Tuesday, August 30, 2011

மரணதண்டனைக்கு மரணதண்டனையா?இப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை  கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது. வாதங்கள் 


1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது. 

2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா? இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்? 3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிடத்தாமதமாக கருணை மனுவை நிராகரித்தது , தனி மனிதர்களாக அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும்.? இனியேனும் அவர்களை நிம்மதியாக, திருந்தி வாழவிடுவதுதான் மனிதாபிமானம்.! 4. சோனியா காந்தியின் பழிவாங்கும் உணர்வுக்கு, பலியான தமிழர்கள் லட்சக்கணக்கானோர். ! இப்போது தனது தலைமையிலான அரசின் பங்காக, இந்த மூன்று தமிழர்களையும் கொன்று என்ன சாதித்துவிடப்போகிறார்? அப்படியே கொன்றாலும்.. இறந்த ராஜீவ் காந்தி திரும்ப வருவாரா? 5. மகாத்மா காந்தியின் கடைசி வேண்டுகோள். கோட்சேயை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதுதான். அத்தகைய மாமனிதரின் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடத்தும்போது , அஹிம்சை வழி வந்த ஒரு தேசம். தவறுசெய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களை மன்னித்தல்தானே மாண்பு! 6. ராஜீவின் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.! ஆனால், அதற்காக ஒட்டுமொத்த தமிழினமே அழியவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரஸ் அரசுடன், தமிழக காங்கிரசாரும் ஒத்துப்போவது இன்னும் கொடுமை! இந்த நேரத்திலாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால், பின்னர் எப்போதும் கொடுக்கமுடியாதபடி போய்விடும். 7. பேரறிவாளன் உண்மையிலேயே நிரபராதி. அவருக்கு ராஜீவை கொல்லப்போகிறார்கள் என்று தெரியாது. தவறு செய்தவர்களின் கூட இருந்த காரணத்துக்காக மரணம் என்பதெல்லாம் சர்வாதிகார நாடுகளில்கூட இல்லாத நடைமுறை! இது முழுமையான பழிவாங்கும் உணர்வைக்காட்டுகிறது. அல்லது யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் பலியிடப்படுகிறார். 8. மரணதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற வாதம் இரண்டாம் பட்சம்தான்.! இவர்களை விடுவிக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். ! அதுதான் ஈழத்தமிழர்களுக்கு , நாம் தரும் சிறு ஆறுதலாக இருக்கும்! 9. கருணை மனு ஒன்றை 12 ஆண்டுகளாக தன் அலுவலகத்தில் வைத்திருந்த குடியரசுத்தலைவர்கள் அந்தந்த கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால், மூவரும் விடுதலையாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். 10. தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து , ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் , மீண்டும் கருணை அடிப்படையில் பரிசீலித்து, தண்டனையைக்குறைக்க வாய்ப்பிருக்கிறது. 11. தெரிந்தோ, தெரியாமலோ, செங்கொடி என்ற இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளது உயிருக்கு மதிப்புக்கொடுத்தாவது மூவரின் உயிரைக்காப்பாற்றுவது ஓவ்வொரு தமிழரின் கடமையாகும். 12. இது ஒரு தொடர் வினைதான்.. ! ராஜீவ் அமைதிப்படை அனுப்பினார். அது அட்டூழியம் செய்தது. அது தாங்காமல் புலிகள் ராஜீவைக்கொன்றனர். கொன்றவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தலைவர் பிரபாகரனையும் ,இயக்கத்தையும் - பழிவாங்கும் நடவடிக்கையாக – இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, இல்லாமல் செய்தாகிவிட்டது. அவ்வளவுதானே..மீண்டும் ஏன் சோனியா தன் வலியுறுத்தலால் குற்றவாளிகளுக்கு உடந்தை என்ற காரணத்துக்காக, இந்த அப்பாவிகளை தண்டிக்கவேண்டும்? 13. இது முழுக்கமுழுக்க மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கையும், போராட்டமுமே தவிர, சட்டத்தை வளைக்கவோ, தவறுகளை நியாயப்படுத்தவோ அல்ல! அதை மனதில் கொண்டால் இவர்களை விடுவித்து மூன்று குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம். 14. ராஜீவ்காந்தி என்ற ஒரு மனிதனின் உயிர் இழப்புக்கு, சோனியா இன்னும் எத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்களைப் பலிவாங்கப்போகிறார்? தமிழர்களை சொரணைகெட்டவர்களாக மத்திய அரசு நினைத்துக்கொண்டு எல்லா உரிமைகளிலும் கை வைக்கிறது. கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள் என்று திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் செயலில் இந்திய அரசே ஈடுபடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சரியோ தவறோ, ஒரு மாநிலத்தின் உணர்வை மதிக்காத நாட்டில் இறையாண்மை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? 
                                                                எதிர்வாதங்கள்: 

1. யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்ற யூகம் விடுத்து, அந்த யார், யார் என்று வெளிப்படையாக காட்டிக்கொடுக்க யாராவது முன்வந்தால்...அவர்களைக் காப்பாற்ற முற்படுவதன் நோக்கம் முழுமையாகும். 2. முருகனின் மகளை முன்னிருத்தும் ஊடகங்கள், ராஜீவ் இறக்கும்போது அவருக்கும் சிறிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பிரியங்கா என்று நினைவில் வைத்திருக்கிறதா? 3. ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து மூவரையும் விடுவிப்பது முக்கியமா? அல்லது தப்பு நடந்துபோச்சு! அதுக்காக நீங்க குடுக்குற தண்டனையை எல்லாம் ஏத்துக்க முடியாது என்று சொல்வது சரியா? 4. மரணதண்டனை கொடுக்கப்பட்டபின், ’தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்’ என்ற சொற்பிரயோகம் தேர்ந்த அரசியலாகத்தான் படுகிறது. அப்படியெனில், தமிழர்கள் கொல்ல உதவுவார்கள். தப்பிக்க நினைப்பார்கள் என்ற பொதுக்கருத்தை இந்தியர்களிடத்தில் விதைக்கிறோம். மேலும் அவர்கள் நிரபராதிகள் என்று வைகோ போன்ற வழக்கறிஞர்கள் முன்னரே தானாக ஆஜராகி வாதிட்டிருக்கவேண்டாமா? 5. இன்றைய ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கும், அவர்களை கடைசி கட்டத்தில், கொலைகார இலங்கை அரசுக்கு வலியப்போய் உதவிய இந்திய அரசின் போக்குக்கும் அடிப்படைக்காரணம் ராஜீவ் காந்தியின் கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. 6. அப்படிப்பார்க்கப்போனால், அத்தகைய சதிச்செயலுக்கு உடந்தையாய் இருந்த (அல்லது சட்டத்தால் நிரூபிக்கப்பட்ட) இந்த மூவரும், இன்றைய ஈழ நிலைக்கு எவ்வளவு பெரிய காரணியாய் இருந்திருக்கிறார்கள்? இவர்கள் அதைச்செய்திருக்காவிட்டால், இலங்கையில் இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா பார்த்துக்கொண்டிருந்திருக்காது. 

7. ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கைத் தமிழருக்குச் செய்த அக்கிரமங்கள் தெரிந்திருந்தும், அப்போது வாளாயிருந்துவிட்டு, அவர் மரணத்தின் அனுதாப ஓட்டுகள் பெற்று ஆட்சிகளை மாறி மாறி அனுபவித்த, அத்தனை அரசியல் கட்சிகளும், இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது ஒரு பொய் அரசியல் அன்றி வேறேதும் இல்லை. 

8. திட்டமிடாமல் செய்யப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பில் அப்பாவி மாணவிகள் இறக்கக்காரணமாயிருந்தவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத சமூகம், ஆண்டுக்கணக்கில், திட்டமிட்டு, ஒரு தேசத்தின் தலைவரைக் கொலைசெய்தவர்களுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டவேண்டும்.? மரணதண்டனை கூடாதென்பவர்கள் அதற்கும் துணை போயிருக்கலாமே? 

9. உண்மையில் இலங்கையில் தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு ஈழத்தமிழரும், தமிழகத்தமிழரும், ராஜீவின் கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தாலும், இருபது ஆண்டுகள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை. 

10. மேம்போக்காக இவர்களது மரணதண்டனையை எதிர்க்கும் அனைவரும், ஒருவினாடி அமர்ந்து சிந்தித்தால், தனது அண்ணனையோ, அப்பாவையோ திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் நீதி என்று ஒத்துக்கொள்வார்கள். அல்லது அவர்களே திட்டமிட்டுக் கொல்வார்கள். 

11. செங்கொடி என்ற அந்தப்பெண் இறப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, தியாகப்படுத்தவோ முடியாது. அப்படிச்சொல்பவர்கள் செய்யட்டுமே அதை…! அது நமது போராட்டத் தலைவர்களாக இருந்தால் இன்னும் பலன் இருக்கும். 

12. அப்சல் குரு அல்லது கசாப்பை தூக்கிலிடக்கூடாது என்று ஐந்துபேர் தீக்குளித்தால் அவர்கள் தியாகி என்று கொண்டாடுமா இந்தச் சமூகம்? இந்த வழக்கை முறையாக எதிர்கொண்டு மூவரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு உணர்ச்சிமயமாகக் கையாள்வது இன்னும் செங்கொடிகளை உருவாக்குமே ஒழிய, தீர்வைத்தராது. 

13.முத்துக்குமரனின் தீக்குளிப்பில் இருந்த ஓலம் உண்மையானது. வன்மையானது. அது அப்பாவிகளின் மரணத்துக்கு எதிரானது. அதில் ஒன்றுகூடுவதில் ஒரு நியாயம் இருந்தது. அதையும் செங்கொடியையும் ஒப்பிடவே முடியாது. பாவம்.. அந்தப்பெண்ணின் பெற்றோரைக்கேட்டால் தெரியும் அவள் இழப்பு என்னவென்று! 

14. கருணை மனுவை பத்து ஆண்டுகள் வைத்திருந்த குடியரசுத்தலைவர்களை என்ன செய்யப்போகிறோம்? அது கருணை அடிப்படையிலான மனுதான்..அதை வைத்து நிரபராதி என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். 

15. இதற்காகப்போராடும், குரல்கொடுக்கும் தலைவர்களில் ஒருசிலருக்கு குற்றத்தின் உண்மையான இழையில் பங்கிருக்கிறது. அதை மறைக்க அவர்கள் போடும் இந்த இன வேஷம், மனிதாபிமான வேஷம், நீதி வேஷமெல்லாம் ‘மரணதண்டனை’ உறுதி என்று தெரிந்தபின் தான் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கும் தெரியும் இனி இதை மாற்றமுடியாது என்று! 

16. அன்னா ஹசாரேவின் போராட்டத்தை கேலி பேசியவர்கள், இந்தப்போராட்டத்தை ஆதரிப்பது ஒருவித முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது. ஊழலை ஒழிக்கமுடியாது. ஆனால் மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது எப்படி சாத்தியம்? ஒரு ஊழல் அரசியல்வாதி..அவனுக்கு வளைந்துகொடுக்காத அதிகாரி.. இவரை அவன் திட்டமிட்டுக்கொல்கிறான். அதற்கு உடந்தையானவர்களையும் சேர்த்து கைது செய்து மரணதண்டனை கொடுக்கிறது நீதிமன்றம்! அவனை விடுவியுங்கள். ஊழலை ஒழிப்பது ஒன்றும் பெரிதில்லை. மரணதண்டனையை ஒழிக்கவேண்டுமென்பது எப்படி நியாயமாகும்? 

17. மனசாட்சியைத் தொட்டுப்பார்த்தால், மூவரின் மரணதண்டனையை ரத்துசெய்யக்கோரி போராடுபவர்களுக்கு தங்கள் ஆதரவை, இருந்த இடத்திலிருந்து தரும் யாரும் அதை உளப்பூர்வமாகச் செய்யவில்லை. ஊரோடு ஒத்து வாழ்ந்துவிடுவோம். எதற்கு வம்பு? பின்னர் நம்மையும் திட்டுவார்கள் என்றுதான் எண்ணிக் கூடுகிறார்கள். தங்கள் கருத்தை ஆரோக்கியமாக முன்வைக்க இந்த சமூகமும், அமைப்புகளும் விடுவதில்லை. 

இன்றைய சூழலில் 

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 

இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

முதலில் குற்றவாளியைக்கண்டுபிடிப்போம். அல்லது காட்டிக்கொடுப்போம். பின்னர் நிரபராதிகள் தானாக வெளிவருவார்கள். இது போன்ற வாதங்களுடன் பதிவுகள்


Friday, August 26, 2011

ஓமப்பொடி- 2
          சென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.

    அதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                         ++++++++++++++++++++++

     நேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா தியேட்டர் வாசல் வரை சென்ற என்னை – திடீர் ரவா உப்புமாவைப்போல்,- நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கிவிட்டார்கள். நானும் முடிந்ததைச் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், படத்தின் நாயகன் கரண், இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சிவாஜி, பழனி,  இன்னும் சில நண்பர்கள் பாராட்டினார்கள். நன்றி சொல்லி எஸ்கேப்பானேன்.  

என் நேற்றைய அறிவிப்புகளில் சில :

# திறமைசாலிகளை OUTSTANDING என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஆகவே இங்கிருக்கும் திறமைசாலிகள் அனைவரும் உள்ளே வரவும்.

-    இயக்குநர் பொன்வண்ணன், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதால், தானும் ஒரு தயாரிப்பாளர்தான் என்று சொல்லிக்கொண்டார். அப்போது மேடையிலிருந்த இயக்குநர் சந்தானபாரதி தானும்தான் என்று கை தூக்கினார். ஆகவே அவரைப் பேச அழைத்தபோது…
#  சம்பளத்தைக்குறைத்துக்கொண்டதன் மூலம், இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான திரு.சந்தானபாரதி இப்போது பேசுவார்.

#  இப்போது இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது இரண்டு நிமிட உரையை வழங்குவார். (நேரமில்லாத காரணத்தால்)

#  அரை நிமிடம் சேமித்த அற்புத மனிதருக்கு நன்றி! (ஒன்றரை நிமிடம் பேசியதற்காக)

# இது அரோவணா பிக்சர்ஸ் அல்ல! எல்லோரையும் அரவணை பிக்சர்ஸ்!

# படத்தில் ஒரு செகண்ட் வந்து சென்றதால் செகண்ட் ஹீரோவான பழனி அவர்களை அழைக்கிறோம்.

# எல்லோரையும் வாரிய ஜெகன் அவர்களே வாருங்கள் ! நாங்களும் வாருகிறோம்!

# இது இசை மீட்டும் விழா ! திறமைசாலிகளை திசை காட்டும் விழா! உங்கள் ஒலி ரசனைக்கு விசை கூட்டும் விழா!

இப்படிப் போயிற்று!  முழு நிகழ்விலும் அரங்கத்தில் ஒருவித புன்னகை மனநிலை நிலவியது.
இசையமைப்பாளர் P.B. பாலாஜிக்கு நன்றி!  
அந்த நேரத்தில், எனக்காக சட்டை வாங்க அதீதமாக முயற்சித்த அன்பு நண்பர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு நன்றி!


வெங்காயம் திரைப்படம் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பாராட்டினார். நண்பர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இந்தவாரத்தில் பார்க்கவேண்டும். நல்லபடம் வேறு! தியேட்டரிலிருந்து தூக்காமல் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தேமுதிக வில் நிறவெறி அதிகம் போலிருக்கிறது. அவர்கள் தலைவரின் நிறத்தையே மையப்படுத்தி போஸ்டரடித்து , கருப்பு எம் ஜி ஆர் என்று வர்ணித்திருக்கிறார்கள். தோல் நிறம் பார்த்து வாழும் கூட்டம் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்கள்! வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற! செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ? கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க!! (’கா’னாவுக்கு ’கா’னா)


இந்தப்பாடலைக் கேட்டாலும் , பார்த்தாலும், இதயத்தை ஏதோ செய்கிறது. உற்சாகம் தெரிக்கும் வார்த்தைகளுடன் 2008ம் ஆண்டு வலம் வந்த பாடல் இது.! இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? இருக்கிறார்களா? – பயமாக இருக்கிறது!


----------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 15, 2011

நம்பிக்கைச் சுதந்திரம்

நம்பிக்கை
       வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம்.

சுதந்திரம்

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன்.


     நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே?

அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்? வெட்கமாக இருக்கிறது ! இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா?

ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்!

நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

ஏனென்றால்...

கேட்டால், கிடைக்கும்!!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...