Friday, December 30, 2011

பயணச் CHEAT         

          இந்த மாதத் தொடக்கத்தில், விருதுநகர் செல்லவேண்டிய வேலை இருந்தது. உடனடிப்பயணம் என்பதால், எந்த முன்பதிவும் செய்யவில்லை. அப்படியே கிளம்பி கோயம்பேடு சென்று மதுரை செல்லும் பேருந்தில் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி கோயம்பேடு சென்றால்,  அங்கு போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து , பிரதான வாசலை நோக்கி, எல்லா ஊர்களுக்குமான பேருந்துகளும் வந்துகொண்டிருந்தன. வரிசையாக, திருச்சி, சிதம்பரம் என்று படித்துக்கொண்டே வந்தபோது, மதுரை என்று போட்டு ஒரு ULTRA DELUXE பேருந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது.
          
          உடனடியாகக் கை காட்டி, மதுரைக்கு இருக்கை இருக்குமா? என்று கேட்டேன். முன்னால் அமர்ந்திருந்த நடத்துனர்,

ஒரு சீட்தான் இருக்கு! ஏறுங்க என்றார்…

உடனே ஏறினேன். வண்டி நகர ஆரம்பித்தது. நான் உள்ளே செல்வதற்குள் , நடத்துனர் என்னை அழைத்து,

’மதுரைக்கு 400 ரூபாய் ஆகும்’ என்றார்.

பேருந்து கட்டண உயர்வுக்குப்பிறகு இவ்வளவு ஆகிவிட்டதா? என்ற அதிர்ச்சியில்
’அவ்வளவா? அடேயப்பா!’ என்றேன்.

’இல்லை..டிக்கட் + முன்பதிவுக்கட்டணம் 350 ரூபாய் வரும். அப்புறம் 50 ரூபாய் எங்களுக்கு?’ என்றார்.

எனக்குச் சுரீரென்றது.
’என்னது? எதுக்கு நான் உங்களுக்கு 50 ரூபாய் அதிகமா குடுக்கணும்?’

’400 ரூபாய் கொடுக்கிறதா இருந்தா உள்ள போங்க! இல்லைன்னா எறங்குங்க! அண்ணே! வண்டியை நிறுத்து…!’ என்றார்.

நானும் சிரித்துக்கொண்டே..
’ஆமாம்.அண்ணே!வண்டியை நிறுத்துங்க! அவர் மேலதிகாரிக்கு போனைப்போட்டு விபரத்தைப் பேசிட்டு கிளம்புவோம்.’என்றேன்.

கொஞ்சம் அதிர்ந்தார். ஆனாலும்.. அவர் ’இதெல்லாம் பேசாதீங்க! குடுக்க முடியலைன்னா கீழ எறங்குங்க!’ என்றார்.

’ஹாஹா..நான் இப்போ காலியா இருக்குற சீட்டில் போய் உட்காருவேன். டிக்கெட் காசு மட்டும்தான் தருவேன்’ என்றேன்.

’அதெல்லாம் ஒத்துவராது. நான் சொல்லாம எப்படி நீங்க எப்படி உட்கார முடியும்? அடாவடி பண்றீங்களா? உங்களையெல்லாம் போலிஸில் சொன்னால்தான்…’.என்று எழுந்தார்.

நான் அவரை மதிக்காமல், உள்ளே சென்று காலியாய் இருந்த 7ம் எண் இருக்கையில் அமர்ந்தேன். பின்னாலேயே ஆவேசமாக வந்த அவர்!
’ஹலோ..வண்டில சீட் இல்லை! இது வி.ஐ.பி .சீட் ..நீங்க எறங்குங்க !’ என்றார்.

’அதெப்படி? உள்ளே ஆளை ஏத்தும்போது மட்டும் இது வி.ஐ.பி சீட்டுன்னு தெரியலையா? அப்படியே இருந்தாலும்…நான் வி.ஐ.பிதான் அதுவாவது தெரியுமா? இல்லைன்னா…மினிஸ்டரை விட்டு உங்களுக்குப் பேசச்சொல்லவா? அப்புறம்..ஏதோ போலீஸ்…ன்னீங்களே…நீங்க கூட்டிக்கிட்டுப் போகவேண்டாம்.. நான் உங்களை கூட்டிக்கிட்டுப் போறேன். இப்ப்வே சொல்றேன். டிக்கட்டுக்கு மேல காசு கேட்டு என்னை பஸ்ல இருந்து இறக்கிவிடறேன்னு மிரட்டுறாருன்னு சொல்றேன்’ என்றேன்.

’அதெல்லாம் தெரியாது நீங்க எறங்குங்க’ என்றார்..

இப்போது நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
’சார்..! நீங்க இப்ப என்கிட்ட வலுவா மாட்டிக்கிட்டீங்க! டிக்கெட் காசை விட அதிகமா கேட்டது லஞ்சம்.! நான் இப்பவே உங்க SETC விஜிலென்ஸ் கமிஷ்னருக்கு போனைப் போடப்போறேன். நீங்க முடிஞ்சதைச் செஞ்சுக்குங்க! அனேகமா இதுதான் உங்களுக்கு கடைசி வேலை நாளாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் போனில் எண்ணைத் தேட ஆரம்பித்தேன்.

அதற்குள் அவர்..
’சார்..அது ரிஸர்வேஷன் சீட்டு சார்.. ஆள் ஏறலைன்னா நீங்க உக்காந்துக்குங்க’ என்று கொஞ்சம் இறங்குவதுபோல் பேசினார்.

’அதெப்படி..ரிஸர்வேஷன் சீட்டுன்னு ஏறும்போது தெரியாதா? ஓஹோ..400 ரூபாய் எவன் குடுக்குறானோ அவன்தான் ரிஸர்வ் செஞ்சவன்…அவன் தான் வி.ஐ.பியும் கூட…!’ என்று கத்த ஆரம்பித்தேன்.

‘சரி.உக்காருங்க!’என்று கோபமாக என்னை முறைத்துவிட்டு, தன் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார்.

உடனே நண்பர் கேபிள் சங்கருக்கு அழைத்துப் பேசினேன். நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

பேருந்து போய்க்கொண்டே இருந்தது. செங்கல்பட்டு தாண்டும்போது, என் அருகில் வந்தார். ஒரு டிக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தேன். ரூபாய். 325 என்று போட்டிருந்தது.

இது இன்ப அதிர்ச்சி.! .நடத்துநர் என்னிடம் 50ரூபாய் அதிகம் என்று சொன்னதும் பொய்..! நிமிர்ந்து அவரைப்பார்த்தேன் அவசரத்துக்கு ஏறும் பயணியிடமிருந்து 75 ரூபாய் கறக்க முயற்சிக்கும்..ரத்தக்காட்டேரியாக எனக்குத் தெரிந்தார்.  இதில் கொடுமை என்னவென்றால்..சபரிமலைக்கு மாலை வேறு போட்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே, பணத்தை எடுத்துக்கொடுத்தேன். அப்போது சொன்னேன்.
’எப்புடி? வருஷம் முழுக்க இப்படி கொள்ளையடிக்கிற பாவத்தைக் கழுவத்தான் சபரிமலைக்குப் போறதா?’

பதிலே இல்லை!

இடையில் வண்டி ஓரிடத்தில் நின்றபோது… என்னருகில் வந்து நடத்துநர் கேட்டார்.. 
‘சார்…எந்த டிப்பார்ட்மெண்ட்டு?’

‘ம்…பப்ளிக் டிப்பார்ட்மெண்ட்!’

’இல்லை சார்..! இந்த சம்பவத்தை பெரிசு பண்ணிடாதீங்க ! இனிமே இப்படி நடக்காது!’

’இன்னிக்குத்தானேங்க உங்களுக்கெல்லாம் சம்பளம் அதிகமாக்கி முதல்வர் அறிவிச்சிருக்காங்க! (அன்றுதான் போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்தி படித்திருந்தேன்.)அதுவே எங்க காசை அடிச்சுப்பிடுங்கித்தானே கொடுக்குறாங்க..அப்புறம் என்ன மறுபடியும் ஸ்பெஷலா நீங்க வேற அடிச்சுப்பிடுங்குறீங்க?’ என்று சொல்லிவிட்டு…அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!

ஒன்றுமட்டும் நிச்சயம்!

தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம் நாசமாய்த்தான் போகும்!
ஆனால்..தட்டிக்கேட்டால்….எல்லாமே கிடைக்கும்!

ஆம்..கேட்டால்.. கிடைக்கும்!Sunday, December 18, 2011

கீசக வதம்

மெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.

சாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது.

சரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.

பாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன். அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம்.! தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

இந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக , தேர்ந்த நடிகர்களுடன்  ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக நடித்துக்காட்டினார்கள்.

தருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார். தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன் விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும் வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார். சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான் எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில் சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக் கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப் பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’ பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.!

சுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும், விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும், ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை, அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.


டாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும் திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால் , பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.

நகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.

சைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.

சௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார் மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

கீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின் அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.

விராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.!

அரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து, பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.

காவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில் அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.

    
   சரித்திரக் கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம்! கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல், அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள் டி விருக்‌ஷா குழுவினர்.!

எழுத்து - கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி
வடிவமைப்பு – திரு.ஆனந்தக் கண்ணன்
இயக்கம் – செல்வி. G. தேவி

இந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...Wednesday, December 14, 2011

அணைக்க வேண்டுமா அணைக்காக?
      ஆற்றுநீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்பதோ, இந்த அளவுக்குமேல் தேக்க விடமாட்டேன் என்பதோ, உன் பராமரிப்பில் உள்ள அணையை உடைத்துவிட்டு, நான் புது அணை கட்டிக்கொள்வேன் என்பதோ  ஏதோ ஒரு விதத்தில் அண்டை மாநிலங்கள் நம்மை ஒரு மாநிலமாகக் கூட மதிக்காமல் அராஜகப்போக்கை காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நாம் இன்னும் ஒற்றுமை..தெருப்புழுதி என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

         அணைக்காக உங்களை நாங்கள் அணைத்துப்போவதாக இல்லை என்றால். பின்னர் நாம் மட்டும் ஏன் அணைக்கவேண்டும்? அதுவும் அரவணைக்க வேண்டுமாம். தவறு இரு மாநிலத்தின் மேலுமில்லை. மத்திய அரசு என்ற போர்வையில்..அடித்துக்கொண்டு சாகட்டும். அப்போதுதான் நம் குற்றம் வெளியில் தெரியாது என்று 2ஜி, க்வோத்ரோச்சிகளை கக்கத்தில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அயோக்கிய அரசுதான் காரணம்.!

யார் பேச்சையும் கேட்காமல், பொது தேசத்தின் நீதிமன்றத்துக்கும் கட்டுப்படாமல், எப்போது உனக்கு ஒன்றும் தருவதற்கில்லை என்று ஓரங்கட்டிவிட்டார்களோ, அப்புறம் என்ன அண்டை மாநிலம்..?   ஆனாலும்.. நம் சொரணை கெட்டத்தனத்தில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கைதான்..!!

       தமிழனை அடிக்கவேண்டுமென்று முடிவெடுத்து அவர்கள் அடிக்கிறார்கள் என்றால், திருப்பி அடிப்பதிலாவது கொஞ்சம் மாற்று அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கலாம்.

       ஆனால்..அதற்கு உண்மையில் உணர்வு வேண்டும். முல்லைப் பெரியாரைக் காக்கவேண்டும் என்று போராடிவிட்டு..அக்கா மகள் திருமணத்துக்கு ஆலூக்காஸில் நகை வாங்கினால்..அந்தக்காசை அவர்கள் ஊருக்கனுப்பி இன்னும் நான்கு உருட்டுக்கட்டைகள் வாங்கி நம் வண்டியைத்தான் அடிப்பார்கள்.

        ஆனால்..இங்கு அவர்கள் நடத்தும் எந்த ஒரு கடைக்குள்ளும் நுழையாமல் சிரித்துக்கொண்டே கடந்து பார்ப்போம்.வியாபாரம் இல்லாமல் வேகவைத்தல்தான் அடிக்காமல் நொறுக்காமல், அழவைக்கும் அணுகுமுறை! ஏன் கடைக்குள் வரவில்லை என்று நம்மை போலீஸ் கேள்வி கேட்கமுடியாது.

      அதேபோல், அவர்களுக்கான பொருட்களை அனுப்புவோம். அதற்கான வருமானத்தையும் அள்ளுவோம். அதை அவர்களாகப் புறக்கணிக்கவே முடியாது.

தங்கம் வாங்குவதைத் தவிர்க்கலாம்..காய்கறிகளை? அரிசியை?....

       அப்போதுதான் வாங்காமலும் இருக்கமுடியாமல், தன் பொருளை விற்கவும் முடியாமல் வித்தியாசமான கண்ணியில் சிக்கும்  அதிர்ஷ்டம் கேரளர்களுக்கு வாய்க்கும்.!

      கொடுக்கிறேன்.ஆனால் வாங்கமாட்டேன்.. என்று ஆரம்பித்தாலே ஆட்டம் களைகட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அணைப்பது பலவீனத்தைப் பறைசாற்றும்!  
அடிப்பது, வாதத்தின் பலம் நீக்கும்!

இப்படி நாம் என்னதான் தீர்வுக்காகப் புலம்பினாலும்..

இந்த அரசியல்வாதிகளின் அமோக ஆதரவில்…..கன்னித்தீவுக்கு இனி முல்லைப்பெரியாறுதான் கடுமையான போட்டி!

ஒன்றுமட்டும் நிச்சயம்!!

காந்தித்தனம் நன்றுதான்…
எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! 

இந்தியனென்ற போர்வையிலிருக்கும் எவனுக்கும் ...
டையர்த்தனம்தான் நன்று! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...