பில்லா 2 – முதல் காட்சி!





திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன்.
ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J
முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘தல’ என்று கத்திக்கொண்டு திரையை நோக்கி ஓட எத்தனித்தான்) முட்டி போட்டுக்கொண்டு கத்துகிறார். கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் நான்குபேரிடம் , கத்திவிட்டு அவர்களைத் துவம்சம் செய்கிறார். அதில் ஒருவனை நோக்கி துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். திரை உடைகிறது… பெயர்கள்…!
பெயர் போடும்போதே கதை ஆரம்பித்துவிடுகிறது… இலங்கையில் ஒரு குடும்பம்..அதில் ஒரு சிறுவனும், சிறுமியும்… அந்தக்குடும்பம் எப்படி பிரிகிறது. சிறுவன் எப்படி வளர்கிறான். என்னன்ன சிறு குற்றங்கள் செய்கிறான் என்று புகைப்படமாக விரிகிறது.
இலங்கை அகதியாக இந்தியா வந்து சேரும் டேவிட் பில்லா… முகாமில் தவறு செய்யும் போலீஸ் அதிகாரியைத் தட்டிக்கேட்பதில் ஆரம்பித்து, வைர வியாபாரம் செய்யும் சைவ ஹோட்டல் முதலாளியிடம் சேர்ந்து, தொழிலை விருத்தி செய்ய போதைப்பொருள் வியாபாரத்துக்காக, அங்கிருந்து கோவா அப்பாஸியிடம் சென்று, ஜார்ஜியாவில் இருக்கும் இன்னொரு ஆயுத வியாபாரி டிமிட்ரியைப் பகைத்துக்கொண்டு, அப்பாஸியைத் தீர்த்துக்கட்டி, தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தன்னைக்காத்துக்கொண்டு, மிகப்பெரிய டானாக ஆவதுதான் கதை!
இதற்கிடையில் பில்லாவின் அக்கா சென்னையில் இருப்பதும், அவரது மகள் பில்லாவை ரசிப்பதும், பில்லா அவளை தன் பாதுகாப்பில் வைத்திருப்பதும், அவளை எதிரிகள் கொல்வதும் தனி!
அப்பாஸியின் ஆளை, பில்லா கரெக்ட் செய்து வைத்திருந்து, அவள் இன்னொருவனிடம் கரெக்ட் ஆகியிருப்பது அடுத்த தனி!

அஜீத்..அஜீத்…அஜீத்…!! இந்த ஒரு தனிமனிதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் வெறிபிடித்து ஆராதிக்கிறார்கள் என்றால் , அதற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கையும், எந்த ஒரு திரையுலகப் பின்னணியும் இல்லாமல் முன் இடத்தைப் பிடித்ததுமாகத்தான் இருக்கும். அவரது குரல் கேட்கும்போதெல்லாம், தியேட்டர் அலறுகிறது..!! அவர் எது செய்தாலும் ஆர்ப்பரிக்கிறது. அதனாலோ என்னவோ, நமக்கும் அஜீத்தைப் பிடிக்கிறது.
படம் முழுமையும் அஜீத் ஆக்கிரமிக்கிறார். அனேகமாக அவர் இல்லாத காட்சிகளை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அவர் பேசும் வசனங்களை ஒரு A4 காகிதத்தில் எழுதிவிடலாம். (அப்படியும், மீதம் இடம் இருக்கும் என்பது தனிச்செய்தி!) அனேகமாக திரு.இரா.முருகன், ஒரு வாரத்தில் மொத்த வசனத்தையும் எழுதிக் கொடுத்திருப்பார்.
கதாநாயகிகள் என்று யாருமில்லை…!! இருவருமே டுபாக்கூர்தான்…!! அதுவும் புருனா அப்துல்லாவுக்கு பதிலாக.. நமது புருனோவும் , அப்துல்லாவும் நடித்திருந்தாலாவது சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..!
காமெடி! – பில்லா போன்ற ஒரு சீரியஸ்ஸ்ஸ்ஸான கதையில் எதிர்பார்ப்பதுதான் காமெடி! என்று இயக்குநர் சிரிக்காமல் சிந்தித்திருப்பார் போல..! எல்லோரும் சிரிக்க அவகாசமில்லாமல், பெரிய கடுப்புடனேயே அலைகிறார்கள்.  அட..நம்ம ரேணிகுண்டா காமெடியன் கூட , வில்லனாகத்தான் நடந்துகொள்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உழைத்திருக்கிறார். வினாடிக்கு வினாடி பின்னியிருக்கிறார். ஆங்கிலப்படத்துக்கு இணையான ஒளியமைப்புகளும், நிறச் சேர்க்கையும் பார்க்க பிரம்மாண்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
இசை..யுவன் சங்கர் ராஜாவாம்..!! ஏதோ மூட் அவுட்டில் இருந்திருப்பார் போல! ‘பில்லா -1’ன்  ஹார்ட் டிஸ்கை நேராக இதில் கனெக்ட் செய்து……….
மிகவும் சுயநலமான ஒரு தனி மனிதன் எவ்வளவு தவறுகளை வேண்டுமானாலும் செய்வான் என்று சொல்லப்படுகிறது. இப்போது ஹீரோ, நல்லவனாக இருந்தே ஆகவேண்டும் என்ற நியதி உடைக்கப்பட்டிருப்பதால், ‘மங்காத்தா’ பாணி இதிலும் கையாளப்பட்டிருக்கிறது. நடிப்பது அஜீத் என்பதால் அவர் பாத்திரத்தை ஹீரோ என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால், பில்லான்னு ஒருத்தன் இருந்தான்..அவன் என்னன்ன செஞ்சான்னா..என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளலாம்.
பில்லாவின் நோக்கமோ, அவன் இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்பவனாக ஆவதற்கான பின்புலமோ, சொல்லப்படவே இல்லை.! அதுவும்..ஒரு இலங்கை அகதி, இந்தியாவில் வந்து, இவ்வளவு பெரிய டானாக ஆகிறான் என்று சொல்வது இலங்கைத்தமிழர்களை இன்னும் கவலைக்குரியதாக ஆக்கும் என்றும் இயக்குநர் சிந்திக்கவில்லை. சரி..! அப்படி ஆகிறான் என்றால் அவனுக்கு யார் எதிரி என்பதும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவு போலீஸ்களைக் கொன்ற இந்த அகதிகளை அப்படியே சும்மா விட்டுவிட்டார்களா? பெரிய வில்லனாகக் கருதப்படும் டிமிட்ரியின் ஆயுதக்கிடங்கையும் நாசம் செய்துவிட்டால், எங்கு போய் அவர் ஆயுதம் செய்து டானாவது…? இப்படியெல்லாம் கேள்வியெழாமல் இருந்தால், இரசித்துப் பார்க்கலாம்.
அஜீத் ஒருவர் கிடைத்துவிட்டார். பில்லா என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஸ்டைலிஷான மேக்கிங்கில் பின்னிவிடலாம் என்று விளையாடியிருக்கிறார்கள்.  மற்றபடி திரைக்கதையில் கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம். Super Grey finishing ல் முழுப்படத்தையும் காட்டுவதால், நாம் கதையைப் பற்றி சிந்திக்கமாட்டோம் என்று நினைத்திருப்பார்கள்
. பாவம் அஜீத் இரசிகர்கள்.! இரண்டாம் பாதிக்குப் பின் பெரிய சத்தமே காணவில்லை. அமைதியாகப் படம் பார்த்தார்கள். படம் முடிந்தபின்னரே ஒரு பெரிய ஆரவாரம் வந்தது. ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை, ஹிந்தி சர்தார்..போன்ற படங்களைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்துக்காக ஜார்ஜியா லொக்கேஷன்களை ஒருங்கிணைத்தபோது நானும் அருகில் இருந்தேன். அந்த நாட்டில், இராணுவமே படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டர் தந்து உதவியது. இப்படி ஒரு லொக்கேஷன் இருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்தியது ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாதான்! அந்தப்பகுதிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால் லொக்கேஷன் மட்டுமே கதை இல்லையே?
மொத்தத்தில்…என்னைப் பொறுத்தவரை..
யாரோ பில்லா செய்யும் அத்துனை செயல்களையும், அவன் போக்கிலேயே பார்க்கத் தயார் என்றால்..ஒன்றும் பிரச்னை இல்லை!
இல்லை..எனக்கு கதை சொல்லணும்.. அந்தக்கதையில் ஒரு பிரச்னை இருக்கணும். அதை கதாநாயகன் எப்படி தீர்க்கப்போறானோன்னு தோணனும். அதைத்தீர்க்கும்போது வரும் தடைகளை எப்படி எதிர்கொள்றான்னு இருக்கணும். அப்புறம் வெற்றிகரமா இந்த பிரச்னைலேருந்து அவன் வெளில வந்தான்னு இருக்கணும் என்று திரைக்கதை ரீதியாகச் சிந்தித்தால்…. வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
நான் எப்போதும், எனக்கு நல்லது என்று தோன்றும் படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். தவறாகத் தெரிந்தால், கனியிருப்பக் காய் ஏன் கவர்வானேன் என்று எழுதவே மாட்டேன்…
எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்த படத்தை 650 வார்த்தைகளில் குறை சொல்லக்கூடாதுதான்..! ஆனால், அந்த உழைப்புக்கு நேர்மை என்பது, நம்பி வரும் இரசிகனை திருப்திப்படுத்துவதுதானே? மேலும்.. நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

பில்லா – 68 கோடி இருந்தால் படமெடுக்கலாம். 120 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். J




Comments

  1. காலையில இருந்து இப்போதான் நடுநிலையா படிச்சு இருக்கேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரபு கிருஷ்ணா

      Delete
  2. அஜீத்த புடிக்கும்னா படம் பாக்கலாம் போல, பாத்தூருவோம்.

    ReplyDelete
    Replies
    1. புகை பிடிப்பது உடலுக்குக் கேடு ! என்று லேபிளில் போட்டிருக்கும். ஆனாலும் நம்ம மக்கள் பிடிக்கறதில்லையா?

      நீங்க பாருங்க!!

      Delete
    2. மொக்கை படம் பாஸ்

      Delete
  3. சுரேகாஜி,

    சொதப்பிட்டாங்கன்னு ஒரே வார்த்தையில சொல்ல உங்களுக்கு மனசு வர மாட்டேங்குது :-))

    படத்தோட பட்ஜெட் 68 கோடியா அப்புறம் எப்படி தமிழ் வினியோக உரிமை விலை 24 கோடியே 11லட்சம்னு ஆஸ்கார் ரவி அட்சர சுத்தமா சொல்லுறார்.ஓவர் சீஸ், அதர் ஸ்டெட் அவ்ளோ விலைக்கு போகுமா?

    ஹி..ஹி 20 ரூபா இருந்தா டிவிடி வாங்கலாம் :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்வாலு!

      நல்ல பேக்கிங்! நல்ல கலர்! ஆனா உணவு மட்டும் கொஞ்சம் டேஸ்ட் கம்மின்னு கவலைப்படுவோம்ல அதான்!

      சொதப்பிட்டாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்ல எதுக்கு பதிவு...? எஸ்.எம்.எஸ் போதாது..?

      Delete
  4. இங்கயும் டப் செஞ்சு ஓடுது.

    ReplyDelete
    Replies
    1. ஓடட்டும் ஓடட்டும்.

      ஓட்டட்டும் ஓட்டட்டும்.!

      சந்தோஷம்தான்!

      ஈகா மாதிரி படம் வரலையேன்னு வருத்தம்தான்!

      Delete
  5. // நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.//

    உண்மை உண்மை நல்ல விமர்சனம்

    ReplyDelete
  6. ஹ்ம்ம், $12 மீதி.. விடுங்க

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் சில தியேட்டரில் அதே தொகைதான் செலவாகுதான் த்லைவரே! அதுனாலயே இங்க படங்கள் ஓடுறதில்லை..!!

      Delete
  7. liked this sir
    நான் எப்போதும், எனக்கு நல்லது என்று தோன்றும் படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். தவறாகத் தெரிந்தால், கனியிருப்பக் காய் ஏன் கவர்வானேன் என்று எழுதவே மாட்டேன்…
    எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்த படத்தை 650 வார்த்தைகளில் குறை சொல்லக்கூடாதுதான்..! ஆனால், அந்த உழைப்புக்கு நேர்மை என்பது, நம்பி வரும் இரசிகனை திருப்திப்படுத்துவதுதானே? மேலும்.. நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. என் உண்மை மனநிலை நண்பரே!

      Delete
  8. //எந்த ஒரு திரையுலகப் பின்னணியும் இல்லாமல் முன் இடத்தைப் பிடித்ததுமாகத்தான் இருக்கும்.// பலரும் இதை சொல்கிறீர்கள் ..எனக்கு புரியவில்லை ..என்னமோ அதிசயமா இவர் மட்டும் சுயம்புவா கிளம்பி வந்த மாதிரி ? எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினியெல்லாம் திரையுலக பின்னணி இருந்து தான் வந்தாங்களா என்ன ? (நாடக பின்னணி இருந்துச்சே -ன்னு காமெடி பண்ணாதீங்க) ..அஜீத்தோட போட்டியாளர் விஜய் என்பவர் திரையுலக பின்னணி உள்ளவர் என்பதால் இவரை சொல்கிறார்களோ என்னவோ ? ஆனால் என்னமோ திரையுலக வரலாற்றிலேயே இவரைப்போல தானாக வந்தவர் இல்லை என சொல்லுவது சத்தியமா எனக்கு புரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. அஜீத் வந்த காலகட்டத்தில் வேறு எந்த ஹீரோவும் திரையுலகப் பின்னணியுடன் வந்ததாக நினைவில்லை.. இன்று இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் பரத் தவிர மற்ற எல்லோரும் திரையுலகக் குடும்ப்ம்தான்...அதைத்தான் சொன்னேன். மேலும் இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் விரும்பும் இரண்டுபேரில் ஒருவராக அஜீத் இருப்பதால் அப்படிச் சொன்னேன்...!! :))

      Delete
  9. யார் மனதும் புண்படாத வகையில், அதே நேரத்தில் தாங்கள் சொல்ல நினைப்பதை நல்ல வார்த்தைகளின் மூலம் பிறருக்கு உணர்த்தும் உங்கள் தனித்தன்மையை உங்கள் எழுத்துக்களில் நிறைய கண்டிருக்கிறேன் சுரேகா அவர்களே.. பில்லா 2 படம் இன்று நானும் மலேசியா அரங்கம் ஒன்றில் பார்த்தேன். பெரிய எதிர்பார்ப்புகளோடு போகாத காரணத்தால் பெரிய ஏமாற்றம் ஒன்றும் கிடைக்க வில்லை. உங்கள் விமர்சனம் நடு நிலைமையானது. சரியானதும் கூட. ஆனால் நான் நிறைய தமிழ் படங்களை பார்த்து வருத்தப்பட்டது, வருந்திக்கொண்டு இருப்பது ஒன்று தான் அது ஏன் அனேக படங்களில் எப்பவுமே ஒரு போலீஸ் உயர் அதிகாரியை வில்லனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரமாகவே கதை அமைக்கிறார்கள்? இல்லையேல் ஓர் அமைச்சர் உடன் இருப்பார்... நம் நாட்டில் நல்ல போலீஸ் அதிகாரிகளும் உண்டு, மோசமானவர்களும் உண்டு. நம் நாட்டின் அமைச்சர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் இப்படி மோசமானவர்களாக காட்டியே படம் எடுதுக்கொண்டிருன்தால் நம்மை பற்றி அந்நிய தேசம் எப்படி நினைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஆம்..நீங்கள் சொல்வது முற்றிலும் சரி நண்பரே!

      Delete
    2. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

      Delete
  10. பில்லா அதீத வன்முறை பார்ப்பது இளைய தலைமுறை படத்தில் இல்லை ஓரு குறை...ஏகப்பட்டது இருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! :)

      Delete
  11. anna

    when i heard the songs of billa -2 i thought the film is missing something in songs itself as the theme music itself is same as billa . today your review proces that

    ReplyDelete
    Replies
    1. நான் படம் நல்லா இல்லைன்னு சொல்லலை! நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்லுறேன். :))

      Delete
  12. இந்த சீரிஸ்/சீரியஸ் படத்துக்கு கூலிங் க்ளாஸ் சப்ளை செய்ற ஆளை ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்...

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு ஸ்டைலுக்குத்தான்..!! கதை நல்லா இருந்திருந்தா இந்த ஸ்டைலும் எடுபட்டிருக்கும்..!! என்ன சொல்றது.! :)

      Delete
  13. நடுநிலையான விமர்சனம்...
    பகிர்வுக்கு நன்றி... (த.ம. 2)

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்!

      Delete
  14. billa 3 will be come, while we havent brain ............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!