Saturday, January 16, 2010

சூப்பரா கீதுபா 2010!

சின்னச்சின்ன நிகழ்வுகளால் நிறைந்தது வாழ்நாள்!

2009 வெளியே போய்....அழகான 2010 ஐ அனுப்பி வைத்திருக்கிறது!

போகும்போது அது பல விஷயங்களைச் செய்துவிட்டுச்சென்றிருக்கிறது.
அதுவும் டிசம்பரில் ஆரம்பித்த ஆட்டம் இன்னும் முடியவில்லை.
நட்பு விறுவிறுவென்று தன் எல்லையை பிரம்மாண்டமாக விரிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த கிறிஸ்துமஸுக்கு இரண்டாம் நாள், திருப்பூரில் பரிசல் கிருஷ்ணாவைச்சந்திக்க.. கூடவே ஈரவெங்காயம் சுவாமி, பேரரசன் செந்தில், முரளிகுமார் பத்மநாபன்,.நிகழ்காலத்தில் சிவா என அன்புசால் நண்பர் கூட்டம்!.

அது மிகச்சிறந்த சந்திப்பாக அமைந்துவிட..அன்று நடந்த கூத்து யூ ட்யூபில்... சுரேகா என்றோ பரிசல் என்றோ தேடினாலே... வந்து நின்று லந்து செய்கிறது. நன்றி : பேரரசன் செந்தில்

அடுத்து சென்னை புத்தகக்காட்சி..
வாசலிலேயே எனக்காகக் காத்திருந்து, இதை வாங்கலாம்.. இது வேண்டாம் என்று உரிமையுடன் அன்பு காட்டிய அப்துல்லாவை விட சிறந்த நட்பை யாரால் கொடுக்கமுடியும்?

நண்பர் நர்சிம்முடன் செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் மிகவும் அன்பு பொருந்தியதாக இருந்தது. அதுவும் கார்னர் ஸ்டாலில் குடித்தோமே? அது பேரு என்ன பாஸு?

சிறிது நேரமே இருந்தாலும், சிரித்துக்கொண்டே கூட இருந்த அன்பு நண்பர் அ.மு.செய்யது! நீங்க பையை வச்சுக்கிட்டு வெள்ளந்தியாகப்பேசியது கண்ணுக்குள்ளயே நிக்குது நண்பா!

எது சொன்னாலும் சிரித்து ஏற்றுக்கொள்ளும் கேபிள் சங்கர் அண்ணன் நெருக்கமானவராக ஆகிவிட்டார். கொத்து பரோட்டா போட்டே பதிவுலகைக் கவுத்தவராச்சே!

சிரித்த முகமாக, பல எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட என்சைக்ளோபீடியா டாக்டர் புருனோ அவர்கள் பா.ரா வையே கவர்ந்தவர்! நானெல்லாம் எம்மாத்திரம்?

என்ன பாஸு ! நான் பஸ்ஸுல போய்க்கிட்டிருந்தேன்..! அப்படியே புல்லரிச்சிருச்சு! என்று அழகாகப் பேசியஅதிஷா எடுத்திருக்கும் வாழ்க்கை முடிவு கண்டிப்பாக உயர்வில் கொண்டு போய் விடும் என்று இங்கேயே
வாழ்த்துகிறேன். (ரிஸ்க் எடுங்க அதிஷா! அதுதான் டஸ்கே இல்லாத டான்!)

தோளில் பையைப் போட்டுக்கொண்டு பா.ரா அருகில் அமர்ந்து எல்லாவற்றையும்அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த லக்கிலுக்.. .யுவகிருஷ்ணா ! (புதிய தலைமுறைக்கு விரைவில் புதிய 'தலை'யாக வாழ்த்துக்கள் ஜி! )

இந்த மனுஷனா இவ்ளோ விஷயத்தை கிரகிச்சு, நமக்குப் புரியறமாதிரியும், சுவாரஸ்யமாவும் எழுதினார் என்று வியக்கவைக்கும் எளிமையுடன் பா.ராகவன். முன்னரே தெரிந்ததுபோல், மிக அன்பாக , நட்பாக, வாஞ்சையாக பேசும் அன்பு உள்ளம் ஒரு எழுத்தாளருக்கு வாய்த்தால் அவர் எவ்வளவு அழகாகத்தெரிவார்
என்பதை ஒருமுறை பா.ரா வைப்பார்த்துப் பேசினால் தெரிந்துகொள்ளலாம். நன்றி : கிழக்கு பதிப்பக பக்கத்து நடைபாதை!

திரையுலகத்தில்...பல்வேறு சந்திப்புகள்..பல்வேறு நட்புகள்! பிரபலங்களின் அன்பு முகங்கள், குணங்கள், உதவும் உள்ளங்கள் என....

சூப்பரா கீதுபா 2010!
Saturday, January 2, 2010

நம்புங்க டீச்சர்! - 28ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்..

தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி..

நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்..

நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார்.

அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ..

'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார்.

அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார்.

மேடம்..! நீங்க அந்த ரெண்டு பிள்ளைங்களையும் அரசுப்பள்ளில படிச்சதுக்காக அவமானப்படுத்தினீங்களாம். அரசுப்பள்ளிகளைப்பத்தி நீங்க என்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க? அதுவும் எங்க ஊரில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி பத்தி என்ன அபிப்பிராயம் வச்சிருக்கீங்க?

ஆசிரியையகள்...ஏதோ விவகாரம் இருக்கிறது என்று உணர்ந்தாலும்..தன் தவறை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்...

எல்லா அரசுப்பள்ளிகளுமே மோசம்தான்..ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதில்லை.! பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை ! எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது...! என்றனர்.

அந்தப்பிள்ளைகளை எந்தப்பாடத்தில் வேணும்னாலும் நீங்க சோதிச்சுக்குங்க! அவுங்க ஜெயிப்பாங்க! ஏன்னா நான் அந்தப்பள்ளிக்கூடத்தை...ஜெயிக்கிற பிள்ளைங்களை உருவாக்குறதாத்தான் நடத்திக்கிட்டிருக்கேன். வேணும்னா ஒரு சவால் விடுறேன். இந்த வருஷம்னு இல்லை. 10வது, 12வது பொதுத்தேர்விலயும் உங்க பள்ளியின் முதல் ரெண்டு இடங்களை அவங்கதான் எடுப்பாங்க! முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க! என்றார்.

இல்லை சார் ! நாங்க அதுக்காகச் சொல்ல வரலை!

எதுக்காகச்சொல்லியிருந்தாலும் சரி மேடம்! நீங்கல்லாம் கண்டிப்பா தனியார் பள்ளில படிச்சுட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை. அரசுப்பள்ளில படிச்சிருக்கணும். அப்படிப் படிச்சு முன்னேறி..இப்ப ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்கீங்கங்கிற காரணத்துக்காக....அவுங்களை அவமானப்படுத்துறதை நிறுத்துங்க! எல்லாரையும் சமமா பாவிச்சு..சொல்லிக்குடுங்க! யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாப்போம்..! என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அந்த தலைமை ஆசிரியர்.

அதேபோல்...10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் அந்த இரு மாணவிகளும்தான் முதல் இரண்டு இடங்களைப்பிடித்தார்கள்.

சத்தமில்லாமல் இந்தச்சாதனையைச் செய்துவிட்டு இன்னும் இது போன்ற அற்புத மாணவர்களை அனுப்பிக்கொண்டே பள்ளியை முன்னேற்ற சிந்தித்துக்கொண்டிருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியர்..

திருச்சி மாவட்டம்...மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆ. டேனியல் ஜான் கென்னடிதான் அவர்!

அவர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள்! ....


(தொடரும்..)

Friday, January 1, 2010

முதல் நாள்!காலப்பெட்டியின்
ஒரு அடுக்கை
திரும்பிப்பார்க்கவும்
அடுத்த அடுக்குக்குள்
நுழைந்து கொண்டு
ஏதாவதுகளை
அடைப்பதற்கும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது!

சென்ற ஆண்டின்
தவறுகளுக்கும்
வாழ்நாள்
தவறுகளுக்கும்
மூடுவிழா நடத்த
எண்ணி
முழுமூச்சாய்
முடிவெடுக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.

இனிவரப்போகும்
வாழ்க்கையின்
வரையறைகளை
நோக்கத்தோடு
ஏற்றுக்கொள்ளவும்
நோக்கத்தை
மாற்றிக்கொள்ளவும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


நடு இரவை
நாளின் முதலாய்
நிறைய நாட்கள்
பார்த்தாலும்
உள்ளம் கவர்ந்தோரின்
பிறந்தநாள் தவிர
கொண்டாட்டம்
நிறைந்த இரவாக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


அந்த நாள்
இந்த நாளாய்
இந்த நாள்
நம் சொந்த நாளாய்
அமைந்திருத்தல்
அன்பு காட்டவே!

அன்புகாட்டிய
அனைவருக்கும்
நன்றியால்
அன்பு சொல்லி..

அழகான
ஆண்டு ஒன்று
நம் மடியில்
தவழ்கிறது.
அன்புகொண்டு
ஆராதிப்போம்
அத்தனையும்
வெற்றியாக!
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...