மய மாயம்
இதோ ஆரம்பித்துவிட்டது.
டிசம்பர் 2012. ! மயன் காலண்டர் பற்றி பல்வேறு ஊடகங்கள் லேசாக பீதியைக்கிளப்ப ஆரம்பித்தன.
ஒரு படம் வந்து , கிளப்பிய பீதியை நன்றாகப் பரவ வைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு தரப்பினர் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
நாம் படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்களின் எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உணர்வுகளை
புரிந்துகொள்ள முடிந்தது.
அப்பாடி! அழியட்டும்..
இவனுங்க செய்யும் அட்டகாசத்துக்கு அதான் சரி!
இவ்வளவு கண்டுபிடிச்சு
என்ன பிரயோசனம் பாருங்க! அழிவைத் தடுக்க ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கலையே?
நான் அழியறதைப்
பத்திக்கூட கவலையில்லை… அந்தத்தேதிக்குப் பிறக்கும் குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு?
எல்லாமே தண்ணீர்
மயமாயிடும் இல்ல?
இருக்குற கொஞ்ச
நாளிலாவது, நான் நினைச்சதை செஞ்சு பாக்கப்போறேன்.
இயற்கை ஏன் அழிக்கணும்.
மனிதன் செய்யும் அநியாயத்துக்கு.. அவனே அவனை அழிச்சுக்குவான்.
எத்தனை பாவம் பண்ணியாச்சு..!!
அதுக்கெல்லாம் பரிகாரம் தேடணும்!
மனித இனம் செஞ்ச
அட்டூழியத்துக்கு…பாவம்.. தப்பே செய்யாத விலங்குகளும் அழியறதை நினைச்சாத்தான் கவலையா
இருக்கு!
தலைவர் சொன்னது
சரியா இருக்கே! ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்’ போல!
அதெல்லாம் சும்மா..!
இன்னும் 4 லட்சம் வருடம் உலகம் இருக்கும்.
இயற்கை எவ்வளவு
நாள்தாங்க பொறுமையா இருக்கும்?
பாவிகள் பள்ளிக்கூடம்
நடத்துவார்கள்ன்னு போட்டிருக்காம். அது இப்ப நடந்துக்கிட்டுத்தானே இருக்கு! அப்ப உலகம்
அழியறது உறுதிதான்.!
மயன் கேலண்டர்ல
உள்ள மாதிரிதான் இன்னிவரைக்கும் நடந்திருக்காமே? அப்ப இதுவும் கன்ஃபர்ம்தான் போல!
மொத்தத்தில், எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையோ,
பயமோ எட்டிப்பார்த்திருக்கிறது. ஒருசில ஐரோப்பிய , தென் அமெரிக்க கிராமங்களில் தீர்ப்பு
நாள் நெருங்கிவிட்டதாக முழுமையாக நம்பி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தாங்கள்
செய்யவிரும்பியதைச் செய்திருக்கிறார்கள். மேலும், தன்னால் வருத்தப்பட்டவர்களிடம் சென்று
மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் பார்க்க விரும்பிய இடங்களைச்
சென்று பார்த்திருக்கிறார்கள். பொதுவாக, அழிவு என்று ஏற்படுவதற்குமுன் தாங்கள் மிகவும்
சுத்தமான, ஆன்மாவுக்கு நேர்மையான ஜீவன்களாக வாழ எண்ணியிருக்கிறார்கள். அப்படியானால்..அதற்கு
முன்னால்?
இந்தக்கேள்விதான்…மயன் கேலண்டர் என்ற நம்பிக்கை
செய்த மாயம். நம் வாழ்வுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே நம் எண்ணங்களில் நற்குணம்
அதிகமாகப் புகுந்துகொள்கிறது. ஆனால், சாதாரணமாக, தீயகுணங்களுக்கு கொஞ்சம் அதிக இடம்
கொடுக்கிறோமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. மரணம் என்ற ஒன்று யாரும் சந்திக்காமலே இருக்கப்போவதில்லை.
’நமக்குச் சாவே
வராது. சாவவே மாட்டோங்கிற நெனப்புலதானே அத்தனை அநியாயமும் பண்ணுறானுங்க!’ என்று நெல்லைக்
கண்ணன் அய்யா சொல்லுவார்.
உண்மைதான்…!! நாம்
ஏதோவொரு காரணத்துக்காக சக உறவுகள், நண்பர்கள், ஊழியர்கள் , முகம் தெரியாதவர்கள் என்று
எல்லோரிடமும் ஏதோவொரு நேரத்தில் சிக்கலை வரவழைத்துக்கொள்கிறோம். அது யாருடைய தவறாக
இருந்தாலும் சரி..!! அதனை மறப்பதும் இல்லை..மன்னிப்பதும் இல்லை. இரண்டும் இருந்துவிட்டால்…
சாதாரண மனிதர்கள் , அசாதாரணர்களாக மாறும் அதிசயம் நிகழ்ந்துவிடும். ஹஜ் பயணத்தை மிகவும்
அசாதாரண நிகழ்வாக நினைப்பதாலும்.. அது கடைசி வாய்ப்பாக நினைப்பதாலும்தான், ஹஜ் செல்வதற்குமுன்,
அனைவரிடமும் அன்பையும், மன்னிப்பையும் பரிமாறச் சொல்லியிருக்கிறது இஸ்லாம். அதனை அனைவருமே பின்பற்றினால், பிரச்னைகளுக்கு வாய்ப்பே
இல்லை. ஆனால், நமக்கு வாழ்வின் நீளத்தின்மேல் உள்ள நம்பிக்கைதான், அனைத்துத் தவறுகளையும்
செய்ய வைக்கிறது.
அதேபோல், சாதிக்கவேண்டும்
என்று எண்ணம் உள்ளவர்கள்.. அடுத்த ஆண்டு அதைச் செய்யவேண்டும்.. இதைச்செய்யவேண்டும்
என்று எண்ணிக்கொண்டு comfort zone எனப்படும் சவுகரிய வட்டத்துக்குள்ளிருந்து, வெளியிலேயே
வராமல் இருந்துவிட்டு, சாதிக்கும் வாய்ப்பையே இழந்துவிட்டுப் போகிறார்கள். அடுத்த பிறவியில்
சாதித்துக்கொள்ளலாம் என்று நினைக்கமுடியாது என்று தெரிந்தும்.. நீண்ட நாட்கள் நாம்
இருப்போம் என்ற நம்பிக்கைதான் சாதனைகளையும் தள்ளிப்போட வைக்கிறது.
இன்று அழியாவிட்டாலும்,
என்றாவது ஒருநாள் உலகம் அழியப்போகிறது என்ற எண்ணம் ஒருபுறம் இருக்கட்டும்.! நாம் வாழும்வரைதான்
நமக்கு இந்த பூமி என்ற கோளத்தின் இருப்பு பற்றிய ஆர்வம் இருக்கும் என்ற உண்மையை நாம்
முதலில் உணரவேண்டும். நான் பிறந்தேன். உலகம் என்ற ஒன்றைப்பற்றிய அறிவு வந்தது. நான்
இறந்தபின் இந்த உலகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன? ஆக, என் வாழ்வுதான் என் உலகம்..!!
அதனை நான் எப்படி அமைத்துக்கொள்ளப்போகிறேன்.? எப்படி அழித்துக்கொள்ளப்போகிறேன் என்று
எண்ணினால் போதும்!
என்னிடம் ஒரு நண்பர் வெகு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
மனித இனம்தாங்க இந்த உலக அழிவுக்குக்காரணம்.. இயற்கையை என்னமா நாசம் பண்ணிட்டானுங்க!
இந்த ப்ளாஸ்டிக் வேண்டாம்னு எத்தனை வருஷமா கத்திக்கிட்டிருக்கோம். விடுறானுங்களா? மயன்
கேலண்டராவது ஒண்ணாவது..!! மனுசந்தான் காரணம்.. பிளாஸ்டிக்தான் காரணம்..!! நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது.. அவர் கையில்
இருந்தது ஒரு டிஸ்போஸபிள் டீ கப் !
இந்த உலகமே இப்படித்தான் பாஸ்.. அது உருவாகும்..அழிச்சுக்கும்..!!
அதுக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேணுமா இல்லையா?
கடவுள் என்பவர் கணிப்பொறி விற்பன்னராக இருந்தால்… இப்படித்தான் சிந்தித்திருப்பார்..!!
'' சிஸ்டம் ரொம்ப ஹேங் ஆகுது..டிசம்பர் 21ம் தேதி ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் அடிக்கணும்.. "
மரண பயத்தை கூட நகைச்சுவையாக சுவைக்க வேண்டுமா? சுரேகா பக்கம் வாருங்கள் ...........!அருமை ,உண்மை , பகிர்விற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிங்க!
Deleteஅச்சம் என்பது உயிர்களின் உன்னதக் குணம், அதுவன்றி உயிர்த்திருத்தல், பிழைத்திருத்தல் சாத்தியப்படாது. ஆனால் பனியுகம் முடிந்த பின் ஏற்பட்ட வேளாண் சமூகமும், ஒன்றுக்கூடிய்ள் வாழ்க்கை முறையும், காப்பாற்ற கடவுள் உள்ளார் என்ற சிந்தனை வடிவமும், உச்சமாக அரசாங்கம், அறிவியல் போன்றவை அவ் அச்சத்தை மறக்கடிக்க செய்துவிட்டது. அச்சமற்ற நிலையிலேயே நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை துண்டிக்கின்றோம். திசம்பர் மாதம் உலகு அழியப் போவதில்லை எனினும், அதன் அச்ச தாக்கம் நீங்கள் சொன்னது போல, நம்மை நாம் மறுபரீசிலணை செய்யும் என நம்புவோமாக. நன்றிகள்
ReplyDeleteநன்றாகச் சொன்னீர்கள்.. நன்றி இக்பால் செல்வன்..!!
Delete//சிஸ்டம் ரொம்ப ஹேங் ஆகுது..டிசம்பர் 21ம் தேதி ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் அடிக்கணும்..//
ReplyDeleteநச்..!!! என்னை மிகவும் ரசிக்க வைத்த வரி!!!
மிக்க நன்றி..!!
Delete