற்றே!

இனிமேல் பேசிப் பயனில்லை என்றபோதும்...கடைசிவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு..பில் எடுத்து வந்த தட்டில் என் விஸிட்டிங் கார்டைப்போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.

இந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. என்ன ? கொஞ்சம் அழுத்தமானதாகவும் இருந்துவிடுகின்றன். அப்போதும் , என்னிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்த அவள் பக்க நியாயங்களே சரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே மேலெழுந்தது.


யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்!


Monday, July 13, 2009

நாஞ்சில் நெஞ்சம்

நாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்..

அது அதிகாலை ஐந்து மணி.

சாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும்.

எப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண்.

முதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள்.

கொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் மாநாட்டு மேடையாய் இல்லாத கட்டிலை கனவுகண்டுகொண்டு சென்ற நான் ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வரும்போது மணி 6:40.

அதேபோல், எந்தவசதிகளுக்கும் வசதியில்லாத ஒரு அழகான அறை கிடைத்தது.
அதுவும், நான் நினைத்ததை ஐந்து மடங்கு குறைவான வாடகையில்..! 'அவ்வளவுதானா..அவ்வளவுதானா ' என்று இருமுறை விடுதியாளரிடம் கேட்டுவிட்டேன்.

விடிய விடிய அறை தேடியதில்..தூக்கம் என்னைக்கெஞ்ச. நான் அதனிடம் கடமைகள் பற்றி கெஞ்ச...போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கால்கள் தானாகப்போய் கட்டிலில் ஏறி தன் ஆதரவை தூக்கத்திற்கு அளித்தது. தூக்கம் வெற்றிக்களிப்புடன் தன் வேலையைச்செய்தது.

காலையில் கிளம்பும்போது 9 மணி ஆகிவிட்டிருந்தது. காலை உணவுக்கு தேடல் ஆரம்பம்.. சம்பந்தமே இல்லாமல் காட்டு விலங்குகளின் இரைதேடும் சிரமங்கள் நினைவுக்கு வந்தது. எவ்வளவு தேடித்தேடி வேட்டையாடி அன்றைய உணவை முடிக்கின்றன! ! அதேபோல் காட்சிசாலை விலங்குகளும் நினைவைத் தடவிச்சென்றன! அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம்.? நாம் கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்துடனும்., அடுத்த சந்ததிக்கான சொத்துக்களுடனும், ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்ற வினாக்களுடனும் நாகர்கோவிலின் தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஒரு பழமையான சைவ விடுதியில் நுழைந்தேன்.

இப்போதெல்லாம் பெண்கள் வேலைக்கு நுழையாத துறையே இல்லை எனலாம். அதில் சில ஆச்சர்யங்களும் , அசௌகரியங்களும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல் போடும் இடங்களில் உள்ள பெண்கள் தங்கள் கடமையை மிகச்சரியாக ஆற்றினாலும், வேறு சில இடங்களில் பெண்களிடம் , பொருள் பெயர் சொல்லி கேட்க முடியாமல் ஆண்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் வீட்டில் ஒரு ஆண் உணவு பரிமாறுவதைவிட பெண்கள் பரிமாறுவதில்..பரிவும் கலந்திருப்பதாகவே தோன்றும். ஏனெனில் ஆண்கள் போதும் என்றால் உடனே நிறுத்திவிடுவார்கள். அதுதான் சரியானதும்கூட....! இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க )! 'என்று பெண்கள் ஒரு கவளம் அதிகம் வைக்கும்போது பரிமாறுதலின் வாஞ்சை தானாகவே தட்டில் வந்து விழுந்துவிடும். அதனால்தானோ என்னவோ அந்த உணவு விடுதியிலும் பெண்கள் சிலரையும் பரிமாறுபவர்களாக வைத்திருந்தார்கள். ஆனால் உணவு விடுதியில் அதிகமாக ஒரு கவளம் விழாவிட்டாலும் , ஆண்களைவிட ஒரு படி மேல்தான் கவனிப்பு இருக்கும் என்ற கணிப்பு எனக்கு!

வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , நல்ல முக அலங்காரத்துடன்..ஒருவர் வந்து என் அருகில் நின்றார்...சாருக்கு என்னவேணும்?'

இட்லி!

வடையும் வைக்கச்சொல்லவா?

ம்..வைங்களேன்..!

வேணி..! 6ம் நம்பருக்கு 2 இட்லியும் வடையும்..சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..

இவ்வாறாக எனக்கான காலை உணவை நான கேட்டுவிட்டுக் காத்திருந்தபோதுதான் எனக்கான அந்த அதீத அதிர்ச்சியும் காத்திருந்தது.

(தொடரும்..)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...