Tuesday, May 19, 2009

உன்னை நாங்கள் கொன்றுவிட்டோம்!

விபரம் தெரிந்து
விளையாடும்போதெல்லாம்
வீரத்துக்கு
உன்னைதான்நினைப்பேன் !

எதிரிகளை
எப்படி கையாள்வது என்று
உன் யுக்தி கண்டு
ஊரெங்கும் சொல்லுவேன்!

தங்க இடமின்றி
தடுமாறியதலைமுறைக்கே
தலைவன் நீயென
தற்பெருமை கொள்ளுவேன்!


உன் எல்லாச்செயலிலும்
நியாயம் கண்டுபிடித்து
உனக்கே சொன்னால்
மகிழ்வாய் என்றெண்ணுவேன்!

நீ செய்தது
தவறாகவே இருந்தாலும்
செய்தது நீ என்பதால்
சரியென்று வாதிடுவேன்.

துன்பியல் சம்பவமென்று
துணிவுடன் கூறியதற்கு
என்ன ஒரு தமிழ் வார்த்தை
என்று எக்காளம் பேசிடுவேன்!

எப்படி ஊடுருவினாய்
அண்ணனே!
எல்லா இதயங்களிலும்
எந்தவிதச் சிரமமுமின்றி!?

நீ இறந்துவிட்டாய்
என்று வரும்
ஏராள வதந்திகளில்
இதுவும் ஒன்றாய் இருக்காதா?

உன்னை
நாங்கள் எங்கள்
இயலாமையால்
கொன்றுவிட்டோம்!

எங்களை
நாங்களே
எதிர்க்காமல்
தின்றுவிட்டோம்.

கையாலாகாத அயோக்கியன்
கவிதை எழுதுகிறேன்.
கண்ணீர் என்னமோ
கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

Sunday, May 17, 2009

நரிகோரைப்பல்லை வச்சு ஒரு இழுப்பு இழுத்துப்பாத்தேன்...
அந்தக்காஞ்சு போன மாமிசம் ஜவ்வு மாதிரி வந்ததே தவிர சாப்புட முடியும்னு தோணலை!

என்னடா இது இப்படி ரெண்டு நாளா எங்க தேடியும் சரியான ஆகாரமே கிடைக்கலையேன்னு கவலையா இருந்தது.

அப்படியே பொடி நடையா நடந்தேன். காட்டுக்குள்ள இருக்குற ஒத்தையடிப்பாதைல அந்தக்கிளவி கூடையத்தூக்கிக்கிட்டு போச்சு...கையில ஒரு பெரிய கம்பு இருந்தது.

கூடையில ஏதாவது திங்கிற சாமானாத்தான் இருக்கும். ஆனா எப்படி எடுக்குறது.. கிளவியை அடிச்சுச்சாப்பிடும் அளவுக்கு நமக்கு பலமில்ல!
கிளவிக்குத்தெரியாம அதை பின் தொடர்ந்தா ஏதாவது சிக்குதான்னு பாக்கலாம்.

அந்தக்கிளவி ஏதோ மொணகிக்கிட்டே போயிட்டிருந்தது.

மரங்கள் அடர்த்தி கொறஞ்சு..ஒரு மண்ரோடு தென்பட்டுச்சு! ஆஹா ...கிளவி அதுல இல்ல ஏறிப்போகப்போகுது...நமக்கு வேற ஏதாவது கிடைக்குதா பாப்போம்னு நினைச்சுக்கிட்டே திரும்பறதுக்குள்ள கிளவி என்னைப்பாத்துருச்சு....வீச்சுன்னு கத்திக்கிட்டே கம்பைத்தூக்கி என்மேல வீச, எகிறி ஓடினேன் ஒரு ஓட்டம்...பொசுக்குன்னு ஒரு பெரிய மரத்துக்குப்பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டேன்.

அய்யய்யோ....யாராவது இருக்கீகளா...நரி...நரின்னு கிளவி கத்த...ஒரு ஆள் ஒடியாந்தான்.

என்ன கெளவி?

எம்பின்னாடி ஒரு நரி வந்துச்சு! -கூடைய புடுங்கிடுமோன்னுதான்..!

சரி..அதான் காட்டுக்குள்ள நெறயா திரியுதே..ஒண்ணும் செய்யாது போ! இந்தா கம்பு...! கெளம்பு..!

கிளவி கொஞ்ச தூரம் போனாள்..நான் ஒரு மேட்டுப்பகுதி மரத்தடியில் நின்னுக்கிட்டேன். அவ கூடைல அப்புடி என்னதான் இருக்குன்னு பாத்துடணும்!

போனவள் கொஞ்சம் நடமாட்டம் நிறஞ்ச எடமாப்பாத்து..ஒரு மரத்தடில உக்காந்தாள். கூடையை இறக்கினாள். அதுக்குள்ளேயிருந்து ஒரு சாக்கை எடுத்து விரிச்சா ! மறுபடியும் கூடைக்குள்ளேருந்து வட்ட வட்டமா ஒரு திண்பண்டத்தை எடுத்தா...நடுவுல ஒரு ஓட்டை இருந்தது. அதை எடுத்து அடுக்கினா...நான் மெதுவா இன்னும் கொஞ்சம் கிட்டக்க போனேன்.. எதிர் வரிசைல மரமா இருந்ததால, நான் இருக்குறது தெரியாது...! கிளவி கத்த ஆரம்பிச்சா...

வடை..வடை..!


அட.. அதுதான் வடயா? ரெண்டு மூணுபேர் வாங்க ஆரம்பிச்சாங்க...! வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க..எனக்கு எச்சி ஊற ஆரம்பிச்சுருச்சு! என்னய கம்பை வீசி துரத்தின இல்லை? இரு...உங்கிட்டேயிருந்து வடைய லாவுறேன். ம்ம்...எப்புடி எடுக்குறது ?

யோசிச்சுக்கிட்டே கிளவியைப்பாத்துக்கிட்டிருக்கும்போதே... அவ உக்காந்திருந்த மரத்து மேலேருந்து ஒரு காக்கா 'சொர்ர்' றுன்னு பறந்து வந்து ஒரு வடைய லாவிக்கிட்டு பறந்தது. கிளவி கத்தி களேபரம் பண்ணி...கம்பை மறுபடியும் வீச...திருட்டுப்பய காக்கா..நிமிசமா தப்பிச்சுருச்சு..

ஆஹா..இந்தக்காக்காயால நம்ப பொழப்பு போச்சே...இனும கெளவி இன்னும் உஷாராயிருமே..ன்னு நினைச்சுக்கிட்டுருக்கும்போதே...காக்கா கிளவிக்கு எதிர்த்திசையில் பறந்துவந்து காட்டுக்குள்ள பூந்துடுச்சு...சரியா நான் ஒளிஞ்சிருந்த மரத்து மேல வந்து உக்கார, அடிச்சுதுரா யோகம்..!

நம்பளைத்தான் தந்திரத்துக்கு அடையாளமா சொல்வாய்ங்களேன்னு ,பட்டுன்னு...ஒரு யோசனை தோண..

ஏ...காக்காவ்!

திடுக்குன்னு முழிச்ச அது...யாது..யாது? ன்னுது. வாய்ல வடை வச்சிருந்ததுல சரியா பேச்சு வரலை!

அட..கீழ பாரு..!

ஓ நதியா..!

வேற எதுவுமே பேசாம நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.
ஆமா..நீ..நல்லா பாடுவியாமே..ஒரு பாட்டுப்பாடேன்.. ரொம்ப சந்தோசப்படுவேன்.

கொஞ்சம்கூட யோசிக்காம...வாயை அகலமாத்திறந்தது. அது வாயிலேருந்து சத்தம்வந்ததையே நான் பாக்கலை..வடை என்னை நோக்கி கீழ வந்துக்கிட்டிருந்தது.

'சொத்' ன்னு வடை விழ..அப்பதான் அதை கிட்டக்க பாத்தேன். நல்ல அழகா வட்டமா , மொத்தமா இருந்தது ! கிட்டக்க போய் மோந்து பாத்துட்டு வாசனையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே..காக்கா...

அய்யய்யோ.. நரி! அது என் வடை! தயவு செஞ்சு சாப்டுறாத...குடுத்துரு..!

சரி..சரி..நான் சாப்பிடலை...வா..வந்து எடுத்துக்கிட்டு போ !

நான் சொன்ன மறுவிநாடி கீழ பறந்து வந்தது.

நானும் ஒரு வினாடி கூட தாமதிக்கலை! கீழ என் உயரத்துக்கு வந்தபோதே ஒரே அடி...
அது தடுமாறுறதுக்குள்ள...அடுத்த அடி...காக்க சொத்துன்னு காலடில விழுந்தது. என்னமோ சொல்ல வந்தது. ரெண்டு ரெக்கயையும் பிச்சு, சாவகாசமா தின்னேன்.

என்ன பண்றது...ஒண்ணுமில்லாததுக்கு காக்காவாவது கிடைச்சதே...வடைய எவன் திம்பான் ? ! அதுவும் காக்கா எச்சியை !

Tuesday, May 12, 2009

ஓ - போடப்போறேன்

அன்பு நண்பர்களே..!

உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்
49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்..

வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்!

அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..
மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..!


நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.

விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.

Sunday, May 3, 2009

நியூட்டனின் 3ம் விதி - அட !

தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.

அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்!
முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன்குரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திருமணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள்.

அடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் ! இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று !
அதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமிடங்களுக்கு சேனல்களை நிறுத்திக்காட்டுகிறான். ஜேப்பி போலீஸின் உதவியை நாட,
அவர்கள் செல் நம்பர் மூலம் ஆளைக் கண்டுபிடிக்க, அது ஜேப்பியின் சின்னவீடான தாரிகாவை அடைகிறது. போலீஸ் விபரம் தெரியாமல் அவள் மீது கைவைக்க, விஷயம் குரு மூலமாக மீடியாவுக்குப்போய் மானம்
கப்பலேறுகிறது.

ஜேப்பியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கும் குரு , அவனது அலுவலக பாத்ரூமிற்கு வரச்சொல்லி அங்கும் ஒரு விளையாட்டு காட்டி - முழுமையாக பயமுறுத்துகிறான். பின்னர் தனியாக ஒரு ஏரியாவுக்கு
வரச்சொல்லி, அங்கு போக்குக்காட்டி அவனைவிட்டு ஒரு காரை எடுக்கச்சொல்ல, ஜேப்பிக்கு திக் என்கிறது. ஏனெனில் அது அவனது கள்ளப்பணம் வைத்திருக்கும் கார். அதை எடுத்துக்கொண்டு கோயம்பேடு
பஸ்டாண்டுக்கு வரச்சொல்கிறான். அங்கு -குருவைத்தாக்க -தேவா (யுகேந்திரன் ) என்ற ரவுடியின் ஆட்களையும் ஜேப்பி வரவழைத்திருக்க, அதைக்கண்டுபிடித்து, அவர்களுக்கு தர்ம அடி வாங்கிக்கொடுத்து, அதிலிருந்து ஜேப்பியை
காப்பாற்றுவதுபோல் நடித்து, தன்னைப்பற்றி ஒரு பெரிய பயத்தை உருவாக்கி தப்புகிறான்.

ஆனால் பஸ்டாண்டில் , வருமான வரி அதிகாரிகள் காரில் உள்ள கள்ளப்பணத்தை கைப்பற்றுகிறார்கள்.
இப்படியே ஒவ்வொன்றாகச்செய்து ஜேப்பியின் எல்லா கருப்புப்பக்கங்களையும் வெளிக்கொண்டுவந்து , அலற அடிக்க, தன்னை மிரட்டுவது யார் என்றே தெரியாமல் ஜேப்பி தடுமாற, தேவா மூலம் ஐடியா கிடைக்க , குரு ,ஜேப்பி கையில் சிக்கி சின்னாபின்னமாகி, கடைசியில் 12 மணிக்கு ஜேப்பியைக் கொன்றானா இல்லையா என்பதுதான் கதை..!

ஒரு சில லாஜிக் மீறல்களை நீக்கிவிட்டுப்பார்த்தால், காட்சிகளை வீணாக்காததற்கு டைரக்டருக்கு ஒரு பெரிய பூங்கொத்து!

சூர்யாவும் மிகவும் அடக்கி வாசித்து, கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்ச்சியை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

போலிசாக வரும் தலைவாசல் விஜய் " Sir ! This is my phone ! " என்பது மிகச்சரியான யதார்த்தம்!

யுகேந்திரன் , தேவா என்ற ரௌடியாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். யார் இதைச்செய்திருக்க முடியும் என்று அவரை விட்டு விளக்க வைத்திருப்பது மிகச்சரியான காட்சி! 'அவன் இந்த ஒரு நாளுக்காக 365 நாள் வேலை பாத்திருக்கான் ' என்று உணர்ந்து சொல்லும்போது அவருக்கே கைதட்டல் விழுகிறது.

மற்றபடி எல்லாக்கதாபாத்திரங்களும் தன் பங்களிப்பை சீராக வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத்தந்திருக்கிறார்கள்.

ஹீரோவை விட்டு ஒரு சண்டைகூடப்போடச்சொல்லாமல், ஆனால் வில்லனுக்கு அடி மேல் அடி விழ வைத்திருக்கிறார்கள்.

கடைசிக்காட்சியில் மட்டும்தான் எஸ் ஜே சூர்யா 1 நிமிடம் சண்டை போடுகிறார். மற்றபடி எல்லாமே புத்திசாலித்தனமான காட்சிகள்தான்.!

நியூட்டனின் மூன்றாம் விதியில் - அட போட வைத்திருக்கிறார் இயக்குநர்!
வாழ்த்துக்கள் சார்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...