எனக்கு ஏன் இந்த தண்டனை?
சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.
அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா?
அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு!
சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.
நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ?
அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு!
அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது!
சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத!
ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா?
கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா!
இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ!
அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல!
ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற?
இல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு!
அதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.!
சரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா! என்னிக்கு சண்டைன்னு சொல்லு! நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.
கவலப்படாதடீ..எல்லாம் நல்லபடியா நடக்கும்.
வூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு.! ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ?
ராத்திரி வூட்டுக்கு வந்தேன்.
மத்தாயி ! ஒரு விசயம் தெரியுமா?
என்னய்யா!
இன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக!
சரி..அதுக்கென்ன?
அவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.
ம்
இன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.
சரி.
அவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது!
என்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா?
இல்லடீ! அத வுட நல்ல விசயம்!
அந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். !
தனியாவா?
ஆமாங்குறேன்.
மவராசன்.நல்லா இருக்கணும்.! எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.
களுத..நீ ஏன் கவலப்படுற? அதான் நல்லது நடக்கப்போவுதுல்ல!
ஆமா..எப்புடி கொல்லப்போறாராம்.?
அதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்! எனக்கு எப்புடி தெரியும்?
சிப்பாயா? யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த! மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க? பெருசா பீத்திக்கிற?
அது கெடக்கு! நீ ஏன் ரொம்ப கவலைப்படுற!
சொல்லுவய்யா சொல்லுவ..! உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.
சரிடா கண்ணு! நான் என்ன பண்றது சொல்லு! இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.!
அடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு! ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு! அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.
வூட்டுக்கு சந்தோசமா வந்தேன்.
அடியே..! இப்ப பாத்தியா? உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு!
எல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை! உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு.! நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல!
ஆமாங்குறேன்.
அடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு.! என்னடா இது ! இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா?
அவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா!
கவலப்படாதடீ ! சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.
அது எப்புடி பேசுவாக! எனக்கு ராமரோட நாயமே புரியல! அவரு மனுசருதானே.! ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா? என்ன கெரகம் இது?
அவுங்கள்லாம் அரக்கருங்களாமுல்ல! அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக? யோவ்! ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா!
ஏண்டி இப்புடி பொலம்புற? நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற?
அதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல! அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க!
கவலப்படாதடீ செல்லம்.! எனக்கும் ஓன் நியாயம் புரியுது! இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.
எனக்கென்னமோ பயமா இருக்குய்யா!
அன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ! எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க! கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு! போனவுடனேயே சண்டையப்போடுங்கன்னுட்டாங்க!
எதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு! நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல! என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு ! எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது! தூரத்துல ராமரு
ராவணனைப்பாத்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரு..! உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' ! கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ..! என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி?
என்ன ராமரே.! நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக.! நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,
நான் என்ன தப்பு செஞ்சேன்?
டிஸ்கி : நட்சத்திர வாரத்தில் மினிமம் ஒருஅட்வைஸ் பதிவு, ஒரு மீள்பதிவு போடணுமாம்.! இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க! :)
சரி தலைவரே,
ReplyDeleteவாவ்... சார்.. நகைச்சுவை நடையில் அற்புதமான கிரியேட்டிவிட்டி.... இந்த கோணத்தில் எவரும் கற்பனை பண்ணக் கூட முடியுமா என்பது சந்தேகமே.. மைன்ட் ப்ளோயிங்...
ReplyDeleteதலைவரே காமெடி ராமாயணம் இப்பதான் படிக்கிறேன் அருமை.. அருமை
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்..!
ReplyDeleteநீங்கதான் கரெக்டா வரீங்க!
மிக்க நன்றி!
அன்புடன் மணிகண்டன்!
ReplyDeleteநான் இதில் நகைச்சுவையை முன்னிருத்தவில்லை! அந்த வானரங்களின் வலி மட்டும்தான்! :)
ரோமியோ...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!
சார் மிக அருமை. இன்று வரைக்கும் இப்படித்தான் தொடர்கிறது.
ReplyDeleteஅவன் வீட்டு பிரச்னை தீக்கிறதுக்கு
ReplyDeleteஅடுத்தவனை பழிகடா ஆக்குறது
வித்தியாசமான கோணத்தில் ராமாயணம்
நல்ல satire . சமகால தலைவர்களுடனும் அவர்கள் சுயநலம் சார்ந்த செயல்களுடனும், அதற்கு பலியாகும் தொண்டர்களுடனும் இணைத்துப்பார்க்கமுடிகிறது. மிக அருமையான எழுத்து நடை. இன்று போய் நாளை வருகிறேன்.
ReplyDeleteவாங்க அக்பர்..
ReplyDeleteஆம்..எல்லாச்சூழலிலும் மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ கீழிடங்கள் வாழ்விழக்கின்றன!
நன்றிங்க!
வாங்க ஜோதி!
ReplyDeleteமிக்க நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்!
வாங்க ஜெயமார்த்தாண்டன்..
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
கண்டிப்பா வாங்க!
//அவன் வீட்டு பிரச்னை தீக்கிறதுக்கு
ReplyDeleteஅடுத்தவனை பழிகடா ஆக்குறது
வித்தியாசமான கோணத்தில் ராமாயணம்//
repeattu
கலக்கல் ராமாயணம் சுரேகா.
ReplyDeleteஅட்டகாசம். எனக்கும் இதில் கொஞ்சம் கூட நகைச்சுவை தெரியவில்லை. அவ்வளவு தீவிரமான விஷயத்தை எளிய வானரங்கள் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். Absolutely fantastic. நீங்கள் நிறைய எழுதணும் சுரேகா.
ReplyDeleteஅனுஜன்யா
அதானே படிச்சமாதிரியே இருக்கேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. :)
ReplyDeleteநட்சத்திரமே...!
ReplyDeleteஇதை கிராமாயணம்னு சொல்லலாமோ..?
அதானே படிச்சமாதிரியே இருக்கேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. :)
ReplyDeleteவாங்க பாபு!
ReplyDeleteமிக்க நன்றி
வாங்க தராசு சார்!
ReplyDeleteமிக்க நன்றி!
Dear Suresh
ReplyDeleteEvery time while reading it seems to be new in style of writing, and way of telling.
One more news : I am transferred to Surat (Gujarat)
With love
S. Bhaskar