சென்னைப் பிழை!


 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !!
அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை!





சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... !!  சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.

தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.

எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.
 
ஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.
ஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.


இங்கு?

இதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை!

சென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்!  சென்னைக்காரர்கள் என்று இல்லை!! 
சந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது? என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்?
 
இந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான்.  சென்னைவாசியாக இருக்காது!

டிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.!

இந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... !! என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்!
தெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் !

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் !! 92% பேர் சென்னைவாசிகள்தான் !! வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் !!  இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று  உணர்ந்துகொள்வோம்.

ஏரியாக இருந்தால் என்ன? அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம். 

நாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.

இங்கு புலம்புபவர்கள்தான் அதிகம்! ஆனால்,  புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை!

இந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே?.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.

சென்னை ஒரு அற்புதமான நகரம்..!! அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.

வாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.

இனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.

இந்த ஊரை நேசிப்போம்.  சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்!


பின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே ? நீ என்ன செஞ்ச ? என்று நினைப்பவர்களுக்காக ....

இதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு,  நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
நன்றி !

Comments

  1. நியாயமான ஆதங்கம்.
    சென்னையில் வசிக்கிறோம் என்று பெருமைக்குச் சொல்லிக்கொள்வதோடு சரி.

    ReplyDelete
  2. சாட்டையால் அடித்தது போல ஒரு உணர்வு இந்த பதிவை படித்ததும் எழுகிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வந்த பல பதிவுகளை படித்டுவிட்டேன் ஆனால் என் மனதில் நினைத்ததை மிக அழகாக உரக்க சொன்ன உங்கள் முறை மிகவும் பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் நாமும் களம் இறங்கி நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. // அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதி // அப்பட்டமான உண்மை...

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி DD !

      Delete
  4. நல்லா சொன்னீங்க! உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்!

    ReplyDelete
  5. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்! உங்களைப் போன்றோர் சென்னையை நிறுத்துவீர்கள்.
    //எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய....! இவ்வரிகளைப் படித்த போது 30 வருடங்களுக்கு முன் என் கிராமத்தில் மார்கழி வெள்ளத்தில் நின்றதை உணர்ந்தேன்.

    ReplyDelete
  6. Harrah's Cherokee Casino & Hotel Map - Mapyro
    Harrah's Cherokee Casino & Hotel 당진 출장마사지 - Use this simple 안성 출장마사지 form to find hotels, 계룡 출장안마 motels, and other lodging near Harrah's Cherokee 파주 출장샵 Casino & Hotel in Cherokee, 경기도 출장샵

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!