Friday, June 25, 2010

ராமனைக் கொன்றுவிட்டேன்அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள்.படித்துறைகளின் பக்கம் மட்டும் கொஞ்சம் வேகத்தைக்குறைத்துக்கொண்டேன். என்னுள் இறங்கி விளையாடும் அத்தனை குழந்தைகளும் சிரமமின்றி கரையேறுமாறு பார்த்துக்கொண்டேன். நான் அக்காள் கங்கையைப்போல் கோபக்காரி அல்ல! சரயு நல்லவள்! ஆவேசம் அடையாதவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன். அதைக்காப்பாற்றவே தவறுதலாக விழுபவர்களைக்கூட சிறிது தூரம் இழுத்துச்சென்று பின்னர் கரையேற்றிவிடுவேன்.

மன்னன் ராமன் ஆளும் பகுதியில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெருமை! எவ்வளவு நல்லவன்! காதல் ஒருத்தியைக்கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளையும், அதர்மத்தையும் சேர்த்து வீழ்த்தி..நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறான்.

என்ன ஒரு வருத்தம்! ..சீதையை சந்தேகப்பட்டு, அவளை விலகச்செய்து, இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்திருக்கவேண்டாம்.

படித்துறைகளில் பேசும் பேச்சை பல ஆண்டுகளாய்க்கேட்டுவருகிறேன். ராமனின் ஆட்சிபற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! இப்போது ராமனுக்கு வயதாகிவிட்டதாம்.! சீதையின் நினைவில் மிகவும் வாடுகிறானாம்.!

இரவாகிவிட்டது. எல்லாப்படித்துறைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லை! வேடிக்கை பார்த்துக்கொண்டே நானும் பயணித்தேன். அழகான ஒரு மனிதன் படித்துறையில் இறங்கினான். அருகில் வந்ததும் பார்த்தேன். முதுமை அடைந்திருந்தான். ஆனாலும் பேரழகு! ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தான்!

இந்த வாழ்வு போதுமெனக்கு! முடித்துக்கொள்கிறேன் ! சீதா என்னை மன்னித்துவிடு!

ஓ..ராமனாக இருக்குமோ? என்று நான் அதிர்ந்துகொண்டே...

'அன்பரே! நீர் இராமபிரான் தானே? என்றேன்.

யார் பேசுவது? என்றான்!

நான் சரயு! ஓடிக்கொண்டிருக்கும் நதி!

சொல் சரயு! என்ன விஷயம்?

என்ன ராமா? வாழ்வை முடித்துக்கொள்ள வந்துவிட்டு சாதாரணமாகக்கேட்கிறீர்?

ஆம்! சரயு! ஏகபத்தினி விரதன் ராமன் தற்கொலை செய்து இறக்கப்போகிறேன்!

எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்துவந்தது.

என்ன ராமா இப்படிச்சொல்கிறீர்?

ஆம் சரயு! மனித ஜென்மம் எடுத்துவிட்டேன். கட்டிவந்த காதல் மனைவியை - என் நேர்மையை நிரூபிக்க - இழந்துவிட்டேன். எத்தனை ஆண்டுகள்தான் மனைவி இல்லாமல் மறுகுவது? சீதா திரும்புவாள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை! வேறு ஒரு பெண்ணை மணந்தாலும் தவறில்லை. ! ஆனால் உலகமே போற்றும் ஏகபத்தினி விரதனென்ற பெயரைக்காப்பாற்ற உணர்வுகளைப் பலியிட்டேன்! இதற்கு மேல் முடியவில்லை! என்னை சாகவாவது விட்டுவிடு!

மன்னிக்கவேண்டும் ராமா! நீங்கள் இறந்து என்னை கெட்டவளாக்காதீர்கள். சரயு நல்லவள் , ஆவேசப்படாதவள் என்று நற்பெயர் எடுத்துவைத்துள்ளேன். மேலும்...

மேலும்..?

உங்கள் அறியாமையை எண்ணி சிரிப்புதான் வருகிறது !

என்ன அறியாமை?

சீதையைத்தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத நீங்கள், என்னை மட்டும் தழுவலாமா?

பரவாயில்லை சரயு! ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைத்த உணர்ச்சிகள் அழிந்து போக வேண்டிதான் தற்கொலைக்கு முடிவெடுத்தேன். அதே உணர்ச்சிகளுக்கு நீயொரு வடிகாலாகவும் அமைந்தால், மகிழ்ந்துகொண்டே மரணிப்பேன்.

அடப்பாவி ராமா! தவறே செய்யாதவளை தண்டித்துவிட்டு, அவள் கோபம் கொண்டதற்காக, இன்னொருத்தியைத் தேடி வந்திருக்கிறாயே? உன்னை மனிதரிலேயே சேர்க்க முடியாது! தெய்வமென்று யார் சொன்னது? உன் பராக்கிரமங்கள் கேள்விப்பட்டு பிரமித்தவள் நான்..ஆனால் என் அனுமதி இல்லாமல் என்னை நீ தீண்டுவதை நான் விரும்பவில்லை!

நான் உன்னைத்தீண்டுவது , உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் சரயு!

உலகமே உன்னை தெய்வமெனக்கொண்டாடுகிறது ராமா! நீ இவ்வாறு முடிவெடுத்தால், நாளை என்ன சொல்லும்?

நான் இருக்கும் வரை என்ன சொன்னது? அதையே சொல்லட்டும்! ராமன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்று சொல்லும்!

உனக்கும், உலகுக்கும்தான் அது தற்கொலை ! ஆனால் என்னை நீ தீண்டிவிட்டாலே அது நீ என்னை செய்யும் கொலை!

உன்னிடம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை சரயு! உன் அனுமதியும் தேவை இல்லை! இதோ உனக்குள் இறங்குகிறேன்.

வேண்டாம் ராமா! வேண்..........

உள்ளே இறங்கிய ராமனை நான் கரைப்பக்கம் தள்ளப்பார்க்க... என்னை ஆரத்தழுவி ஏகாந்தமாய் அமிழத்தொடங்கினான். சீதையை ஏந்திக்கொடுத்த அக்னிதேவனாக இருக்கமுடியாது என்னால்!
கடைசிவரை, தன் நற்பெயருக்காக எவர் வாழ்வையும் நாசம் பண்ணத் துணிந்த ராமா! இனி உன்னை யாராலும் காக்க முடியாது.

ஆவேசமாய்ச் சுழன்றடித்தேன் நான்!


ஒதுங்கிய காவல்!

அய்யனாரே! என்று
சொல்லி படையல்
படைக்கும்போதும்,
வாகனங்களை நிறுத்தி
பாதுகாப்பு
கேட்கும்போதும்,
என்றாவது ஒருநாள்
ஊருக்குள்
அழைப்பார்கள்
என்றுதான் நானும்
நம்பிப்போய்
நின்றுவந்தேன்.

காவல் தெய்வம்
என்று
கவனமாய்த்
தள்ளிவைத்து,
ஊர்வலத்தில்
வர இயலா
உருவத்தைக்
கொடுத்துவிட்டு,
குதிரையொன்றை
நிற்கவைத்து,
கூரைகூடக் கட்டாமல்
கொண்டாடி நடிக்கிறார்கள்.

ஒதுக்க வேண்டுமென்று
முடிவெடுத்தால்
சாமியென்ன? மனிதனென்ன?

Thursday, June 24, 2010

சீனான்னா சும்மா இல்லை!
சிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை! அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு!நிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சீனர்களின் நிதானமான வாழ்க்கைமுறை,
சரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்,
பழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை
அரசாங்கத்தின் அதிரடித் திட்டங்கள்
மொழியின் மீது சீன அரசின் ஆளுமை
அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது.

சீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. அதற்கு உள்ளூரில் என்னன்ன தகிடுதித்தங்கள் செய்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.
// மொத்த சீன சமுதாயத்துக்கும் தன் மனதில் இருப்பதை எடுத்துச்சொல்ல வழி இல்லாமல், நாடே ஒரு பிரஷர் குக்கர் மாதிரி இருக்கிறது. மேலே அமைதி, உள்ளே எரிமலை! //

புத்தகத்தின் இந்த வரிகளின் வீரியம் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவர வாய்ப்பிருப்பதை அரசாங்கமும் அறிந்துகொண்டு, மக்களுக்கான தேவைகளை அடித்துப்பிடித்துச் செய்து வருகிறது என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது.

ஹூடாங் என்ற ஒரு வீட்டமைப்பே இப்போது அழிந்துவரும் நிலை இருப்பதை அங்கேயே வாழ்ந்திருந்து சொல்லியிருக்கிறார் பல்லவி! சீனர்களின் விருந்தோம்பலையும் விளக்கியிருக்கிறார்.

படித்துக்கொண்டே வரும்போது சீனாவின் யீவு என்ற நகரைப்பற்றி கூறியவற்றை நினைத்து பிரமித்துப்போனேன்.உலகநாடுகளின் வியாபாரிகள் அனைவரும் வந்து பொருட்கள் வாங்கும் ஊர் யீவு ! இதைப்பற்றி அடிக்கடி சீனா சென்றுவரும் நண்பரிடம் பேசலாம் என்று போனால், அவரே இந்தமுறை யீவு சென்று வந்ததைப்பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.
இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார். அவை குறைந்தபட்சமாக முப்பத்தைந்து லட்சரூபாய்க்கு விலை போகுமாம்.

சீனாவின் மத தத்துவங்கள், திபெத் பிரச்னை, கம்யூனிஸத்தின் கடவுள் மறுப்பிலிருந்து மெல்ல வழுவி மடாலயங்களும், மத வழிபாடுகளும் ஆரம்பிக்கும் அரசாங்கம் ஆகியவற்றை சொல்லியிருக்கிறார்.

என்னதான் உள்பகைமை உள்ள நாடு, நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடு, இலங்கையில் காலூன்றி நம்மை அச்சுறுத்த நினைக்கும் நாடு, இந்தியாவிடம் ஒருபோதும் தோழமை பாராட்டாத நாடு என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததற்கு , எதிரியைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரியவைத்திருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

டிஸ்கி: புத்தகத்தை வாங்கி, தாமதமாகத்தான் படித்தேன். " காந்தியை சுட்டுட்டாங்களா? " , " இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா?" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை! :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...