Sunday, July 31, 2011

ஒரு கோப்பைத் தண்ணீர்சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் மதியத்தைத்தாண்டிவிட்டது. உடனே அங்கிருக்கும் கேண்டீனில் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். எல்லாக்கடைகளிலும் நட்சத்திர ஹோட்டலைவிட ஏகத்துக்கும் விலை வைத்து விற்பனை நடந்துகொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி – 60 ரூபாய் , இரண்டு பரோட்டா – 60 ரூபாய். (அளவும் சிறியதுதான்) நாங்கள் சப்பாத்தியும், பரோட்டாவும் வாங்கினோம். சாப்பிட ஆரம்பித்த பிறகுதான், தண்ணீரின் ஞாபகம் வந்தது. 

பிறகு குடிக்க தண்ணீர் கேட்டால், ’இல்லை சார் ! போய் பாட்டில் வாட்டர் வாங்கிக்குங்க!’  என்று கடைக்காரர் சொல்ல, 

     நான் உங்ககிட்டதான் உணவு வாங்கியிருக்கேன். நீங்கதான் தண்ணி தரணும் என்றேன் நான்.!

     உடனே. இல்லை சார்! இந்த இடத்தை காண்ட்ராக்ட்டுக்கு விட்டவங்க, தண்ணி பாட்டில் விக்கறதுக்குன்னு, தனியா ஒரு ஸ்டாலை வாடகைக்கு விட்டிருக்கோம். நீங்க தண்ணி குடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! என்றார்.  
          
     இது என்னய்யா அராஜகம். அவுங்க சொல்றபடிதான் நாங்க சாப்பிடணுமா? அது முடியாது. எனக்கு தண்ணி வேணும். மேலும் அப்படிச்சொன்ன ஆளை நான் பாக்கணும் என்று தகராறு செய்ய ஆரம்பித்தேன்.

    இல்லை சார்! எங்களுக்கே நாங்க வாட்டர் பாட்டில்தான் வாங்கிக்குடிக்கிறோம் என்று சொன்னார்.

      அது உங்க பிரச்னை! எனக்கு குடிக்க தண்ணீர் நீங்கதான் தரணும். அதுதான் சட்டமும் கூட! என்று சொல்லி.. இதுக்காக யாரை நான் சந்திக்கவேண்டும்? என்று கேட்டேன்.

      ஆனாலும், அவர் மழுப்பினார். இதற்கிடையில் இவர்கள் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போது நான் கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்து, அநியாயமாக 60 ரூபாய்க்கு பரோட்டா வாங்கி அதுக்கு தண்ணியும் காசு கொடுத்து வாங்கணுமா? என்று கேட்டவுடன்.,..ஓரிருவர் , ‘ அவர்தான் கேக்குறாருல்ல..! கொடேன்ப்பா! என்று சொல்லிக்கொண்டே சென்றனர். ஓரிருவர், உணவு வாங்குவதைத்தவிர்த்துச் சென்றனர்.

   இதற்கிடையில் உடன் வந்த நண்பர், தண்ணீர் பாட்டில் வாங்கிவந்துவிட்டார். அவர் எனக்காக தருவதாக இருந்தாலும், அந்தக்கடையிலேயே தண்ணீர் வாங்கிக் குடிக்காமல் போவதில்லை என்று நான் முடிவெடுத்திருந்ததால், அதை வாங்கவில்லை.  

      மீண்டும் என் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது. நான் அவரிடம் நீங்க இந்தக்கடைக்கு ஓனர் இல்லைன்னா, உங்க ஓனரையாவது கூப்பிடுங்க! பேசணும் என்றேன். அதற்கும்.. அவர் இங்க இல்லை சார்! என்றார். அதாவது, என்னை யாரையும் சந்திக்க வைக்கவோ, என் பிரச்னையை வேறெங்கும் எடுத்துச்செல்லவோ அவர் விரும்பவில்லை. ஆனால், நானும் விடுவதாயில்லை.

கடைசியாக நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘இப்போ உங்களை நான் அடிச்சா, நமக்குள் வரும் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண யார் வருவாங்களோ அவுங்களை வரச்சொல்லுங்க பாஸு!

உடனே கல்லாவில் இருந்து 50 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிவந்தார். அவர்களிடம் இருந்த கேன் தண்ணீரிலேயே கை கழுவவும் வைத்தார்.

     இது செலவழித்தல் சம்பந்தமான பிரச்னையே இல்லை. என்னிடம் காசு வாங்கிக்கொண்டு எனக்கு உணவு கொடுக்கும் கடை, தண்ணீரை இன்னொரு கடையில் வாங்கிக்கொள்! அதுதான் இங்கு சட்டம்! என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அராஜாகம்! இத்தனை களேபரத்தையும், கண்காட்சியின் ஒரு அங்கம் போல வேடிக்கை பார்த்த கூட்டம்தான் அதிகம்.! யாருக்கும் தட்டிக்கேட்க துணிச்சலில்லை. ஏனெனில் எல்லோர் கையிலும் வாட்டர் பாட்டில்கள்!

     இது போன்ற நிகழ்வுகள், இன்னும் எத்தனை விதமான நுகர்வோர் பிரச்னைகளை உருவாக்கப்போகிறது என்று தெரிவதற்கில்லை. நாளை, பரோட்டா இந்தக்கடை, குருமா அடுத்த கடை, தண்ணீர் அதற்கடுத்த கடை என்று வரும். எவ்வளவு பிரம்மாண்டமான கயமைத்தனத்துக்குள் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று இப்போது புலப்படாது. ஏனெனில் நம் சட்டைப்பையில் இருந்து இன்னொருவன் காசை எடுத்து தன் பொருளை நம் கையில் திணிப்பதை நாமே எற்றுக்கொள்ளப்பழகிவிட்டோம். கொஞ்சம் நேரம் செலவழித்து, நேர்மையான கேள்விகள் மூலம், எனக்கு அது கிட்டியது. இது எல்லோருக்கும் கிட்டவும் வாய்ப்பிருக்கிறது. தவறு என்று சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டால்..! ஏனெனில் அவர்களுக்கும் தெரியும்.! அவர்கள் செய்வது தவறு என்று!

     இது ஒன்று மட்டுமில்லை. வீட்டை விட்டு தெருவில் இறங்கினால், எங்கு சென்றாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவற்றை ஜஸ்ட் லைக் தட் நாம் புறம் தள்ளிச்செல்கிறோம். ஆனால், எல்லாத் தீவிரவாதங்களுக்கும் இதுதான் தாய் என்பதை மறந்துவிடக்கூடாது. தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம், தீவிரவாதத்தை தானே பந்திவைத்து வரவேற்கிறது என்று அர்த்தம்.! பதிவர்கள் சமூகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம் ஏன் சிறுவிஷயங்களிலிருந்து தட்டிக்கேட்க ஆரம்பிக்கக்கூடாது.? இதோ நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.

இயக்கத்தின் பெயர் : கேட்டால் கிடைக்கும்
பொறுப்பு : கேபிள் சங்கர், சுரேகா.

கேபிள் சங்கர் : 98403 32666 , sankara4@gmail.com,
சுரேகா : 96000 97444, surekaanow@gmail.com

விபரம் வேண்டும் அனைவரும் எங்களைத்தொடர்புகொள்ளலாம். 

     பி.கு : சென்ற வாரம்தான் கேபிள் சங்கர் ஒரு பதிவில், எங்கள் பக்கத்து கட்டிடமான ‘ஃபேம் நேஷனலில்’ கேண்ட்டீனில் தண்ணீர் கேட்டுவாங்கிக்குடித்தது பற்றி போட்டிருந்தார். அதே போன்ற நிகழ்வு எனக்கும் நடந்தது ஆச்சர்யம்.! நாங்கள் எப்போதும் இதேபோல் தட்டிக்கேட்பதை வழக்கமாகவே வைத்திருப்பதால், இதை ஏன் பதிவர்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்று விவாதித்துக்கொண்டதன் விளைவுதான் இது!

Tuesday, July 5, 2011

உங்க அப்பாதான் கிழவன்! - Buddha Hoga Tera Baap..!


           தொலைக்காட்சிகளில் பார்த்த ட்ரெய்லரும், ராம் கோபால் வர்மாவே பொறாமைப்பட்டு, பூரி ஜெகன்னாத்தைப் பாராட்டி ட்வீட்டியிருந்ததும் படத்தின்மேல் ஒரு ஆர்வத்தைத்தூண்டியிருந்தது.


              பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியைத்தூண்டியதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. – அமிதாப் பச்சன்!


      ப்ரகாஷ் ராஜ் ஒரு லோக்கல் தாதா!  வெடிகுண்டுகளை பொது இடங்களில் வைத்து இன்பம் காண்பவர்! ஒரு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், குற்றவாளியை மோப்பம் பிடித்து, ப்ரகாஷ் ராஜின் அடியாளை கைது செய்கிறார் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்! மிகவும் நேர்மையான அதிகாரியாக இருப்பதால், இரண்டு மாதத்துக்குள் மொத்த நகரத்தின் தாதா சாக்கடையையும் சுத்தம் செய்துவிடுவேன் என்று பேட்டி கொடுக்கிறார்.


      தன் ஆளை கைது செய்தது இல்லாமல், தன்னையும் நெருங்கி பிரச்னை செய்துவிடுவாரோ என்று கொதித்து, சோனுவைக் கொல்ல ஒரு ஆளை ஏற்பாடு செய்யுமாறு பணிக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.! அவர்களும் சோனுவைக்கொல்ல ஒரு சிறந்த ஆளை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.


      வந்து இறங்குகிறார் அமிதாப்! ஒரு பக்கா பழைய தாதா! ஏர்ப்போர்ட்டில் இறங்கும் காட்சியிலேயே அதகளத்தை ஆரம்பிக்கிறார். வரிசைல நில்லுங்க என்று போலீஸ்காரர் சொல்ல, ’நான் நிக்கிற இடத்தில் வரிசை ஆரம்பிக்கும்’ என்று சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது பச்சனின் பஞ்ச்!!


      ஒரு காபி ஷாப்பில் சார்மி, தான் மேட்ரிமனி சைட்டில் பார்த்த ஒருவனைச் சந்திக்க வர, அவன் உனக்கு செட்டாக மாட்டான் என்று உசுப்பேற்றுவதில் ஆரம்பிக்கிறது அமிதாப் – சார்மி நட்பு! தனது தோழியான மினிஷாவிடமும் அமிதாப்பை அறிமுகப்படுத்துகிறார்.


      கல்லூரிக்காலத்திலிருந்து மினிஷா லம்பாவை ஒருதலையாகக் காதலித்து வருகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்…! இவர்களுக்கிடையே அமிதாப் அறிமுகமாகி, காதலை கனியச்செய்கிறார்., இந்நிலையில், போலிஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிற்கும் ஜீப்பில் ஒரு பாமை வெடிக்க வைத்து, சோனுவை எச்சரிக்கிறார் அமிதாப்.!


           ஒரு கோவில் விழாவில் சோனு, தனது தாய் ஹேமமாலினியுடன் வந்து காரில் இறங்குகிறார். அப்போது அவரைச்சுட – ப்ரகாஷ்ராஜால் நியமிக்கப்பட்டு - காத்திருக்கும் கொலையாளியை காத்திருந்து சுட்டுவிட்டு, தான் யாரென்ற முடிச்சை அவிழ்க்கிறார் அமிதாப்!

அவர் சோனுவின் அப்பா! – இடைவேளை!


       சோனு குழந்தையாக இருக்கும்போதே ஹேமமாலினி- அமிதாப் பிரிந்துவிடுகிறார்கள். தன் மகனுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது அவனைக்காப்பாற்ற வந்திருக்கிறார் அமிதாப்!

              பின்னர் ப்ரகாஷ்ராஜ் கூட்டத்துக்குள் நுழைந்து, சோனுவைக்கொல்ல அவர்கள் போடும் திட்டங்களை முறியடித்து, அனைவரையும் போட்டுத்தள்ளி...

 சுபம்! 

அமிதாப் – தெய்வமே! என்று காலில் விழுந்துவிடலாம். அந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் விளையாடுகிறது. ஆக்ரோஷத்தில் அந்தக்கால அமிதாப் ஆடித்தீர்க்கிறார்.


ப்ரகாஷ் ராஜ் – இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு, கலக்கியிருக்கிறார் மனிதர்! வில்லனுக்கான ஆத்திரமும், அவசரமும்…..சூப்பர்! அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்…’கண் கலங்க…..’ அப்ப போலீஸே வரலை! அத்தனை பேரையும் நீதான் சுட்ட…!. “ என்று கூறி முடித்து அழ ஆரம்பிக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். ஹிந்தி வில்லன்களே …உஷார்!!

சோனு சூட் – அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் ரொமான்ஸுக்குக்கூட சிரிக்கமாட்டேன் என்று இருப்பது இடிக்கிறது. டைரக்டர் அப்படி எதிர்பார்த்திருப்பாரோ?


சார்மி – ரவீணா டேன்டன் – முறையே மகள் – அம்மா கேரக்டர்…கலக்கியிருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவைக்கு குத்தகை! அதுவும் ரவீணாவின் முகச்சுழிப்புகள் – பின்றீங்க மேடம்!ஹேமமாலினி – அமைதியான அம்மா! பெரிதாக வேலை இல்லை! கொடுத்த வேலைக்கு பங்கமுமில்லை!


படத்தின் முடிவில்… அமிதாப்புக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள்.

பூரி ஜெகன்னாத் ஒரு மிகச்சிற்ந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்திருக்கிறார். 

அமிதாப்புக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
பெங்களூரில் சென்ற வேலை முடிந்தவுடன் ஞாயிறு இரவுக்காட்சியாக கொரமங்களா பி வி ஆரில் ஸ்க்ரீன் 7ல் பார்த்தேன். 9:25க்கு ஷோ என்று கூறி ..சரியாக வினாடி சுத்தமாக படம் போட்டார்கள். என்ன….? டிக்கெட்தான் 240 ரூபாய்!! ஆனால் அந்த மொத்த மாலும் படுசுத்தமாக இருக்கிறது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...