Monday, February 27, 2012

இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவுஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.

இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.

அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.

விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில்...


ஏழாம் அறிவு
சீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்? என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!


அதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!


பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.

சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.

ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.

சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.

ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.

டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.

டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.

டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.

      தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.

      டாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

      கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.

      இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!

ஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!


Tuesday, February 14, 2012

ட்விட்டுரை # 2

                           


எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு

அக்கா..வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா? _அப்ப சரி!! குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க! - அப்ப மக்கள்? ஹெஹெஹெ!!


சொத்துக்குவிப்பு வழக்கில், அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு...நான் வரேன்க்கா!! #யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது?


முல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம்..!! கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி!!


நானே எப்படிடா வெளில போலாம்... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானே கழட்டிவுட்டுட்டா! #யாரு?யாரோ!


காந்தித்தனம் நன்றுதான்எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! இந்தியனென்றால்..டையர்த்தனம்தான் நல்லது..#ச்சுட்டேபுடணும்!


பணக்கார பையனை காதலிக்கும், அழகான பெண்ணை காதலனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!அப்புறம் என்ன ? Break Up தான்! ஸ்வீட் எடு கொண்டாடு #Breakup Idea


அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமான்னு கேட்டால்...ரெண்டுபேரையுமே பிடிக்காது முகத்துக்கு நேராகச் சொல்லும் நேர்மையான பாப்பாதான் நாளைய VIP


இனி ஒரு விதி செய்யப் புறப்படும் மருத்துவ விஞ்ஞானியின் வேலை. இனி ஒரு வியாதி செய்வது!! - இது என் 9ம் வகுப்பில் எழுதியது!!


இதுஇல்லாமஇதுபண்ணினாலோ, ‘இதுபண்ணாமஇதுபோட்டுக்கிட்டாலோஇதுவரும்..ஜாக்கிரதை!! #HIV


நீங்கபாட்டுக்கு மலைக்குப் போறேங்கிறீங்க? நாங்க இங்க ஒரு பெரிய பிரச்னைக்கு பிச்சிக்கிட்டிருக்கோமே மேdam!!


30 நாளில் 3000 கோடி செலவழிக்கணுமா அருணாச்சலம்!! # டேய் அண்ணனை பஸ்ஸில் ஊரைச்சுத்திக்காட்டி , பால் வாங்கிக்குடு!


ஊழலை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - சோனியா # ஏன் இந்த திடீர்த் தற்கொலை முடிவு?


அணு உலை வேணுங்கிற அப்பாடக்கரெல்லாம் அங்கயே உக்காந்துக்கவேண்டியதுதானே? சொல்லிட்டு டெல்லிப்பக்கம் ஓடிர்றானுங்க! #நீங்க இருந்து காட்டுங்க!பள்ளி இருக்கும் நாளில் 7:30 மணிக்கு எழுப்ப பெரிய போரே நடக்கும்..! லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம்.!.#சேட்டை மகன்.


எது எப்படியோ? இன்னிக்கு ஒரு சொந்தக்காரப்பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சாச்சு! அப்பாடா!


மயக்கம் என்ன : அடுத்தவன் காதலியை சுடலாம்.. நம்ப  படத்தை அடுத்தவன் சுடப்புடாது..! இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர்? #டவுட்டு


நான் ஏன் எந்தக்கருத்துமே சொல்லாமமண்மோகனா இருக்கேன்னு தெரியுதா? ஏதாவது பேசினா அடிக்கிறாய்ங்க! இல்ல சரத்து? #யாரு? யாரோ!


800 ஆண்டு பழமையான அனுமார் கோவிலை எப்படிச் சுருக்கமாகச் சொல்வது? ‘மாருதி 800’ !! # முடியல!Thursday, February 9, 2012

நெஞ்சுரமிருந்தால், லஞ்சம், பஞ்சாகும்!

                                              

 ’அன்புடன் கிரண்பேடி’ நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நான் இயக்கியபோது அறிமுகமான நண்பர் ஆண்ட்ரூ தனூஜ் குமார்.! ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். அவரது CHIC CONSULTANCY என்ற நிறுவனம்தான் அந்த கிரண்பேடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உண்மையில் நாட்டில் ஊழல் குறையவேண்டுமென்றால், மக்களின் தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரவேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்ட மனிதர்.! ஒத்த கருத்துடையவர்கள் நாங்கள் என்பதால், மிகவும் எளிதாக ஒட்டிக்கொண்டோம். மிக அருமையாக கிதார் வாசிப்பார்.(என் கிதார் குரு! J )  கடந்த கிறிஸ்துமஸின் பொழுது, எங்கள் வீட்டுக்கு ஒரு அற்புதமான நண்பர்கள் குழாத்தோடு வந்து, கீதங்கள் இசைத்துச் சென்றார். நேர்மை பற்றி பேசிக்கொண்டிராமல், செயலில் காட்டும் நல்ல நண்பர்.! கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.      அவர் புதிதாக ஆரம்பித்த தனது நிறுவனத்துக்காக TIN எண் வாங்குவதற்காக, ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அலுவலகம் சென்றிருக்கிறார். உண்மையில் அந்த வேலைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால், அங்கிருந்த துணை வணிகவரி ஆணையர் ஜெயலட்சுமி மேலும் 5000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

இவர், அதெல்லாம் எங்க கம்பெனியில் தர வழியில்லை. அரசாங்கம் என்ன தொகை கட்டச்சொல்லியிருக்கோ அதான் கட்டிட்டேனே என்று பொறுமையாக பதில் சொல்ல,உடனே, இவர் விண்ணப்பத்தைப்  பார்த்துவிட்டு இது நொட்டை, இது நொள்ளை என்று குறை சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் விடாக்கண்டராய் நொட்டை , நொள்ளையெல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டும் சென்றிருக்கிறார். அந்த பெண்மணி நக்கலாக..’ஏன் சார்..! படிச்சிருக்கேங்கிறீங்க…! இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்ல..’விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, பணம் கட்டறதுதானே ஃபார்மாலிட்டி! அதைத்தான் செஞ்சுட்டேனே’?… என,’உங்களோட பெரிய தொந்தரவா(!) போச்சு! அது தவிர, தரவேண்டிய அமவுண்ட் கொண்டு வந்தீங்களா? சரி தொலையுது..உங்களுக்காக(?) ஆயிரம் குறைச்சுக்கிறேன். நாலாயிரமா தாங்க!’’அந்த அமவுண்ட்டுக்கு ரசீது குடுப்பீங்கன்னா நான் தரேன் மேடம்..!’’யோவ்! அதெல்லாம் தரமுடியாது.. ! நீங்க எப்படி டின் நம்பர் வாங்குறீங்கன்னு பாக்குறேன் என்று வம்பாகப் பேசியிருக்கிறார்இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறை பணம் கேட்டது முதல், நொட்டை சொன்னது வரை ஆண்ட்ரூ தன் மொபைல் போனில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவாக எடுத்துவிட்டார்.அதை எடுத்துக்கொண்டு அன்றே லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி, விபரம் சொல்ல, அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு, புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் செல்பேசியில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி பேச ஆரம்பித்து, ஸ்பீக்கர் போனில் போட்டு மொத்தத்தையும் போட்டு வாங்கி, மேலும் அந்த அதிகாரிகளில் ஒருவரே, ஆண்ட்ரூவின் ஆடிட்டர் போலப் பேசியிருக்கிறார்.’என்ன சார்! உங்க க்ளையண்ட்டுக்கு எந்த விபரமும் தெரியாதா? கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுங்க சார்! நாளைக்கு வந்து பணத்தைக் குடுத்துட்டு வேலையை முடிச்சுக்குங்க சார்!’ என்று அந்த பெண்ணும் அதிகாரமாகப் பேசிவிட…முதல் ஆதாரம் சிக்கியது.!பற்றிக்கொண்டது பரபரப்பு!அடுத்தநாள், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆண்ட்ரூவிடம் ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று ஒத்திகையும் பார்க்க வைத்து, கல்வித்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகளை சாட்சியத்துக்கு தயார் செய்து, அதில் ஒருவரை அவர் கூடவே அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே வந்துவிட்டனர்.அந்த அம்மாவின் டேபிளுக்கு ஆண்ட்ரூ செல்கிறார். கூட வந்திருப்பவரைக் காட்டி,இவர் யாரு? என்று அந்தப் பெண்மணி கேட்க,எங்க அக்கவுண்ட்டட் மேடம்.! இனிமே கமர்ஷியல் டாக்ஸ் மேட்டரெல்லாம் இவர்தான் பாக்கப்போறாரு..!ஓஹோ..!, சரி..நம்ப மேட்டர் என்னாச்சு?ஸாரி மேடம்..! எனக்கு உங்க ஃபார்மாலிட்டி தெரியலை ! இப்ப நீங்க சொன்ன நாலாயிரம் கொண்டுவந்திருக்கேன்.ஸ்…ஏன் சத்தமா பேசுறீங்க..? ஓக்கே. அதை அப்படியே டேபிள் மேல் வையுங்க!இவர் வைக்க, அந்த பணத்தின் மீது தனது கால்குலேட்டரை வைக்கிறார்.எப்ப மேடம் என் டின் நம்பர் கிடைக்கும்?செக்‌ஷன் க்ளார்க் இன்னிக்கு லீவு! நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!சரி மேடம் என்று சொல்லிக்கொண்டே , அந்த அம்மா, பணத்தை கையால் தொடவில்லையே என்று நினைத்துக்கொண்டே, கீழே நின்றுகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போன் செய்ய… அவர்கள் மாடியேறி தபதபவென வந்துவிடுகிறார்கள்.மூத்த அதிகாரி..மேடம்.. நாங்க லஞ்ச ஒழிப்புத் துறைலேருந்து வரோம்..! மிஸ்டர் ஆண்ட்ரூகிட்ட TIN நம்பர் தர்றதுக்காக, லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம்.’எது..? நான் எப்ப லஞ்சம் வாங்கினேன். அவர்தான் பணத்தை என் டேபிள் மேல வச்சாரு! என்று அந்த அம்மா பதற..அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..! நீங்க வக்கச்சொன்னீங்க! வச்சாரு! அப்புறம் கால்குலேட்டரை எடுத்து ஏன் அதுக்கு மேல வச்சீங்க! என்று ஆண்ட்ரூவுடன் வந்த சாட்சிய அதிகாரி சொன்னபிறகுதான்…தான் வலையில் சிக்கிக்கொண்டது உறைத்திருக்கிறது அந்த லஞ்சப் பெருச்சாளிக்கு!பின்னர்…ஆண்ட்ரூவைப் பார்த்து..ஒரேயடியாய் அழுது..அரற்றி..என்ன சார். இப்படி பண்ணிட்டீங்க! அய்யய்யோ அய்யய்யோ..! என் மரியாதை போச்சே..மானம் போச்சே என்று அலறிக்கொண்டே போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார். அன்றே, நீதிமன்ற உத்தரவுப்படி புழலில் அடைக்கப்பட்டார்.ஆண்ட்ரூவின் TIN எண் தானாக அடுத்த நாள் கடிதத்தில் வந்து சேர்ந்துவிட்டது. வெறும் ஐநூறு ரூபாய் செலவில்..!!

         
     இதில்..பணத்தை விட்டுவிடுவோம். ஏதோ ஒருமுறை நுழைவுத்தேர்வு எழுதி ஒரு அரசு நாற்காலி கிடைத்துவிட்டது என்பதற்காக ஆண், பெண் பேதமின்றி ஆட்டம்போடும் இதுபோன்ற சொறிநாய்களிடம், நம் படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றையெல்லாம் அடகு வைக்கவேண்டுமா என்று ஒரு நிமிடம் யோசித்தால், லஞ்சம் கொடுக்க மனது வராது.  அப்படிக் கொடுத்துப் பழக்கியதால்தான். இவர்கள் ஆட்டத்துக்குத் துணைபோக அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கெடுத்து நாட்டையே சூறையாடுகிறார்கள். பந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்!   எல்லாவற்றையும் விடுவோம். அரசு அலுவலகத்தில், அந்த வேலைக்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு, லஞ்சமில்லாமல்- முடிந்தால் அந்த ஆளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டு-  வேலையை முடித்துப்பாருங்கள். அன்றிரவு தூக்கத்தின் நிம்மதிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.


டிஸ்கி:
                                            

      நண்பர் ஆண்ட்ரூவுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பினால் aliceandy@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நல்ல உள்ளங்கள் துணைக்கு இருப்பது அவரை பயமின்றி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

தொடர்பான செய்திகள் :

லஞ்ச ஒழிப்பில் உதவி தேவையென்றால் கேட்டால் கிடைக்கும் அமைப்பை kettaalkidaikkum@gmail.com என்ற மின்னஞ்சலில் அணுகினால், ஆட்டம் களைகட்டும்.!
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...