கண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)
வாகனங்கள் எரிபொருளைத் தின்றுவிட்டு, எரிச்சல் தாங்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வப்போது சிகப்பு, மஞ்சள், பச்சை என்று விளக்குகளைப்போட்டு ஓட்டத்தைத் சீராக்கிக்கொண்டிருந்தன மஞ்சள் மரங்களாய் நின்றுகொண்டிருந்த சிக்னல் கம்பங்கள். சென்னையில், தனது அலுவலகத்தின் 3வது மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ‘அட ! எப்படியெல்லாம் நமக்கு சிந்தனை வருது?’ என்று நினைத்துக்கொண்டே திருப்பூரிலிருக்கும் தன் நண்பன் கண்ணனுக்கு போனை ஒற்றினான். ‘டேய்! ஆபீஸ் வந்துட்டியா?’ ’வந்துட்டேன்! சொல்லு?’ ’இந்த வருஷமும் ஒரு சிறுகதைப்போட்டி வச்சு,நம் மக்கள் சிந்தனையைத் தட்டிவிடுவோமா?’ ’நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் கண்ணா! ஓ. எஸ்.! செஞ்சுரலாம்.’ சென்னைக் கண்ணனும், திருப்பூர் கண்ணனும் நண்பர்கள். தங்கள் வாழ்வியல் சூழல் தடுத்ததால், கற்பனைக் குதிரைகளை லாயத்தில் கட்டி வைத்திருந்தவர்கள். இணைய தளத்தில் வலைப்பூ என்று ஒன்று உருவானபோது, அதைப்பயன்படுத்தி குதிரையை ஓடவிட, அற்புதமான பதிவுலக எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள். கதைகள், அனுபவங்கள், சினிமா விமர்சனங்கள் என கலந்து கட்டி அடிப்பார்கள். இருவர...